வரலாற்றுப் புனைவு எனும் அங்குசம்வரலாற்றுக்கும் வரலாற்றுப் புனைவுக்கும் குறைந்தபட்ச வித்தியாசங்கள் எத்தனை இருக்கலாம்? சில வாரங்களுக்கு முன் எங்கள் நட்பு வட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு விவாதம் எழுந்தது. இந்த கேள்வியைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதும் முதலில் தோன்றியது இது ஒரு இலக்கியம் சார்ந்த கேள்வி என்பதிலிருந்து எப்போதோ விலகிவிட்டது என்பதுதான். கடந்த சில பத்தாண்டுகளாகவே இலக்கியத்தைத் தாண்டி பண்பாட்டு ஆய்வுகளிலும், கலாச்சார விவாதங்களிலும் வரலாற்று ஆய்வு நீக்கமற நிறைந்துவிட்டது. ராமர் உண்மையில் சேது பாலத்தைக் கட்டினாரா, தாஜ் மஹாலுக்குக் கீழே இருக்கும் லிங்கம், அயோத்தியாவில் ராமர் கோவில் அடிக்கல்லின் நிறம் என்ன என சகட்டுமேனிக்கு பண்பாட்டு ஆவணங்களைக் கொண்டு நிகழ்கால பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைப் பலரும் எடுத்து வருகிறார்கள். கடந்த காலத்தை ஏக்கத்துடன் பார்த்து பொற்காலத்தை மீட்டு வரும் விழைவு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கடந்த கால விழுமியங்களை எடுத்து வந்து அப்படியே இன்றைய சமூகத்தின் மீது போட்டு மகிழ்வது மற்றொரு பக்கம். ஒன்று மேலிருந்து கீழே விழுவதற்கும் மற்றொன்று அதலபாதாளத்தை நோக்கி மண்டைச சிதற விழுவதற்குமான வேறுபாடு மட்டுமே.

“ராமாயணமும் மஹாபாரதமும் இதிகாசம் என்பதைத் தாண்டி நம் நாட்டின் வரலாற்றைப் பற்றிப் பேசிய ஆதி காவியங்கள்”, எனத் தொடங்காத வரலாற்று ஆய்வுகளைக் கைக்குள் அடக்கிவிடலாம். நிகழ்காவியத்தை பதிவது இதிகாசம். அதைப்  பின் தொடர்ந்து நடந்து முடிந்த கதையை மீட்டுப்பார்க்கும் வடிவில் காவியங்கள் இயற்றப்பட்டுவிட்டன. அதே சமயத்தில் இவற்றுக்கு நடுவே நாட்டார் கதைகளாக இக்காவியங்கள் இந்தியா முழுவதும் பரவிவிட்டன. வில்லுப்பாட்டு, தோல்பாவைகூத்து, தெருக்கூத்து, பக்திபாடல்கள் எனும் நீண்ட சங்கிலியில் இன்று வரைபட நாவல்களும், அறிவியல் புனைவுகளும் எழுதப்பட்டுவிட்டன. காவியங்களும், இதிகாச புராணங்களும் உண்மையைத் தாங்கிச்செல்லும் இலக்கிய ஆக்கங்களா எனும் தேடலும் பொருளும் மழுங்கி வருவதாகத் தோன்றுகிறது. குறிப்பாக, இலக்கிய விசாரத்துக்கு இப்படிப்பட்ட விவாதங்கள் எதுவும் உதவாது. இலக்கியத்துக்கான உண்மைகள் ‘அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்’ வகையானவை. 

நமது காவியங்கள் முழுமுதற் உண்மையைக் கொண்டவை என அறுதியிட்டுப்பேசுவது பாண்டோரா பெட்டியைத் திறப்பது போன்ற காரியமாகும். வால்மீகி காட்டிய ராமன் வேறு, கம்பனின் ராமன் வேறு என பாத்திரங்களின் அளவீடுகளை ஒப்பு நோக்கும் ஆய்வுகள் ரசனை விமர்சனத்துக்கு உதவுமே தவிர, அவற்றைக் கொண்டு அக்காலகட்டத்தின் சமூக உண்மைகளைப் புட்டிலில் அடைக்கமுடியாது. அப்படியே அடைப்பது ஒரு ஆய்வுக்கான கருவியாக இருக்கலாமே ஒழிய நிதர்சனமான உண்மையைக் கைப்பற்றியதாக ஆகாது. அப்போது வரலாற்றை வடிகட்டிக்காட்டும் வடிவமாக வரலாற்றுப்புனைவைப் பார்க்க முடியுமா?

