மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"
சுரேஷ் பிரதீப்பின் சொட்டுகள் கதையின் நாயகி வளர்ந்து முதல் வேலைக்குப் போகும்வரை ஷவரில் குளித்ததில்லை. பக்கெட்டில் சேர்த்து வைத்த தண்ணீரில் மட்டுமே குளித்துவந்தவள். வேகமாக ஓடும் ஆற்றில், அருவியில் என நீரின் இயல்பான ஓட்டத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டது கிடையாது. அவளது எந்த செயலும் அம்மாவைக் கோபப்படுத்தும். அதற்கான காரணங்கள் கதையில் இல்லாவிட்டாலும் நம்மால் ஊகிக்க முடிகிறது. குடும்ப வாழ்வினால் வீழ்ச்சியைச் சந்தித்த அவளது ஆற்றாமை கரிப்பாக எல்லார் மீதும் முடிகிறது வெளிப்படுகிறது. சிறு வயதிலிருந்து அப்படி சீண்டப்பட்டு வளர்ந்தவள் வேலைக்குச் செல்லும்போது வீம்புக்காக பூனாவில் வேலை தேடிக்கொள்கிறாள். தன்னை விட்டு விலக நினைக்கும் பெண் மீது சகலவிதமான அச்சுறுத்தல்களையும் அவளது அம்மா பிரயோகப்படுத்துகிறாள். அம்மாவுக்குத் தாங்க முடியாத வேதனை தருகிறது எனும் எண்ணமே பெண்ணின் வெற்றியாகிறது. அவளால் இயன்றவரை அம்மா மீது வன்மத்தை கொட்டுகிறாள். தன்னுள் விழுந்த சொட்டின் முதல் சுவையை அவள் அறிந்துவிட்டாள்.
முதல் முறை ஷவரில் குளிக்கும்போது புதுவிதமான நீரை அறிகிறாள். ஓடும் நீர். உடலின் ஒவ்வொரு துளியிலும் பட்டுத் துளிர்க்கும் உணர்வை மீட்டும் நீர். அதுவரை உடல் தெரியாதபடி, பட்டும் படாமல் தீண்டும் குளிகையில் ஈடுபட்டவள் முதல் முறையாகச் சுதந்திரமாகக் குளிக்கிறாள். அது அவளது சுதந்திர உணர்வுகளை மீட்டுவதோடு ஆழ்மன பரவசங்களை வெளிக்கொண்டுவருகிறது. முழுவதும் நிர்வாணமாக குளியலறைக்குள் நிற்பது படஅவளைச் சுற்றி வாழ்பவர்கள் முகங்களில் உமிழ்வது போலொரு வெளிப்பாடாகிறது. துளைத்துப் பார்க்கும் பார்வைக்கு அவள் பயப்படுவதில்லை. அவள் வெளிப்படுத்த நினைக்கும் உணர்வுகளுக்குத் தடைபோடும் சூழலை வெறுக்கிறாள். குளியலறை அவளுக்கு ஒரு அறைகூவலாகிறது. மெல்ல தனக்குள் உணரும் சுதந்திரம் திரைபோலச் சூழ்ந்த அவளது உணர்வுகளை உதிர்ப்பதைக் காண்கிறாள்.
குளியலறைக்குள் நுழைவது அவள் மனதில காமத்தைக் கிளப்புகிறது. பல ஆண்கள் சூழ நிற்கும்போது தனக்கென ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் கட்டற்ற மனோபாவத்தைத் தருகிறது. அந்த உணர்வு நெடு நாட்கள் நீடிப்பதில்லை. மனத்திரை உடைந்து தெரியும் மிருகத்தை அவள் வெறுக்கிறாள். தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் சொல்லப்படும் வாழ்வும் சொல்லப்படாத வாழ்வும் எப்படி இருவேறு எல்லைகளில் இருக்க முடியும் எனக் குழம்புகிறாள். தில்லியில் கணவன் விக்னேஷை அடைந்ததும் இப்படிப்பட்ட இரு எல்லைகள் இருக்காது எனும் அறியாமையினால் தான். இவளது மன அகங்காரங்களை உணராதிருந்த விக்னேஷை அவள் தன் இயல்புப்படி சீண்டி விளையாடுகிறாள். தனது அம்மாவிடமிருந்து பெற்ற சொட்டு என்பதை உணராது அவளால் அவனைச் சீண்ட முடிந்தது. முதலிரவின்போது அவனுக்கு முன் அனுபவம் இருக்கிறது என அறிய வரும்போது தொடங்கிய சீண்டல் இது. ஏமாற்றத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அடுத்த நாள் ஷவரில் குளிக்கும்போது ஒரு பலகீனமான நேரத்தில் அவளது அம்மாவிடம் தோற்றுப்போனதை உணர்கிறாள்.
