வலை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிய சிறுகதை அ குறுநாவல் வலை - அவரது பிற புனைவு முயற்சிகளிலிருந்து தனித்துத் தெரிவது. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையும் இது தான். குறிப்பாக கதையின் தொடக்கம் யதார்தத்தை மீறிய தளத்தில் உண்மைக்கும் புனைவு எனும் கற்பிதத்துக்கும் இடையே ஊசலாடும் இழைகளைத் தொட்டுச் செல்கிறது. வெளிச்சத்தில் மட்டுமே தெரியும் சிலந்தியின் வலை எனச் சொல்லத் தொடங்கும்போது வெளிச்சமில்லாமல் தெரியும் பிற உலகுடனான தொடர்பும் நம்மை கேள்வி கேட்கத் தூண்டுகிறது. பூக்களின் வாசனையைக் கொண்டு வயதை அறியுமளவு நுட்பமும் துல்லிய புலனுணர்வும் கொண்ட கதைசொல்லி தனது முடிவுக்காலம் எனும் தருவாயில் சிலந்தி வலை பின்னுவதை முதல் முறையாகக் காண்கிறான். காண்பது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம் என்றாலும் படிக்கும் நமது இயல்புக்கு ஏற்ப பால் நிலைகளைச் சித்தரித்துக்கொள்ளும் சுதந்திரம் மாயயதார்த்தக் கதைக்கு உள்ளதால் அதை நாமும் சுவீகரித்துக்கொள்ளலாம். மெளனம் நிரம்பிய அந்த அறையில் காதறையும் அளவிற்கு சிம்பொனி ஒலியுடன் சிலந்தி வலை பின்னுகிறது. ஊடும்பாவுமாக காலத்தையும் அகாலத்தையும்,...