கம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்
கம்பராமாயணம், வ.வே.சு ஐயர் எழுதிய கம்பராமாயண ரசனை நூல் மற்றும் தொல்பாவைக்கூத்தில் ராமாயணக்கதைகள் என அடுத்து சில கட்டுரைகள் இங்கு எழுத எண்ணம். முதலாவதாக கம்பனின் காலம் குறித்து வ.வே.சு ஐயர் எழுதிய கட்டுரை இங்கே.
*
*
கம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்
(வ.வே.சு ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் - பெ.சு.மணி அவர்கள் எழுதிய நூலிலிருந்து)
கம்பனுடைய சரித்திரத்தைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் நம் காலம் வரையில் எட்டியிருக்கிற ஒன்றோடொன்று முரணுகிற பல கர்ண பரம்பரைகளுக்கிடையில் இன்ன இன்ன அம்சங்களை நிச்சந்தேகமாக நம்பலாம் என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், அந்த மகா கவியின் சரித்திரத்தில் உண்மையாக இருக்கலாம் என்று கொள்ளக்கூடிய அம்சங்கள் பின்வருபவைதாம் என்று ஒருவாறு நிச்சயித்து எழுதுகிறோம்.
கம்பன் ஜாதியில் உவச்சசன், அதாவது காளி கோயில் பூசாரி. அவன் தகப்பன் பெயர் ஆதித்தன். அவன் பிறந்தது திருவழுந்தூர். அக்காலத்தில் அவன் திருவெண்ணெய் நல்லூரில் சடையன் எனும் ஒரு வள்ளலை அடுத்து, அவனால் மதித்தற்கரிய நன்மைகள் பெற்று அவனுக்கு உயிர்த் துணைவனாக வாழ்ந்து வந்தான்.
கம்பன் தனது கவித் திறமையை முதலில் காட்டியது வேளாளரைப் பாடிய ஏரெழுபது எனும் நூலிலாம். சரஸ்பதியந்தாதி, மும்மணிக் கோவை என்ற நூல்களும் கப்லனால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் அவை எக்காலத்தில் பாடப்பட்டன என்று சொல்ல முடியவில்லை. இப்போது இறந்து போவிட்டாலும் இன்னும் எத்தனையோ பாட்டுகளும் நூல்களும் கம்பன் பாடியிருக்க வேண்டியது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவனுடைய வாக்கின் செழுமையைப் பார்த்துவிட்டுத்தான் சடையப்ப வள்ளல் அவனை ராமாயணத்தைத் தமிழில் பெருங்காப்பியமாகப் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
ராமாயணத்தைப் பாடப் பல வருஷங்களாகியிருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு அங்கங்கேயுள்ள வித்துவான்களுக்கு அதைப் படித்துக் காட்டி அவர்களுடைய சாற்றுக் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு கடைசியில் அவன் ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீமத் நாதமுனிகளும் மற்றுமுள்ள மகான்களும் பண்டிதர்களும் நிறைந்த சபையினில் தன் ராமாயணத்தை ஆதியோடந்தமாக வாசித்து அரங்கேற்றிக் கவிச்சக்கரவர்த்தி எனப் பட்டப் பெயர் பெற்றான். அரங்கேற்றுவதற்கு முந்தி நம்மாழ்வார் மீது ஒரு அந்தாதி பாடி வைத்தான் என்றும் சொல்லப்படுகிறது ('நம் அரங்கனைப் பாடினாயோ எனக் கேட்டதற்கு நம்மாழ்வார் நூற்றந்தாதி பாடியதால் மேட்டழகிய சிங்கர் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார் என்பது கர்ணப்பரம்பரக்கதை)
கம்பனுடைய கவித்திறமை சோழ ராஜனுக்குத் தெரிந்தது முதல் அவனை அவன் தனது சபைக்கு வரவழைத்துக் கொண்டு அவனுக்கு ராஜோபசார தேவோ பசாரங்களும் செய்து வைத்தானாம்.