அதுவரை பலமாக இருந்த அவளது பாவனைகள் இப்போது அவளுக்கு எதிராகத் திரும்பியது. அவளது பெண் ரேகா பிறந்ததும் தனக்குள் ஒடுங்கிப்போனவளானதை உணர்கிறாள். எந்த அறை அவளுக்கு மன அகங்காரத்தை அளித்ததோ அதே அறை அவள் ஒடுங்கித் தப்பித்துக்கொள்ளும் இடமாக மாறுகிறது. அவளது பெண் தன்னை ஒத்த பாவனைகளோடு வளர்வதைப் பார்க்கிறாள். உள்ளுக்குள் மேலும் ஒடுங்குகிறாள். ஆனால் தாய் எனும் இடத்தை மீறி மற்றொரு ஜீவராசியாக அவள் மாறும் நுட்பமான இடம் இந்த சிறுகதையில் உண்டு. இந்த சிறுகதையைச் சிறப்பானதாக மாற்றுவது இந்த நுட்பம் தான்.
என்னை எதுவும் கேட்க்ககூடாது, நான் அலைவதை நீ கண்டிக்கத் தேவையில்லை எனச் சொல்லும் ரேகாவை அவள் அம்மா பெண்ணாகப் பார்க்கவில்லை. அந்த ஒரே ஒரு கணத்தில் அவள் எண்ணுகிறாள் - “நான் என்னைப் பணயம் வைத்து வந்த இடத்திற்கு இவள் எந்த இழப்பும் இல்லாமல் வந்து சேர்ந்திருக்கிறாள்.” அது பொறாமையா, ஏமாற்றமா, பயமா எனும் இடத்தில் கதை நிகழ்வதே எழுத்தாளரின் வெற்றியாகியுள்ளது.
கதையின் முக்கியமான கட்டம் இதுதான். விடுதலையற்ற இந்த உலகில் நம்மை கீழிறக்கி வீழ்த்தும் விசைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். நம் வீழ்ச்சிக்கான காரணங்கள், நம் மனதை மறைக்கும் திரைக்கான விரோதிகள் எங்கிருந்தும் வரலாம். ஆனால் அவற்றுக்கு ஒரு நியாயமான காரணம் இருந்தாகவேண்டும் என மனித மனம் எதிர்பார்க்கிறது. துரதிஷ்டவசமாக, சிறுவயதில் கொடுமைகளை அனுபவித்தவர்கள் தங்கள் மனம் இறுகிப் போவதற்கு தங்கள் வாழ்விலிருந்து காரணத்தைக் கொடுப்பார்கள். சமூகம் அவர்களுக்குண்டான நியாயங்களை பார்க்கிறது. ஆனால் அப்படி இல்லாத பொய் பாவனைகளும், அகங்காரங்களையும் நாம் எப்படி எதிர்கொள்வது? அப்படி கூனிக்குறுகி குளியலறையில் குழாய்க்கு அடியில் அவள் இருக்கும்போது “இடியட்” எனத் திட்டும் தனது மகள் ரேகாவை தனது அம்மாவைப் பார்க்கிறாள். பழமைவாதிகள் அதை விதி எனலாம். ஆனால் அப்படியான வாசிப்பு இந்த கதையில் இல்லை. மனதின் ஆழத்தில் அலைகழிக்கும் பிடிபடாத இருள்கள் எவ்விதமான விதிகளுக்கும் உட்பட்டதல்ல எனும் பதிலை ஒருவர் கண்டடையலாம். அப்படி தலைமுறைகளில் வழிவழியாக சொட்டும் இந்த அகங்காரங்களும், பாவனைகளும் மனித தர்க்க மனதின் நியாயங்களுக்கு அப்பார்பட்டது. அது புரியாதவரை புனைவின் தேவைகளுக்கு குறைவிருக்காது.
கிழக்கு பதிப்பகம்
மிக்க நன்றி. சொட்டுகள் சிறுகதையின் இணைப்பு
ReplyDeletehttp://sureshezhuthu.blogspot.com/2018/07/blog-post.html?m=1