காமப்புதுமணம் - ராமாயண அகலிகை
அகலிகைக் கதைக்கு இருபதுக்கும் மேற்பட்ட பாடபேதங்கள் இந்திய இலக்கியங்கள் உள்ளன. அவற்றைப் பொதுவாக தென்புலத்தோர், வடபுலத்தோர் வகைகளாகப் பிரிக்கலாம்.
கெளதம முனிவரின் மனைவியான அகலிகை பேரழகி. அவளை அடையத் திட்டம் போட்ட இந்திரன் பதிவிரதையான அகலிகையை நேரடியாக தன்வசப்படுத்த முடியாது என்பதால் கெளதம முனியின் வேஷத்தில் அடைகிறான். அகலிகையுடன் கலந்தபின் குடிலை விட்டு வெளியேறும் அவன கெளதம முனியைப் பார்த்து நடுங்கிப் போகிறான். தீய குணம் கொண்ட இந்திரன் அவலட்சணமாவான் (விருட்சணங்கள் இழந்தவன்) என்றும், ஆயிரமாண்டுகாலம் காற்றையே ஆகாரமாக உண்டு அகலிகைக் கல்லாய்க்கிடக்க வேணும் என்றும் சாபம் கொடுக்கிறான். மனைவியான அகலிகைக்கு மட்டும் சலுகை உண்டு. எப்போது தசரத ராமன் பாதம் படுகிறதோ அப்போது சொந்த வடிவம் பெறலாம் எனும் பின்னிணைப்பு சலுகை கொடுக்கிறான்.
வட இந்திய ராமாயணம் முதல் தென்னிந்திய ராமாயணம் வரை இக்கதை பலவிதமான மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. காளிதாசரின் ரகுவம்சம், பரிபாடல், நாட்டுப்புறப்பாடல்கள் எனப் பலவற்றிலும் கம்பராமாயணத்துக்கு முன்னர் அகலிகை கதை இடம்பெறுகிறது. Ramayana Tradition in Asia நூலில் இவை மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அகலிகை கதை காலத்தைத் தாண்டி இத்தனை வடிவங்களிலும், மாறுபட்ட இலக்கியங்களிலும் இடம்பெறுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனாலும், அகலிகை கதையின் அடிப்படை வாதப்பொருட்கள் நம் காலத்திலும் முக்கியமானவையே.
1) அகலிகை மனமுவந்து இந்திரனிடம் கூடினாளா? வந்திருப்பது கெளதமன் அல்ல இந்திரன் தான் என்பதை அவள் எப்போது உணர்கிறாள்?
2) அகலிகை எனும் பெண், தன் அழகின் மீது பெரும் மதிப்பு கொண்டவள், காம இச்சையை எப்படி எதிர்கொள்கிறாள்?
3) சாபம் கொடுப்பதில் மாறுபடும் கதைகள்.
4) அகலிகையுடன் கூடிய பின்னர் இந்திரனின் நிலை என்ன? காம ஒழுக்க மீறலையும், தர்மமற்ற நிலைபாடையும் இந்திரன் எதிர்கொண்டது எப்படி?
5) சாப விமோசன முறையில் வேறுபாடுகள் என்னென்ன?
6) அகலிகைக் கதையைக் கேட்பவர்கள் பெறுவது என்ன? அவர்களுக்குக் இந்த கதை எதற்காகச் சொல்லப்படுகிறது.
இந்திய இலக்கியத்தில் அகலிகை கதையின் பாடபேதங்கள் மேற்சொன்ன பல பதில்களில் அடங்கியிருக்கிறது. பொதுவாக, ராமரின் கால்பட்டும் மூச்சு பட்டும் சாப விமோசனம் அடைவாள் என்பதில் மாறுதல் இல்லை.
இந்திரன் எனத் தெரிந்தே அகலிகை அவனுடன் இணைந்தாள் என வான்மீகி ராமாயணம் கூறுகிறது. விரும்பியே முறைமீறி கற்பினை இழந்தவள். அறிந்தே தவறிழைத்ததால் கற்பு என்பது உடல்கூறு சம்பந்தப்பட்டதன்று என்றாலும் அவள் அறம் தவறியவள் ஆகிறாள்.
கம்பர் அவளை உண்மையறியாதவளாகத் தொடக்கத்தில் காட்டினாலும், முழுவதுமாக வயப்படுவதற்கு முன்னரே 'தக்கது அன்று' என உணர்ந்தவள். உணர்ந்தும் 'தாழ்ந்தனள் இருப்ப' என விலகாமல் தொடர்ந்து இந்திரனின் ஆசைக்குக் கட்டுப்பட்டாள்.
