வலை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிய சிறுகதை அ குறுநாவல் வலை - அவரது பிற புனைவு முயற்சிகளிலிருந்து தனித்துத் தெரிவது. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையும் இது தான். குறிப்பாக கதையின் தொடக்கம் யதார்தத்தை மீறிய தளத்தில் உண்மைக்கும் புனைவு எனும் கற்பிதத்துக்கும் இடையே ஊசலாடும் இழைகளைத் தொட்டுச் செல்கிறது. வெளிச்சத்தில் மட்டுமே தெரியும் சிலந்தியின் வலை எனச் சொல்லத் தொடங்கும்போது வெளிச்சமில்லாமல் தெரியும் பிற உலகுடனான தொடர்பும் நம்மை கேள்வி கேட்கத் தூண்டுகிறது. பூக்களின் வாசனையைக் கொண்டு வயதை அறியுமளவு நுட்பமும் துல்லிய புலனுணர்வும் கொண்ட கதைசொல்லி தனது முடிவுக்காலம் எனும் தருவாயில் சிலந்தி வலை பின்னுவதை முதல் முறையாகக் காண்கிறான். காண்பது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம் என்றாலும் படிக்கும் நமது இயல்புக்கு ஏற்ப பால் நிலைகளைச் சித்தரித்துக்கொள்ளும் சுதந்திரம் மாயயதார்த்தக் கதைக்கு உள்ளதால் அதை நாமும் சுவீகரித்துக்கொள்ளலாம். மெளனம் நிரம்பிய அந்த அறையில் காதறையும் அளவிற்கு சிம்பொனி ஒலியுடன் சிலந்தி வலை பின்னுகிறது. ஊடும்பாவுமாக காலத்தையும் அகாலத்தையும், ரூப அரூபத்தையும், கலாச்சார அகலாச்சாரத்தையும், இருப்பு இல்லாமையையும் பின்னிச் செல்லும் கதை.

அதிகாரத்தின் கட்டுப்பாடுகளை வெறுப்பவர்கள் பலர் இருந்தாலும் அதற்குச் சமானவர்கள் அதற்குத் தலைவணங்குவதில் ஒருவித கிளர்ச்சியை அடைகிறார்கள். விடுதலை அவர்களுக்கு அச்சத்தைத் தருவது. வேறொருவனுக்கு அடிமைப்பட்டுக்கிடப்பதில் புண்ணைச் சொறிந்துவிடும் சுகத்தை அடைபவர்கள். காலம் அகாலம் குறித்த பாடத்தை நமக்கு ராஜ்ஜியங்கள் அமைக்கும் மூன்று பேர்கள் இணைந்து ஒரு புத்தகத்தை எழுதுகிறார்கள். அவர்கள் ராஜ்ஜியம் அமைப்பதற்கு முக்கியமான விதி காலத்தை உறைய வைக்கும் கருவியைத் தருவிப்பது. காலத்தை உறைய வைப்பதில் ஒரு தப்பித்தல் உள்ளது. அகாலம் எனும் அறியாத ஒன்றை தவிர்த்து மனிதர்களை உருவாக்கிவிடும் சாத்தியம் அதில் உள்ளது. அகாலம் என்றுமே அதிகாரத்துக்கு எதிரானது. அதனால் காலத்தை உறைய வைப்பதில் தங்களின் இருப்பையும் தக்கவைத்திருக்கும் ரகசிய சூஷுமமும் அடங்கியுள்ளது.

காலத்தை உறையச் செய்யும் தேடலில் அவர்கள் வந்து அமர்ந்தது ஜெசியா எனும் தேவதையின் மரத்துக்குப் பக்கத்தில். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குச் சமானமான மீன்கள் கடலில் இருந்தாகவேண்டும் எனும் விதியை காப்பவள் அவள். கிரேக்க தொன்மக்கதைகளை ஒட்டி எழுதப்பட்ட இந்த பகுதிகள் குழந்தைகளை சாகடிக்கத் தயங்கும் காலகட்டத்தில் எழுதப்படும் கதை. அப்படிப்பட்ட புது தொன்மங்களை ஒவ்வொரு வரியிலும் உருவாக்குவதில் இந்த கதை வெற்றிபெற்றுள்ளது. ஜெசியா தினமும் மீன்களைத் தின்றுவிட்டு சமநிலையை உருவாக்குகிறாள். இதில் வன்முறையல்ல. அவளால் சமநிலை பேண முடியாத காலத்தில் அவளது நீலநிறம் கரையைத் தொடங்குகிறது. அதில் தொற்றிக்கொண்டு ராஜ்ஜியங்களை அமைப்பவர்கள் மேலேறிச் செல்கிறார்கள். அறியாததை அறியத் துடிக்கும் செயலே இன்றுவரை மனிதனை உந்தியுள்ளது. அதிலிருக்கும் ஈர்ப்பு அத்தகையது. ஆனால் அது உண்மைக்கு இட்டுச் செல்லுமா அல்லது போலியான உலகத்தில் ஆழ்த்துமா என்பதை நாம் அறிய முடியாது. அது ஒரு பயணம் மட்டுமே.

அசல் நகல் எனும் விசாரணைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது இந்தப்பயணம்.

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை