கரைகாணமுடியா காமம்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் யாமம் - நள்ளிரவு புனல் - வெள்ளம் கரைகாணமுடியா காமம். அது சாதாரண விசை அல்ல. கடும் புனல். கூடலிலும் கூடா முழுமை. அப்படி ஒரு பயணம் எவருக்கேனும் முடிவுக்கு வந்திருக்கிறதா? காமத்தினால் மெய்ம்மை எய்தியவர் உண்டோ? நம் கட்டுப்பாட்டை மீறிய ஒன்றாக இருப்பதோடு நம்மை மூழ்கிவிடவும் செய்யும் வேகம் கொண்டது. இங்கு இந்த குறள் கவிதையாவது யானே உளேன் எனும் வரியில்தான். காமம் என்பதற்கு இயல்பான அர்த்தம் இணைவது. இரு உடல்களின் இணைவு என ஒற்றைப்படைத்தன்மையாக இப்போது சுட்டி வந்தாலும் தமிழ் சங்கப்பாடல்களில் முழுமையான இணைவு எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இரு உயிர்களின் சங்கமம் உடல் ரீதியாகவும் மன ஒருமையினாலும் எழும் நிலை. இரு உயிர்களுக்கானத் தேவை இருந்தும் காமம் எனும் உணர்ச்சி தனியொருவரின் மனதிலிருந்து பிறப்பது தான். காமம் எனபதை இச்சைகளின் சிகரம் எனக் குறிப்பிடலாம். அப்படி நாவின்பமும் கேள்விச்சுவையும் இச்சைகள் இல்லையா? நாவின்பம் புலனின்பமாக மட்டுமே நின்றுவிடக்கூடியது. மனித மனதின் தளங்களை நேரடியாக பாதிக்கும் தன்மை அதற்கு...