உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'
கம்பராமாயணத்தில் வரும் அகலிகைப் படலத்தில் அகலிகை சாபம், சாப விமோசனம் இரண்டும் ரிஷி விஸ்வாமித்திரரால் ராம லஷ்மணனுக்குச் சொல்லப்படும். ராமனின் கால் தூசி பட்டு சாப விமோசனம் பெற்ற அகலிகை கெ̀̀ளதம முனியுடன் நீங்கயபின்னர் கம்பனது ராமகாவியத்தில் மீண்டும் வருவதில்லை. பின்னர் வந்த லவ குவக் கதைகளில் அவளை அவர்கள் சந்திப்பது போல சில கதைகள் உண்டு. பிற ராமாயணங்களில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' கதையில் அகலிகையும் சீதாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் சந்திப்பதற்கான முகாந்திரம் புராணத்தில் இருக்கிறது. கெளதமருக்கும் அகலிகைக்கும் பிறந்த சதானந்தன் எனும் முனிவர் மிதிலையில் ஜனகனின் அரசவையில் புரோகிதராக அமைந்திருக்கிறார். அகலிகை சாப விமோசனம் பெற்ற பின்னர் மிதிலைக்குச் செல்லும் ராமர மிதிலா இளவரசி சீதையை மணந்து கொள்கிறார். கல்லாய் போவதற்கு முன்னர் அகலிகையும் சீதையும் சந்தித்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் இந்தக் கதையில் அவர்கள் பதினான்கு வருட வனவாசத்துக்குப் பிறகே சந்திக்கின்றனர்.
அகலிகையின் சாப விமோசனம் எப்படிப்பட்ட மாறுதல்களை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் உண்டாக்குகிறது? இதை ஒவ்வொரு புனைவாசிரியனும் வெவ்வேறு விதங்களில் கற்பனை செய்துள்ளனர். உள்ளும் வெளியும் கதையில் அகலிகைக்கு தன் மனதின் எண்ணங்கள மீதான குழப்பத்தையும், மனதறிய தவறு செய்யாமைக்கும் அவித்யைக்கும் இருக்கும் வேறுபாட்டை தூய அத்வைத ஞானத்தின் வழியாக கெளதமருக்கும் ஏற்றிப்பார்க்கிறார் மு.தளையசிங்கம்.
புதுமைப்பித்தன் சாபமும் சாப விமோசனமும் மனதில் இருவேறு நிலைகளா என ஆராய்கிறார். புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் - மனசுக்கும் கரணசக்தியின் நிதானத்துக்கும் கட்டுப்படாமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை?
அகலிகை சாபம் பெறுகிறாள். காலங்காலமாக காற்று, மழை பொறுத்துக் கிடந்தவள், ஒரு தவ முனி கூட்டி வந்த இரு பாலகர்களில் ஒருவனது கால் தூசி பட்டு துளிர்க்கிறாள். கல்லுக்குள் பழைய ரத்த ஓட்டம் தொடங்குகிறது. அருகே புற்றுக்குள் கல்லாய்க்கிடந்து தவமேற்றுக்கொண்டிருந்த கெளதமர் வெளி வருகிறார். மீண்டும் துன்ப வலையா என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. அகலிகை அவரது அன்புக்குப் பாத்திரமாக முடியுமா என சந்தேகிக்கிறாள். ஏதோ ஒரு புள்ளியில் முறிந்து, பின்னர் இணைந்து ஒருவருக்கு ஒருவர் என பரிவுடன் வாழத் தொடங்குகின்றனர். ராமனின் பட்டாபிஷேகத்துக்குச் செல்வதற்குத் தயார் செய்யும் நேரத்தில், கைகேயி வரத்தினால் சீதா பிந்தொடர ராமனும் லக்குவனும் காடேறுகிறார்கள். கெளதமர் மற்றும் அகலிகை மனங்களும் அவர்களோடு வனமேறிவிடுகிறது.
