யாருமற்ற பாழ்வெளியில் - கோபி கிருஷ்ணன் & கோணங்கி

புயல் - கோபி கிருஷ்ணன் நமக்குத் தெரிந்த சிறுகதை எனும் பாணியிலிருந்து சற்றே விலகிய கதை . முடிவுக்கு மிக அருகில் தொடங்கும் கதை ஒரு உச்சகட்டத்தின் வெடிப்பில் முடியும் எனும் யுத்தியை விடுத்து எழுதப்பட்ட கதை . இதில் திட்டமிடல் இல்லை . கோபி கிருஷ்ணனின் கதை இயல்பே இதுதான் . ஆதவனும் கோபியும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் . மனித மனங்களின் விசித்திரங்களையும் , மனித உறவுகளால் உண்டாகும் விநோத ரச மாற்றங்களையும் கதைகளாக்கியவர்கள் . ஆதவனின் ' இரு நாற்காளிகள் ' கதை ஒரு உதாரணம் . எவ்விதமான பதில்களையும் சென்றடையாமல் நவீன வாழ்வின் சிக்கல்களை காட்டக்கூடிய கலைஞர் கோபி . நவீனத்துவ மனிதனின் பாசாங்குகளை வெளிப்படையாக்கி அதற்கு மரபு சார்ந்த பதில்களைக் கொடுக்காதவர் . மனிதன் தனிப்பட்ட மிருகம் . அவன் இந்த சமூகத்தில் வாழ்வது வழியே தனது இயல்பையும் , தன்னுடன் வாழும் மனிதர்களின் இயல்பையும் முடிவு செய்கிறான் . அவனது குழப்பங்களுக்கும் , வாழ்வியல் போராட்டங்களுக்கும் மரபிலும் மண்ணிலும் பதில் இல்லை ...