புக்கவ ளோடுங் காமப் புதுமண மதுவின் றேறல்
ஒக்கவுண் டிருந்த லோடு முணர்ந்தன ளுணர்ந்த பின்னும்
தக்கதன் றென்ன வோராள் தாழ்ந்தன ளிருப்பத் தாழா
முக்கணனனைய வாற்றன் முனிவனும் முடுகி வந்தான்
புக்கவ ளோடுங் காமப் புதுமண மதுவின் றேறல்
ஒக்கவுண் டிருந்த லோடு முணர்ந்தன ளுணர்ந்த பின்னும்
தக்கதன் றென்ன வோராள் தாழ்ந்தன ளிருப்பத் தாழா
முக்கணனனைய வாற்றன் முனிவனும் முடுகி வந்தான்
இந்திரனுக்குக் கீழ்படிந்து இருந்தாள் அகலிகை. உணர்ந்த பின்னும். ஒக்க உண்டு இருத்தலோடு உம் என சமமாக அனுபவித்துக்கொண்டிருக்கையில் கெளதமன் இல்லை என உணர்ந்தாள். அதை கம்பன் காமப்புதுமணம் என்கிறார்.
ஏதோ தவறு என உணர்ந்தவனான கெளதம முனி முக்கண்ணன், சிவபெருமானின், கோப முத்திரையோடு விரைந்து வந்தான்.
நிரந்தரம் உலகினிற்கு நெடும்பழி பூண்டாள்
என எக்காலத்திலும் தவறு என சொல்லப்படும் நெடும்பழி செய்தவளாக நடுங்கி நின்றாள் அகலிகை. கம்பர் வருணனையில் நாடகக்காட்சி நம்முன்னே விரிகிறது. கெளதமனின் கோபத்தைப் பார்த்து இந்திரனோ ஒரு ஓரத்தில் பூனையாக போகத் தொடங்குகிறான். ஒரு typical casanova.
இதற்கும் முன்னர் பரிபாடலில், 'கல்லுருகல்லுருவெய்தியவாறு இதுவென்று கொண்டோற் பிழைத்த தண்டம் கூறுவாருமாய்', எனக் கூறி அவள் குற்றப்பட்டவள் எனக் குறிக்கிறது.
குற்றத்தின் அடிப்படை மன விகாரத்தைப் பற்றி இவை மூன்றும் ஆழமாகப் பேசவில்லை. அவளுக்கு இந்திரன் மீதிருக்கும் காமத்தினால் தவறிழைத்தாள் என்பதே சாரம். நெஞ்சினாள் பிழைப்பிலாள் என கம்பர் மட்டும் அவளது குணத்தை சற்றே பரிசீலிக்கிறார்.
கல்லாய்க்கிடக்க வேணும் என கம்பர் சொன்னாலும், வான்மீகியில் காற்றையே உட்கொண்டு (எதுவும் சாப்பிடாமல்) கிடப்பாய் என சபிக்கிறார். கல்லாய் கிடக்க வேணும் என்பது தென்புல ராமாயணங்களில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.
அற ஒழுக்கங்கள் மீறியதால நெடும்பழி ஏற்றவளா? தன்னை மீறிய சக்தியிலாட்பட்டுக்கொண்ட தருணமா?
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
நிஜத்தில் அண்டாத காதல் எவ்வித தடைகளுமற்று கனவினில் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். காமம் எனும் கரைகாணா உணர்ச்சி மன விகாரம் எனக் குறிப்பிட்டாலும் மகிழ்ச்சி, பொறாமை, சோகம் போலொரு அடிப்படை உணர்ச்சியாகவே இலக்கியங்கள் கையாண்டுள்ளன. பிடிபடாத காமம். தர்க்கத்தின் அப்பார்பட்டு விளங்கிடும் புனல்.
அகலிகையின் குற்றம் என்ன? அவள் இந்திரனை எதிர்க்கத் தயங்கியது அவளுக்கு இந்திரன் மீதிருந்த மதிப்பையும் பிரேமையையும் காட்டுகிறது. கூடவே பயத்தையும். காமத்தின் புது மணத்தை உண்டவள் தன் நிலை அறியாமை. அதீதச் செயல்களை விலக்கி வைக்க வேண்டும் எனும் அறிவுத்தெளிவு இல்லாமையே முதன்மையான குற்றமாக கம்பர் பார்க்கிறார். ஒழுக்கத்தின்பாற்பட்ட அறிதல் குறையாக அவர் காண்பது நிச்சயமற்ற இந்த உலகின் செயல்கள் அனைத்தும், நம் சிந்தனை உட்பட, நம் தர்க்க புத்தியின் எல்லைக்குள் அடங்காதது எனும் தெளிவு கம்பருக்கு இருந்திருக்கிறது. வினைப்பயன் முந்திச்செல்ல தருமம் பின் சென்ற ராமனை உயர்த்திப் பார்த்த கம்பர் அடைந்த மற்றோரு முந்துறு கவி மேன்மை இது.
நவீன வாசகனுக்கு அகலிகையின் மனக்கரைசல் எப்படிப்பட்ட உணர்வைத் தந்திருக்கிறது? மு.தளையசிங்கம் (உள்ளும் புறமும்), பிரமிள் (அகலிகை/நிகழ மறுத்த அற்புதம்), புதுமைப்பித்தன் கதைகள் பற்றி - தொடரும்.
Comments
Post a Comment