கரைகாணமுடியா காமம்


காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

யாமம் - நள்ளிரவு
புனல் - வெள்ளம்

கரைகாணமுடியா காமம். அது சாதாரண விசை அல்ல. கடும் புனல். கூடலிலும் கூடா முழுமை. அப்படி ஒரு பயணம் எவருக்கேனும் முடிவுக்கு வந்திருக்கிறதா? காமத்தினால் மெய்ம்மை எய்தியவர் உண்டோ? நம் கட்டுப்பாட்டை மீறிய ஒன்றாக இருப்பதோடு நம்மை மூழ்கிவிடவும் செய்யும் வேகம் கொண்டது. இங்கு இந்த குறள் கவிதையாவது யானே உளேன் எனும் வரியில்தான். காமம் என்பதற்கு இயல்பான அர்த்தம் இணைவது. இரு உடல்களின் இணைவு என ஒற்றைப்படைத்தன்மையாக இப்போது சுட்டி வந்தாலும் தமிழ் சங்கப்பாடல்களில் முழுமையான இணைவு எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இரு உயிர்களின் சங்கமம் உடல் ரீதியாகவும் மன ஒருமையினாலும் எழும் நிலை. இரு உயிர்களுக்கானத் தேவை இருந்தும் காமம் எனும் உணர்ச்சி தனியொருவரின் மனதிலிருந்து பிறப்பது தான். காமம் எனபதை இச்சைகளின் சிகரம் எனக் குறிப்பிடலாம். அப்படி நாவின்பமும் கேள்விச்சுவையும் இச்சைகள் இல்லையா? நாவின்பம் புலனின்பமாக மட்டுமே நின்றுவிடக்கூடியது. மனித மனதின் தளங்களை நேரடியாக பாதிக்கும் தன்மை அதற்குக் கிடையாது. ரஜோ, சத்வ, தமோ குணங்களில் பாதிப்பை செலுத்தும் புலன் விசைகள் மட்டுமே மனிதனை முழுமைக்கு இட்டுச்செல்லக்கூடியவை. இங்கே முழுமை என்றால் என்ன என விளக்கியாகவேண்டியுள்ளது. 

முழுமை என்பது தன்னறிதலின் உச்சம் எனலாம். தன்னை முழுமையாக அறிவது என்பதை பலரும் பலவிதமாக விளக்கியுள்ளனர். நம்மை அறிவதே வேதாந்தத்தின் சாரம். சுத்த அறிவே சிவம். முழுமையாக அறிவது என்பது நம்மையும் நம்மைச் சுற்றியிருக்கும் புற உலகையும் சாரமாக அறிவது. வேதாந்தம் அதை நம்மில் அண்டத்தை அறிய முற்படும் கலை. அளவிட முடியாத புற உலகின் யதார்த்தத்தை அல்ல, புற உலகம் எதற்குச் சாரமாக நிற்கிறதோ அதை அறிய முற்படுவது தன்னை அறிதலின் பயணம் எனலாம். வேதாந்தம் அதை நம்முள் இருக்கும் ஆன்மாவும் பிரம்மமும் இயைந்துபோகும் தருணத்தைக் குறிப்பிடுகிறது. நம்மில் எது நிர்குணங்கள் அற்றதோ அதுவே பிரம்மத்தை அடைய முடியும். அதை விளக்குவதற்கே சாங்கியம் புருஷன் எனும் கருதுகோளை உண்டாக்கியது.

இந்து தத்துவ வளர்ச்சியை கவனிக்கும்போது தேடலின் எல்லையை எப்படி மனிதன் விரிவாக்கிக்கொண்டிருந்தான் எனப் புலப்படும். புலன்களின் ரூப தத்துவமாக இருந்த தரிசனங்கள் தங்கள் போதாமைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் புது கருத்துகளைச் சென்றடைந்தன. பொருள்முதவாதத் தத்துவமான ஆதி சாங்கியத்தில் இல்லாத அருப கருத்துகள் பிற்கால சாங்கியத்தில் உருவானதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். தரிசனங்களை விளக்க வந்த ஆசிரியர்கள் அவற்றின் ஓட்டைகளை அடைக்கமுடியாதிருக்கும் தருணத்தில் புது கண்டடைதல்களில் சென்று சேர்கிறார்கள். அப்படி மெல்ல உருவாகி வந்ததே தன்னறிதல் எனும் வேதாந்தத் தத்துவம்.

புலன்களில் உண்டாகும் உணர்ச்சி நிலைகளை ஆரம்பவாசலாகக் கொண்டால் அதற்குக்கீழே பல படிநிலைகள் கைமாற்றியபடி இருப்பதை சிந்தனையாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். ரஜோ, சத்வ, தமோ குணங்களாகத் தெரிவன பல வேர்கள் கொண்ட கிளைகளே. சுஷிப்தி, விழிப்பு நிலை, ஆழ்மனம் என வேதாந்தம் அவற்றைப் பலவாறு பிரிக்கிறது. conscious, unconscious, subconscious என மேலை உளவியல் அவற்றைப் பிரிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது நமது ஆழமான உணர்ச்சிகள் பலவகையான தழைகளால் மூடப்பட்டிருக்கு. மேலோட்டமான உணர்ச்சிகளை அடிப்படை அலகுகளாகப் பிரித்துப்புரிந்துகொள்வதை தன்னறிவு எனச் சொல்லலாம். புலனறிவால் ஓரளவு வரையே அவற்றைப் பிரித்துப்பார்க்க இயலும். 

நமது இருப்பைச் சாரமாக நிறுவுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தத்துவங்கள் தேவைப்படுகின்றன. பிரதியட்சம், அனுமானம், உபமானம், சுருதி எனும் நாலு வகையான கருவிகள் கொண்டு நம்மைச் சுற்றியிருக்கிற உலகத்தை நாம் உள்வாங்கமுடியும். இந்த அண்டத்தில் நம் இருப்பு எதற்காக, எத்தகைய இச்சை நம்மை இங்கு நிறுத்தியது, நமக்கும் பிற சித்/அசித் உலகங்களுக்கும் உண்டான தொடர்பு எப்படிப்பட்டது போன்ற கேள்விகளை நாம் ஆராயும்தோறும் நமது சாரத்தை அறிய முடியும். இதற்கு பிரதியட்சமும், அனுமானமும் மட்டும் உதவாது என்பதை உணர்ந்தபோதே உபமானமும், சுருதியும் தோன்றின.

மேலே சொன்ன நான்கு கருவிகளைக் கொண்டு நம் இருப்பை புரிந்துகொண்டுவிடமுடியுமா? அதற்கான எல்லைகள் என்னென்ன?

மீண்டும் இந்த குறளுக்கு வர வேண்டும்? கரைகண்டவன் ஏதேனும் புதிதாகக் கண்டு தனது இருப்பை பலமடங்கு பெரிதாக்குகிறான். இருப்பின் சாரமே தொடர்புகள்வழி தன்னைப் பெரிதாக்குவது. அதற்கான அர்த்தத்தை அதிகப்படுத்துவது. தொடர்புகள் மூலம் தனது இருப்புக்கு நியாயம் சேர்ப்பது. ஆனால் காமக்கடும்புனலின் நீந்தியவன் கரைகாணாது மீண்டும் மீண்டும் தன்னையே காண்கிறான். அவன் எதிர்பார்க்கும் பதில் அதில் கிடைப்பதில்லை என்கிறார் வள்ளுவர். காமத்தைக் கடப்பதன் மூலம் முழுமையை அடையமுடியாதா எனும் கேள்விக்கு இது இட்டுச்செல்கிறது?

ஒரு கருத்தைக் கடப்பது என்பது பொருள்மய உலகில் என்ன அர்த்தம் கொடுக்கிறது? கருத்தை முழுவதுமாக அறிவதன் மூலம் கடக்கலாம். முழுமையாக அறிவது என்பது தனதாக்கிக்கொள்வது, தன்னை அதில் கண்டடைவது எனலாம். ஒரு பேருந்தில் பயணம் செய்யும் எல்லாரும் தமக்குண்டான இடங்களை அடைவதற்காக ஒன்றாகச் சேர்ந்து செல்கின்றனர். யாரும் ஓட்டுனரைப் பார்ப்பதில்லை. ஆனால் ஓட்டுனர் என ஒருவர் இருப்பதால் தான் வண்டி நகர்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்த ஒரு கருத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இதை எவ்விதத்திலும் நாம் கேள்வி கேட்பதில்லை. அனுமானத்தினால் வந்த அறிவு இது. ஒருவேளை நாம் பயணக்கிக்கும் வண்டிக்கு அருகே பயணம் செய்யும் மற்றொரு வாகனத்தில் ஓட்டினர் இல்லை என்பதை நாம் பிரத்யட்சம் மூலம் அறிந்தால் இந்த கருத்து எப்படி மாற்றமடையும்? மனித அறிவால் உருவான எதுவும் அவன் விதித்த எல்லையைக் கடக்க முடியாது என நம்முள் இருந்த கருத்து குழப்பம் அடையும்.  இந்த அறிதல் முழுமையடையாமல் நம்முள் சதா தொந்திரவு செய்தபடி இருக்கும். நாம் சுருதிகள் மூலம் அடைந்த பேய் பயங்கள் நாம் இன்றும் கடக்காமல் இருப்பதும் இப்படியே. கண்ணால் கண்டவர்கள் எழுதிவைத்ததாகவும் கதை சொல்லிவைத்ததாகவும் சொல்லப்படும் கதைகள்.

அடுத்து முழுமையை அடைவதற்கும், தன்னிலை அறிவதற்கும் உண்டான கருவிகளை சற்று நுணுக்கமாகப் பார்க்கலாம். கடும்புனலையும் நாம் நீந்தித்தான் கடக்க வேண்டும். மனிதனுக்கு இருக்கும் எல்லை அவன் நீரை நீந்தி மட்டுமே கடக்க முடியும் என்பது. நீர் என்பது புறப்பொருள். அங்கு அகத்தாவல் உதவாது. இங்கு வள்ளுவர் உபமானம் மூலம் அரூப கருத்தான காமத்துக்கு விதி அமைக்கிறார். காமத்தைக் கடப்பது எப்படி? நமக்கு முன் இருக்கும் வழிகள் என்னென்ன? 

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

கம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்