முயலகனின் புன்சிரிப்பு - புதுமைப்பித்தனின் அன்று இரவு சிறுகதையை முன்வைத்து - 2




பகுதி 1

அன்று இரவு கதையின் தரிசனம் எப்படிப்பட்டது? பிரமிள் அதை ஏன் சநாதனிகளுக்குக் களிப்பூட்டும் படைப்பு என்கிறார்? சமய மைய தரிசனமான பக்தியும்,  வீடு பேறும் இப்புராணங்கள் சொல்லும் அடிப்படை தத்துவம். அன்பு அருளாகிறது, அருள் தரும் கொடை பக்தி. பக்தி வீடுபேறுக்கான விடுதலை மார்க்கம். இப்படிப்பட்ட ஒரு கதையை புதுமைப்பித்தன் நவீன வாசிப்புக்கு உட்படுத்துகிறார். இங்கு காணும் எல்லா உள்ளங்களுமே தர்மத்தின் மீது தீராத மோகம் கொண்டவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தான் சொன்ன பொய்யை எண்ணி வெதும்பிப்போகிற வாதவூரர் மானுட சோகத்தை தன்னுள் கொள்பவர். அரசன் சொல்கிறான் - "நான் ராஜ்ஜியத்தை சுமக்கிறவன்" - அரச நீதியைத் தவிர எதற்கும் தலைவணங்காத பாண்டியன்.

அதற்கு பதில் சொல்லும் வாதவூரர் - "அரசே, நான் உலகின் துயரத்தை, வேதனையைச் சுமக்கிறவன்", என்கிறார். பொய்யான உலகை விட்டு விடுதலைப்பெறமுடியாமல் துன்பத்திலே உழல்பவனின் தூதுவனாகப் பேசுகிறார். அரச மந்திரியான அவருக்கு வீடு பேறு என்பது பெயரளவில் மட்டும் தெரியக்கூடியது. தெய்வ அம்சத்தோடான அருளைப் பெற்றவராக ஆகும்வரை. பிரபஞ்சமும் அண்டபகிரண்டமும் அனந்தகோடி ஜீவராசிகளும் ஆழ்ந்துள்ள நித்திரை என மாயையை புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார்.

விளையாட்டாக வாதவூரரை தன்வசப்படுத்திய ஈசன் அவனது நிலையைக் கண்டு வருந்தினான். வாதவூரனின் உள்ளம் பொய்யை மெய்யாக்கிக்காட்டிய ஈசனிடம் அடைக்கலம் புகுந்திருந்தது. தன் அற்ப ஜீவனுக்காக உண்மையை நிலை நாட்ட குதிரைகள் கொடுத்துவிட்ட ஈசனை நோக்கி மனம் கசிந்தார். ஈசனோ, தனது உண்மையான பக்தனை தனது லீலையினால் அரச குற்றத்தைச் செய்யத் தூண்டினோமே என வருத்தப்படுகிறார்.

வாதவூரராக மாறிய ஈசனை எண்ணி அங்கயற்கண்ணி சிரிக்கிறாள்.

ஈசன் மதுரை வைகை வெள்ளத்தின் குதித்து தன் கோபத்தை பல மடங்காக்கிக்கொண்டான். 

அங்கயற்கண்ணி இந்த மாய விளையாட்டைப் பார்த்து மேலும் பலமாகச் சிரிக்கிறாள். ஈசனுக்கு இதுவும் மாயை எனத் தெரியாமல் போய்விட்டெதென அவளது சிரிப்பு முதற்காரணனின் தத்துவத்தை நோக்கிய கெக்கெளிப்பாக மாறியது. ஈசன் வைகையில் கும்மாளி போட்டுக்கொண்டிருந்தான்.

இப்போது ஈசனின் பொற்பிரம்பு அரசன் கையில்.

வைகை அணைய அடைக்கத் தண்டிக்கும் பொற்பிரம்பு. மதுரைவாசிகள் வேகமாக மண்ணள்ளிப்போட்டு வையையின் பிரபஞ்ச ஆட்டத்துக்கு அடைபோட முயன்றனர். குமிழென அவர்களது முயற்சி எல்லாம் மண்ணில் மறைந்தது.