நெடிய நதி கிளை பிரிந்து செல்லும்தோறும் தன்னிலிருந்து கொடுத்துச் செல்லும் என்பதைப் போல நாட்டார் வழக்கிலும், பிற இலக்கியங்களிலும் எஞ்சி நிற்கும் புராணங்கள் மூலத்தை ஆதாரமாகக் கொண்டவை. வண்டலை வாரியெடுத்து தனி நதியாக எழும்பி நிற்கும்போது தனக்கென ஒரு அடையாளத்தைக் கொள்கிறது போலத்தான் புராணக்கதைகளும். மூலத்தின் எதிரொலி காலத்தைக் கடந்து அவற்றில் நிற்கும் என்பதால் மாற்றமற்ற உண்மைகள் ஆகாது.

வரலாற்றுப் புனைவு ஆசிரியர்கள் முக்காலமுணர்ந்து காலத்தை முன்னும் பின்னுமாக அலசிப் புணர்ப்பும் கதைகளில் தன்னிச்சையான தேர்வு அமைந்துவிடுகிறது. தனியே ஒரு உயிர் பெற்று பேருரு கொள்ளக்கூடிய கிளை நதி போல. வரலாற்றாசிரியர்கள் இந்த இடைவெளிகளைப் பிற ஆய்வுகளிலிருந்து நிரப்பப்பார்க்கின்றனர். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் ஆய்வு முடிவுகளை நிர்ணயம் செய்வதுண்டு. சோழர் காலச் செழிப்பின் அடையாளமாகக் கம்பனின் இராமாவதாரம் அமைந்திருப்பதை ஓர் எல்லை வரை உண்மையாகக் கொள்ள முடியும் என சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு முன்னோட்டமாக நாம் கம்பன் காலத்தை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவரது படைப்பு மொழி நமக்குப் பயன்படும். ஒரு மொழி ஆய்வாளன் கம்பன் சொற்கட்டை ஆராய்ந்து வேதங்கள், பிரபந்தங்கள், சிலம்பு போன்ற இலக்கியங்களின் தாக்கத்தை அறிந்துகொள்ள முடியும். கம்பனே விட்டுச்சென்ற சில துப்புகளும் உண்டு. சடையப்ப வள்ளலும், சில அரசர்கள் பெயரும் அவற்றில் அடக்கம். 

காவியங்களின் குறியீட்டு விளக்கங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் திட்டவட்டமான அர்த்தங்களை நாம் சென்று சேர முடியும். உதாரணத்துக்கு, குகனோடு ஐவரானோம் எனும் கம்பராமாயண பிரயோகத்தை எடுத்துக்கொள்ளலாம். குகைப்படலம் ராமாயணக் கதையில் இன்றியமையாதப் பகுதியல்ல இது. வேத சிந்தனையின் பரிணாம வளர்ச்சியாக நாம் ராமாயணக்கதையைப் பார்க்க முடியும். இந்தியாவை ஆண்ட ரகுகுல அரசர்களில் காலால் நிலத்தை அளந்து ஒவ்வொரு பகுதிக்கும் முதலில் சென்ற அரசர் ராமர். தொல்குடிகளாக இருந்த இந்திய நிலத்தில் ராமரின் பெயர் சென்ற அளவுக்கு வேறொரு அரசனைப் பிறர் அறியவில்லை. கடையனின் கடையனான குகனை பக்குவமாக அரவணைத்த அருளாளரான ராமன் பண்பாட்டில் ஒரு பெரும் நிகழ்வுக்கு அடிக்கோலியிருந்தான். அவனை முந்தி அவன் புகழ் குலங்களைக் கடந்து சென்றிருந்ததையும் குகனின் கதை காட்டுகிறது. ஒழுக்க நெறிகளில் தவறாது வாழ்ந்தவன் தாழ்ந்த குலமகனான குகனை நெஞ்சோடு சேர்த்தணைக்கும் கட்டம் நெகிழ்வானது. ராவண வதத்தின் கதை முடிவை அடைவதற்கு எவ்விதமான செயற்காரணியாக இந்த நிகழ்வு இருப்பதில்லை. கலாச்சார இணைப்பின் ஒரு முக்கியமான பகுதியாக இருப்பதோடு, பிரபஞ்ச அருளின் தகைமையைக் காட்டும் படலமாகவும் அமைந்திருக்கிறது. இது குறியீடு வழியாகப் பல குடிகளை ஆயுதமின்றி இணைக்கும் வழிமுறை இருந்த காலத்தை நமக்குக் காட்டுகிறது. சகமனிதர்களைக் குலம் பாராது இணைக்கும் குணம் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று சேர்ந்த முக்கியமான செய்தி. 

ராமன் நகர் நீங்க நேர்ந்த கதையைக் கேட்டு குகன் இரு கண் நீர் அருவி சோர நின்ற பாடல் - 

'திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி' என்ன,
பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி,
இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், 'என்னே!
பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்' என்னா.

Comments

Popular posts from this blog

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

கரைகாணமுடியா காமம்

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?