கம்பனுக்கு அம்பிகாபதி என்று ஒரு மகனிருந்தான். அவனும் ஒரு கவி. அவன் சோழ மகளை விழைந்தான் என்றும் அதற்காகச் சோழன் அவனைச் சிரச்சேதம் செய்தான் என்றும் சொல்லப்படுகிறது. அம்பிகாபதியைத் தவிர கம்பனுக்கு காவேரி என்ற ஒரு மகளும் இருந்தாளாம். அவளைச் சோழன் மகன் விரும்பி வரம்பு கடக்க முயன்றானாம். அப்போது அவள் தன் கற்பைக்காப்பதற்கு வேறு மார்க்கமில்லாமல் வீட்டு முற்றத்திலுள்ள கம்பங் குழியில் இறங்கித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டு விட்டானாம்
இந்தக் கதைகள் உண்மையாயிருக்கும் பக்ஷத்தில் கம்பனுக்கும் சோழனுக்கும் மனஸ்தாபம் உண்டாவதற்கு வேறு காரணங்கள் வேண்டாம். ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும், கம்பன் சோழன் மீது கோவித்துக்கொண்டு ஏகாங்கியாய்ப் புறப்பட்டு, தேச தேசாந்தரங்களெல்லாம் சுற்றினான் என்று எல்லாக் கர்ண பரம்பரைகளும் ஒத்துக்கூறுகின்றன. அந்த ஊர்களிலெல்லாம் கம்பன் தனது ஊர் பெயர் முதலான ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் சாதாரண மனிதன் போலவே பிரயாணம் செய்தான். கடைசியில் அவன் பலவானான அரசன் சபையின் போய்ச் சேர்ந்து அங்கே அஞ்ஞாத வாசமிருந்து கொண்டே தனது ராமாயணத்தைப் பிரசங்கித்து வரும் நாளில், அவனை அவ்வர்சன் கம்பன் என்று தெரிந்து கொண்டதும் அவனிடத்துப் பேரன்பும், மரியாதையும் காட்டி, அவனுக்கு பரிவாராதிகன், யானை, குதிரை பரிசாகத் தந்து அவனை ராஜபோகத்தில் வைத்து விட்டான்.
எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராமகாதை, பங்குனி அந்த நாளில்,
கண்ணிய அரங்கர் முன்னே கவிஅரங்கு ஏற்றினானே
கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றியது சாலிவாகன சகம் 807 - ம் ஆண்டு என்பதைத் தள்ளிவிட நமக்குப் பாத்தியமில்லை. துவாபரயுகம் அல்லது வேறு யுகாந்தரங்கள் என்று மிகவும் தூரமான காலமாகச் சொல்லப்பட்டிருந்தால், கம்பனுடைய காலம் தெரியாததாலோ, அல்லது அவனுக்கு அபார மகிமையை உண்டாக்கலாம் என்கிற தவறான எண்ணத்தாலோ ஜனங்கள் அந்தப் பிரகாரம் கூறியிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் சகம் 807 ஆம் ஆண்டு மிகப் பழமையான காலம் அல்ல. ஆகையால் இந்தப் பாட்டு கம்பனுடைய நாளிலேயே அல்லது அதற்குச் சில நாட்களுக்குப் பிந்தியேதானோ பாடப்பட்டிருக்க வேண்டும் என நினைப்பது நியாய விரோதகம் ஆகாது