பசியோடு மண்ணள்ளும் மதுரைவாசிகளுக்கு ஆச்சி புட்டு செய்து கொடுக்கிறாள். பொற்பிரம்பு அவளையும் தீண்டுகிறது. இன்னொரு பக்தனுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தால் தான் ஈசனன்று எனப் பதறி புட்டு கொடுக்கும் குடிலை அடைகிறார். ஆச்சியின் கணக்குக்கு மண் அள்ளிப்போடுவதாக வாக்குக் கொடுத்துவிட்டு சுவையான புட்டைச் சாப்பிடுகிறார். புட்டு அவருள் ஐக்கியமாகிறது. புட்டு அவனாகிறது. ருசியில் கரைந்து தூங்கிவிடுகிறார் ஈசன்.

ஆச்சியின் பங்கு அடையாதது கண்ட பாண்டியன் பொற்பிரம்பை வீசத் துணிகிறான்.

புராணத்தில் இல்லாதபடிக்கு அருளாளனாகிறான் பாண்டியன். அடிவாங்கிய ஈசனின் சிரிப்பு பண்மடங்காகியது.நீதிக்கு சிரம் தாழ்த்துபவன் ஆடல்வல்லானின் லீலையைப் புரிந்துகொள்கிறான். புரண்டோடும் வைகையில் குதித்துச் செல்லும் ஈசனைத் தொடர்ந்து பாண்டியனும் குதிக்கிறான். நீராகும் ஈசன், குற்றமற்றவன் வடுவூவாரார் என நிரூபிக்கும் வண்ணம் அறத்தின் ஓலையாக ஈசனுக்குக் குதிரைகள் பெற்றுக்கொண்டதாக எழுதித்தந்த முறிச்சீட்டு அவன் கையில் கிடைக்கிறது. பொற்பிரம்பு பிடித்த கையில் இப்போது தருமத்தின் கைச்சீட்டு.

அங்கையற்கண்ணியின் ஆட்டம் தொடங்கியது. பொற்பிரம்பு தீண்டிய வடுவோடு ஈசன் அவளுடன் இணைந்துகொண்டான். பிரபஞ்சம் கிடுகிடுக்க ஆட்டம் தொடங்கியது. சுழன்றாடியபடி அண்டசராசரம் பேயாட்டம் போட்டது. அமைதி திரும்பியது அருள் சுரந்தது. முயலகனை அழுந்த உட்கார்ந்திருந்த ஜோடியினர் மடியில் பாண்டியன் குழந்தையென உட்கார்ந்திருக்கிறான்.

பொற்பிரம்பு ஒரு பிரபஞ்ச லீலையை நிகழ்த்திவிட்டுருந்தது.

ஈசனாக, அன்னையாக, வடுவூரனாக, புட்டாக, ஆச்சியாக, தருமமாக, தண்டனையாக, குழப்பமாக, தீவினையாக பொற்பிரம்பு சுற்றி வந்து அருளாளனின் பொற்கரங்களில் மீண்டும் தவழ்கிறது.

வீடுபேறு அடைய நினைப்பவர்களுக்கு விரோதிகள் பல. மானுட வாழ்வு ஒரு மிகப்பெரிய வேதனை என்பது முதல் அத்வைத நிலை. அதை நினைக்க வைப்பதும் ஈசனே. நீதிக்கும் மேலாக வீடுபேற்றையும், விடுதலையையும் முன்வைக்கும் அசாத்தியமான சிறுகதை இது. அத்வைத நிலையிலிருந்து அடுத்த நிலைக்குத் தாவிச்செல்லும் ஒரு முதிர்ந்த கதை சொல்லியின் குரலை நாம் இங்கு கேட்க முடிகிறது. செங்கோலான பொற்பிரம்பு தண்டனைக்கருவியாக மாறியபின்னரும், கைம்மாறாக பாண்டியனின் கைகளில் ஈசனின் சொற்கிழி கிடைக்கும் பேரருளாளர்கள் உலவும் கதையாக இதை மாற்றியிருக்கிறார் புதுமைப்பித்தன். எல்லாமும் பொற்பிரம்பாக ஆகும் தருணம், அங்கையற்கண்ணியின் ஆடலுக்குள்ளும் புகுந்துவிடுகிறது. முயலகனின் கோரப்பற்களின் புன்சிரிப்புனூடாக ஒரு எளிய எழிலாக பொற்பிரம்பு மின்னுகிறது. இதைத்தான் பிரமிளும் சநாதனியின் பார்வையிலிருந்து சிகரத்தை எட்ட முடிந்த கலைஞன் எனக் குறிப்பிடுகிறார்.

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை