Posts

Showing posts from May, 2018

யாருமற்ற பாழ்வெளியில் - கோபி கிருஷ்ணன் & கோணங்கி

Image
புயல் - கோபி கிருஷ்ணன் நமக்குத் தெரிந்த சிறுகதை எனும் பாணியிலிருந்து சற்றே விலகிய கதை . முடிவுக்கு மிக அருகில் தொடங்கும் கதை ஒரு உச்சகட்டத்தின் வெடிப்பில் முடியும் எனும் யுத்தியை விடுத்து எழுதப்பட்ட கதை . இதில் திட்டமிடல் இல்லை . கோபி கிருஷ்ணனின் கதை இயல்பே இதுதான் . ஆதவனும் கோபியும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் . மனித மனங்களின் விசித்திரங்களையும் , மனித உறவுகளால் உண்டாகும் விநோத ரச மாற்றங்களையும் கதைகளாக்கியவர்கள் . ஆதவனின் ' இரு நாற்காளிகள் ' கதை ஒரு உதாரணம் . எவ்விதமான பதில்களையும் சென்றடையாமல் நவீன வாழ்வின் சிக்கல்களை காட்டக்கூடிய கலைஞர் கோபி . நவீனத்துவ மனிதனின் பாசாங்குகளை வெளிப்படையாக்கி அதற்கு மரபு சார்ந்த பதில்களைக் கொடுக்காதவர் . மனிதன் தனிப்பட்ட மிருகம் . அவன் இந்த சமூகத்தில் வாழ்வது வழியே தனது இயல்பையும் , தன்னுடன் வாழும் மனிதர்களின் இயல்பையும் முடிவு செய்கிறான் . அவனது குழப்பங்களுக்கும் , வாழ்வியல் போராட்டங்களுக்கும் மரபிலும் மண்ணிலும் பதில் இல்லை

கம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்

Image
கம்பராமாயணம், வ.வே.சு ஐயர் எழுதிய கம்பராமாயண ரசனை நூல் மற்றும் தொல்பாவைக்கூத்தில் ராமாயணக்கதைகள் என அடுத்து சில கட்டுரைகள் இங்கு எழுத எண்ணம். முதலாவதாக கம்பனின் காலம் குறித்து வ.வே.சு ஐயர் எழுதிய கட்டுரை இங்கே. * கம்பனின் சரித்திரமும் காலமும் -  வ . வே . சு   ஐயர் (வ . வே . சு   ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் - பெ . சு . மணி  அவர்கள் எழுதிய நூலிலிருந்து) கம்பனுடைய சரித்திரத்தைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் நம் காலம்   வரையில் எட்டியிருக்கிற ஒன்றோடொன்று முரணுகிற பல கர்ண பரம்பரைகளுக்கிடையில் இன்ன இன்ன அம்சங்களை நிச்சந்தேகமாக நம்பலாம் என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரியம் . இருப்பினும் , அந்த மகா கவியின் சரித்திரத்தில் உண்மையாக இருக்கலாம் என்று கொள்ளக்கூடிய அம்சங்கள் பின்வருபவைதாம் என்று ஒருவாறு நிச்சயித்து எழுதுகிறோம் . கம்பன் ஜாதியில் உவச்சசன் , அதாவது காளி கோயில் பூசாரி . அவன் தகப்பன் பெயர் ஆதித்தன் . அவன் பிறந்தது திருவழுந்தூர் . அக்காலத்தில் அவன் திருவெண்ணெய் நல்லூரில் சடையன் எனும் ஒரு   வள்ள

வரலாற்றுப் புனைவு எனும் அங்குசம்

Image
வரலாற்றுக்கும் வரலாற்றுப் புனைவுக்கும் குறைந்தபட்ச வித்தியாசங்கள் எத்தனை இருக்கலாம்? சில வாரங்களுக்கு முன் எங்கள் நட்பு வட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு விவாதம் எழுந்தது. இந்த கேள்வியைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதும் முதலில் தோன்றியது இது ஒரு இலக்கியம் சார்ந்த கேள்வி என்பதிலிருந்து எப்போதோ விலகிவிட்டது என்பதுதான். கடந்த சில பத்தாண்டுகளாகவே இலக்கியத்தைத் தாண்டி பண்பாட்டு ஆய்வுகளிலும், கலாச்சார விவாதங்களிலும் வரலாற்று ஆய்வு நீக்கமற நிறைந்துவிட்டது. ராமர் உண்மையில் சேது பாலத்தைக் கட்டினாரா, தாஜ் மஹாலுக்குக் கீழே இருக்கும் லிங்கம், அயோத்தியாவில் ராமர் கோவில் அடிக்கல்லின் நிறம் என்ன என சகட்டுமேனிக்கு பண்பாட்டு ஆவணங்களைக் கொண்டு நிகழ்கால பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைப் பலரும் எடுத்து வருகிறார்கள். கடந்த காலத்தை ஏக்கத்துடன் பார்த்து பொற்காலத்தை மீட்டு வரும் விழைவு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கடந்த கால விழுமியங்களை எடுத்து வந்து அப்படியே இன்றைய சமூகத்தின் மீது போட்டு மகிழ்வது மற்றொரு பக்கம். ஒன்று மேலிருந்து கீழே விழுவதற்கும் மற்றொன்று அதலபாதாளத்தை நோக்கி மண்டைச சிதற விழுவ

முயலகனின் புன்சிரிப்பு - புதுமைப்பித்தனின் அன்று இரவு சிறுகதையை முன்வைத்து - 2

Image
பகுதி 1 அன்று இரவு கதையின் தரிசனம் எப்படிப்பட்டது? பிரமிள் அதை ஏன் சநாதனிகளுக்குக் களிப்பூட்டும் படைப்பு என்கிறார்? சமய மைய தரிசனமான பக்தியும்,   வீடு பேறும் இப்புராணங்கள் சொல்லும் அடிப்படை தத்துவம். அன்பு அருளாகிறது, அருள் தரும் கொடை பக்தி. பக்தி வீடுபேறுக்கான விடுதலை மார்க்கம். இப்படிப்பட்ட ஒரு கதையை புதுமைப்பித்தன் நவீன வாசிப்புக்கு உட்படுத்துகிறார். இங்கு காணும் எல்லா உள்ளங்களுமே தர்மத்தின் மீது தீராத மோகம் கொண்டவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தான் சொன்ன பொய்யை எண்ணி வெதும்பிப்போகிற வாதவூரர் மானுட சோகத்தை தன்னுள் கொள்பவர். அரசன் சொல்கிறான் - "நான் ராஜ்ஜியத்தை சுமக்கிறவன்" - அரச நீதியைத் தவிர எதற்கும் தலைவணங்காத பாண்டியன். அதற்கு பதில் சொல்லும் வாதவூரர் - "அரசே, நான் உலகின் துயரத்தை, வேதனையைச் சுமக்கிறவன்", என்கிறார். பொய்யான உலகை விட்டு விடுதலைப்பெறமுடியாமல் துன்பத்திலே உழல்பவனின் தூதுவனாகப் பேசுகிறார். அரச மந்திரியான அவருக்கு வீடு பேறு என்பது பெயரளவில் மட்டும் தெரியக்கூடியது. தெய்வ அம்சத்தோடான அருளைப் பெற்றவராக ஆகும்வரை. பிரபஞ்சமும் அண்டபகிரண்டம

விடுதலையும் பந்தனமும் - புதுமைப்பித்தனின் - அன்று இரவு

Image
பிரமிள் எழுதிய 'கலைஞனும் சநாதனியும்' விமர்சனக்கட்டுரையில் வந்த புதுமைப்பித்தன் எழுதிய 'அன்று இரவு' கதை பற்றிய ஒருவரியைத் தாண்டி மேலே படிக்க முடியவில்லை. அந்த வரி இதுதான் - 'பக்த குசேலாவின் அசட்டுப்பழமையைச் சாடும் புதுமைப்பித்தனும் ஹிந்துவின் அடிக்குரலைக் கெளரவித்த அன்று இரவு ஆசிரியனும் ஒருவனே தான் என்பதை உணர்ந்துகொண்டு, இன்று கதை எழுதுகிறவன் பேனா தூக்க வேண்டும்' என்ன ஒரு சாட்டையடி வாக்கியம்! இக்காலத்தில் ஒரு கதையைப் படித்ததும் அதில் தென்படும் அரசியலுக்குப் பலவித சாயங்களைப் பூசி கனம் கூட்டிவிடுவதை முன்வந்து சாடியிருக்கும் ஒரு வரி இது. சநாதனத்தின் இருவித எல்லைகளையும் கணக்கில் கொண்டு , ஒன்றில் ஒளிந்திருக்கும் திரையைக் கிழித்து, வீழ்ந்த இடத்திலிருந்து மேலெழ வேண்டியத் தேவையைக் காட்டும் விமர்சன வரி இது.   'அன்று இரவு' - புதுமைப்பித்தனின் மிகச் சிறப்பான கதைகளில் ஒன்று. ஏற்கனவே புராணங்களில் அறிந்த பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் கதையும், நரியைப் பரியாக்கி மாணிக்கவாசகரின் பக்தியை உலகுக்குத் தெரிவித்த கதையும் நவீன புனைவாக எழுதப்பட்டிருக்கு. தெரிந்த க

கிரேக்கத் தத்துவக் கொழுவினால் விஞ்ஞான மெய்த்தேடல்

Image
Carlo Rovelli எனும் பிரபலமான பெளதிக விஞ்ஞானி எழுதிய புத்தகமான Reality is not what it Seems (The Journey to Quantum Gravity) புத்தகத்தின் சில சுவாரஸ்யமானப் பகுதிகளை இந்தக் கட்டுரைத் தொடரில் பார்க்கலாம். கிரேக்க தத்துவத்தின் கேள்விகளுக்கும், இன்றைய விஞ்ஞானத்தின் ஆய்வு முடிவுகளுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய புத்தகம் இது. * இந்த புத்தகம் இருபத்து ஆறு   நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிலேட்டஸ் (Miletus) எனும்  கிரேக்க  நகரத்தில் தொடங்குகிறது. குவாண்டம் ஈர்ப்புவிசை பற்றிய ஒரு புத்தகத்தை ஏன் ஆதி கால நிகழ்வுகளையும் ஆட்களையும் கொண்டு தொடங்க வேண்டும்? வெளியின் பொட்டலத்தைப் (குவாண்டா) பற்றித் தெரிந்துகொள்வதற்காகப் படிக்கும் வாசகர்கள் இதனால் சலிப்படையக் கூடாது. எந்த ஒரு புது சிந்தனையையும் அதன் மூலத்திலிருந்து தொடங்க வேண்டும். மேலும் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான புது சிந்தனைகள் ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டன. அவை கடந்து வந்த பாதையை சுருக்கமாக அறியும்போது சிந்தனைகள் தெளிவடையும். புது சிந்தனைகளின் தொடர்ச்சிக்கும் இயல்பாக அவை வித்திடும். இதுமட்டுமல்