போர் எனும் பெருந்தீனிக்காரன் - ததீசி முனி

போர்க் கருவிகள் இருந்தாலே போர் செய்யும் உணர்வு வந்துவிடும். அக்காலம் முதலே போரைத் தவிர்ப்பதற்கு ஆலோசனை சபைகளும், சூழ்ச்சி விளைவிக்கும் ஒற்றனின் குறிப்புகளும் பயன்பட்டு வந்தன. உடனடி போரைத் தவிர்த்து சூழ்ச்சிக்குள் இறங்கி உயிரிழைப்பைத் தவிர்க்க நினைக்கும் திட்டங்களையும் நாம் கம்பராமாயணத்தில் காண்கிறோம். ராமன் மட்டுமல்லாது கொடிய அரக்க ராஜன் எனக் கூறப்படும் ராவணன் கூட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியிருப்பதைக் கம்பர் பாடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக வெளிப்படையாகத் தெரியும் வடிவில் மட்டுமே போர்க்கருவிகள் எப்போதும் வருவதில்லை. நல்லுருவமும் தீயுருவமும் கொண்டு மாயமாக அவை வருவதை நாம் புராணங்களிலும் காப்பியங்களிலும் காண்கிறோம். பூதனை, சுரசை, அங்காரதாரை, கூனி, சகுனி என போர் தெய்வம் தம் கருவிகளை வெளிப்படையாகத் தெரிய வலம் வருவதில்லை. பலருக்கும் காமமும், குரோதமும், மோகமும் மாயமாகத் தங்கள் சுய சிந்தனையை மறைக்கும். சீதையின் அழகு மீதான ஆசையின் உருவில் ராமாயணத்திலும், தருமனின் சூதாட்ட வெறியின் மாயத் தோற்றத்தில் மகாபாரதத்திலும் போர் தனது ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தது. சிறிய தோட்டா கடைசி மாவ...