சரயூ நதிக்கரையில் இருக்க இயலாது அவர்கள் மிதிலைக்குச் சென்று சதானந்தனின் குடிலை அடைகின்றனர். ஜனகரின் அவையில் தத்துவ விசாரத்தில் ஈடுபடும்போது சாப விமோசனத்துக்குப் பின் கெளதமரின் தத்துவம் செல்லும் புது திசை பற்றி அறியும் ஆவல் சபையினருக்குக் குறிப்பாக ஜனகருக்கு ஏற்படுகிறது. அயோதியா மீதிருந்த கோபத்தால் அவர் 'உணர்சிக்கு மதகு அமைக்காத ஆட்சி' என அயோத்தியாவைத் திட்டுகிறார். 'உணர்ச்சியின் சுழிப்பில் தான் உண்மை பிறக்கும்', என கெளதமர் பதில் கூறுகிறார்.
செயல் என்பது எங்கே தொடங்குகிறது? அதற்கும் மனசுக்கும் இடைப்பட்ட தொடர்பு என்ன? செயல்கள் அனைத்திலும் ஒரு உணர்ச்சியின் பங்கு என்ன? அகலிகை கங்கைக் கரையில் நீராடப்போகும்போது அங்கிருக்கும் பிற ரிஷி பத்தினிகள் விலகிச்செல்கிறார்கள். எங்கு சாப விமோசனம் முடிந்து பாப விமோசனம் தொடங்குகிறது எனும் கேள்வி அவளுள் ஓடுகிறது.
பதினான்கு வருடம் முடிந்து ராமனும் சீதையும் திரும்பப் போகிறார்கள். அவர்கள் வர தாமதமானால் பரதன் தீக்குளிக்கத் தயாராகிறான். அவர்கள் காடேறிய நாள் முதல் அவர்களது வரவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறாள் உணர்ச்சிக்கு பலியான மற்றொரு தாய், கைகேயி! இன்று பெற்ற பிள்ளையேகூட கைவிட்ட நிலையில் ராமனின் வருகை அவளுக்கொரு சாப விமோசனமாக அமையும்! பாப விமோசனம் அங்கும் அடங்கவில்லை.
அகலிகை திரும்பும் இடமெல்லாம் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பாபம் எனச் சொல்லப்பட்டு விலக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு விமோசனம் இல்லை.
ராமனும் சீதையும் அயோத்தியா திரும்பியபின்னர் அகலிகை சீதையை சந்திக்கிறாள். பேச்சு ராவணன், மீட்பு எனச் சுழன்ற பின் அக்னி பரீட்சைக்குத் திரும்புகிறது. ராமன் அக்னி பிரவேசத்தைக் கேட்டான் என்பதை அகலிகையால் நம்பமுடியவில்லை. 'கண்ணகி வெறி தாண்டவமாடியது', என்கிறார் புதுமைப்பித்தன்.
காரண காரிய சக்திக்குத் தொடர்பில்லாமல் நிகழ்ந்த தவறு - கம்பனின் வார்த்தையில் நெஞ்சினால் பிழைப்பினாள் - அது எப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் மாறுபடுகிறது? தனக்குக் கிடைத்த நீதி ஏன் சீதைக்குக் கிடைக்கவில்லை என அகலிகை மீண்டும் குழம்புகிறாள். அதுவும் ஒரே ஆடவனிடமிருந்து?
அகலிகை பிரக்ஞை கழன்ற நிலையில் இருக்கும்போது கெளதமன் அவளைத் தழுவுகிறார். கெளதமனுக்குள் இருக்கும் இந்திரன் அவளைத் தழுவுகிறான். அவள் மீண்டும் கல்லாகிறாள்
தீதிலா உதவி செய்த சேவடிக் கடிய செம்மல்
என்கிறார் கம்பர்.
எவ்விதமான குற்றமும்மில்லாத உதவி செய்த ராமனுக்கும், பின்னர் ராவணனை வதம் செய்தபின் வந்த ராமனுக்கும் என்ன வித்தியாசம்? கற்சிலைக்கு விடை கொடுத்த ராமன்
பொன்னடி வணங்கிப் போனான்
என்கிறார் கம்பர். முனிபத்தினி நெஞ்சினால் பிழைப்பிலாதவள் என்பதால் தண்டனையிலிருந்து விலக்கு கொடுத்தவனுக்கு என்ன ஆனது? இது என்றும் மறையாக் கேள்விதான். பல புனைவாசிரியர்களை ராமாயணத்துள் இழுத்துப் பிடித்து வைக்கும் கேள்வி.
Comments
Post a Comment