கம்பன் காலம் சகம் 8-9 ஆம் நூற்றாண்டுகளல்ல என்றும் அவன் சகம் 1042 ஆம் ஆண்டுக்கு அணித்தாகப் பிறந்து 1122 க்கு அணித்தாக இறந்திருக்க வேண்டும் ந்றும் சில பண்டிதர்கள் அபிப்பிராயப் படுவதற்குக் காரணம், கம்பனும் ஒரு குலோத்துங்க சோழனும், ஒட்டக்கூத்தனும், பிரதாபருத்திர தேவனும் சமகாலத்தவர் என கர்ணபரம்பரைகள் கூறூவதும், ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய மூன்று சோழர்களும் பிரதாபருத்திரமும் சகம் 11வது 12வது நூற்றாண்டுகளுக்கிடையில் விளங்கினர்கள் என்று சிலாசாசனிகள் நிச்சயித்திருபதுமே. சிலாசாசனங்கள் எப்போதும் ஒப்புக்கொள்ளத்தக்க பிரமாணம் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சாசனங்களில் குறிப்படிம வருஷங்கள் எந்தச் சகாப்தத்திலிருந்து கணக்கிடப்படுகின்றன என்பதில் அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன. ஆகையால் சிலாசாசனிகளுடைய தீர்மானங்களைப் பூணப் பரிமாணமாகக் கொள்ளுவது சரியாகாது பிரதாபருத் திரனுக்கும் கம்பனுக்கும் கற்பிக்கிற சம்பந்தததைப் பற்றி முன்னர் எழுதியிருக்கிறோஒம். ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய விக்கிரமன், குலொத்துங்கன், ராஜராஜன் என்ற பேர்களுள்ள சோழர் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சகம் 1040 முதல் 1122க்கு மேல் வரைய்ல் அரசாண்டார்கள் என்பது சில எசானிகளின் அபிப்ராயம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவராக இருக்கிந்திருக்க கம்பன் சகம் 11 வது 12 வது நூற்றாண்டுகளில் விளங்கியிருக்க வேண்டும் என்பது நிச்சயிக்கத் தேவையில்லை.
இன்னொன்று, கம்பன் சகம் 1042 முதல் 1122 வரையிலுள்ள காலத்தில் விளங்கினான் எனக்கொண்டால் உடையவர் காலத்திற்கு மிகவும் நெருங்கிக் கம்பம் பிரபலத்துக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் அவருடைய திவ்வியப் பிரபாவத்தைக் கண்ணால் கண்ட சிஷிய வர்க்கத்தில் பெரும்பாலாரை நேரில் பார்த்திருக்க வேண்டிய ஶ்ரீவைஸ்ணவ தாசனான கம்பன் அந்த மகானைக் குறித்து ஒரு துதியேனும் எழுதாமலிரான். அப்பேர்ப்பட்ட செய்யுள்கள் ஒன்றேனும் இப்போது காணப்படாதது கவனிக்கத் தக்கது.
தவிர, கம்பனுக்கு இந்தக் காலத்தைக் கற்பித்தால் அவன், உபய குலோத்துங்கனைப் பாடிய கலிங்கத்துப் பரணி எழுதப்பட்ட காலத்துக்குப் பிந்தான் விளங்கியவன் என ஏற்படும். ஆனால் பரணியில் சோழ நாட்டரசர் சூரிய குலத்தவர் என்றும், சோழ ராஜ்ஜியம் ஶ்ரீராமனுடைய மூதாதைகளில் ஒருவனால் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறபோது, கம்பன் ராம காதையுல் பாலகாண்டம் குலமுறை கிளத்துப் படத்திலாவது, கிஷ்கிந்தா காண்டம் நாடவிட்ட படல,த்திலாவது இதைப் பேசாமிருந்திருக்க மாட்டான். மேலும் தான் பரதெய்வமாகக் கருதியிருக்கிற ஶ்ரீராமன் குலத்தவரைப் பற்றீத் தன் ராமாயணத்தில் உற்சாகத்தோடும் அபிமானத்தோடும் அவன் பேசாமலிருக்க முடியாது. ராமாயணத்தின் முடிவில் வரும் வாழ்த்துப்பாக்களில் கூடச் சோழ அரசர் பெயர் வரவில்லை. ஆகையால் சோழ வமிசம் இஷ்வாகு வமிசத்திலிருந்து பிரிந்தது என்ற கலிங்கத்துப் பரணிக்கதை பிறக்கும் முன்னரே கம்பர் ராமாயணத்துப் பாடியிருக்க வேண்டும்.
ஒட்டக்கூத்தன் காலத்திலிருந்து கம்பன் காலத்தை நிர்ணயிப்பதில் இத்தனை முரண்பாடு சம்பவிக்கிறது. தொன்று தொட்டு வந்திருக்கிற தனியன் பிரகாரம் கம்பன் ராமாயணத்தை சகம் 807 இல் அரங்கேற்றினான் என்று சொல்வதற்கான சரியான ஆஷேபனை ஒன்றும் எனக்குத் தோன்றைல்லை.'
அரங்கேற்றிய காலத்துக்குச் சுமார் இருபது வருஷங்களுக்கும முன்னால் கம்பன் ராமாயணம் பாட ஆரம்பித்தான் என வைத்துக்கொண்டால் கம்பன் விஜயாலய சோழ காலத்தில் அல்லது அவனுக்குப் பின் ஆண்ட ஆதித்த சோழன் காலத்தில் அந்த காவியத்தைப் பாடி வந்தான் என்று ஏற்படும். இந்தச் சோழர்களும் மற்ற தமிழ் நாட்டரசர் களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு பல்லவரோடு கடும் போர் புரிந்து வந்தார்களாம். தமிழ் நாட்டுக்க்குச் சுதந்திரம் கொடுக்க முயன்ற பெருந்தகைகளைப் பற்றி சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் தேவாரத்தில் ஓரிடத்துல் பேசியது போலக் கம்பன் பேசவில்லை என்பது விசனிக்கத்தக்கதே. சடையப்ப வள்ளலைப் பாடிய அளவு கம்பன் ராமாயணத்தில் சோழர்களைப் பாடவில்லை என்பதால் அவன் பாடிய காலத்தில் சோழர்கள் தமிழ்நாட்டில் தலைமை வகிக்கவில்லை என்றும் ஏற்படுகிறது.
கம்பன் சகம் 10வது நூற்றாண்டுக்கு முற்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்னும் இரண்டு துணைக்காரணங்களும் காட்டுவோம். சேக்கிழார் பெரிய புராணம் பாடியது சகம்11ஆவது நூற்றாண்டின் முதற்காலாக இருக்க வேண்டுமெனப் பண்டிதர் நிச்சயித்திருக்கிறார்கள்.
பாலகாண்டம் கடிமணப் படலத்துல் ராமன் செய்துகொண்ட கோலத்தை வருணித்து வரும்போது
"என்றும் நான்முகம் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று, மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே"
என்று வரும் செய்யுளில் சொல்லும் திருநாமம் சாத்திக்கொள்ளும் வழக்கம் எக்காலத்தில் பிறந்தது என்று விசாரித்ததில், அந்த வழக்கம் ஶ்ரீமந் நாதமுனிகள் காலத்திலேயே இருந்தது என்று வைஷ்ணவ சம்பிரதாயம் அறிந்தவர்கள் எமக்குச் சொன்னார்கள். அது நெடுநாள் பிற்பட்டு உண்டான வழக்கம் என்று ஏற்படும் பஷ்த்தில் கம்பனுடைய காலத்தை அதற்குப் பின்னேதான் கொண்டு போகும்படி நேரும்.
ஆகையால் ஒப்புக்கொள்ளத்தக்க வேறு ஆகேஷ்பணைகள் தோன்றும் வரையில், கம்பன் சாலி வாகன சகாப்தத்தின் 8 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 9 ஆவது நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கினான் என்று மேலே காட்டியுள்ள தனியன் பிரகாரம் 807 இல் தான் தன் காவியத்தை அரங்கேற்றினான் என்றும் கொள்ள வேண்டும்
Comments
Post a Comment