அத்தாவர விரல்களை விட்டுவிட்டு வராதே


இந்தியாவில் இந்த முறை பல நண்பர்கள், விட்டுவந்த உறவுகளை சந்திக்க முடிந்தது. எல்லாரிடமும் ஒரு மணி ரெண்டு மணி நேரங்கள். நலவிசாரிப்புகள், தினவாழ்க்கை சக்கரங்களைப் பகிர்வதற்குள் அடுத்தகட்ட அழுத்தங்களில் அவரவர். யாருமில்லை யாருக்கும். கூதிர்காலச் சிலைகள் போல பளீரென தோன்றும் சில சித்திரங்கள் பால்யத்தை நினைவூட்டின. சிறு நகர காலைகள் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியரால் நிரம்பியிருந்தது. வழியச் செல்லும் ஆட்டோக்களில் பள்ளிச்சீருடைகள் சிரிப்பை அணிந்து சென்றபடி இருந்தன.கனத்த புத்தக மூட்டைகளில் நெல்லிக்காய்களிடையே நேற்று சேகரித்த நட்பும் சண்டையும் கலந்திருக்குமா? பாரபட்சமற்ற வெயிலில் விபூதி பட்டைகள் கரைந்திருப்பது அறியாது தெப்பகுளத்தைச் சுற்றுவது போல நெற்றியைச் சுற்றி துடைத்துக்கொள்ளும் சிறுவர்கள். கூட்டத்தில் எங்கோ என் நண்பனையும், நான் எங்கோ பார்த்த நன்கறிந்த மற்றொருவனும் கலந்து செல்லும் சித்திரம். நானே உள்ளிருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்த சிறுவனின் நடை என்னை விட்டு நீங்கவில்லை. அத்தனை இயல்பு அதே சமயம் அந்த வயதில் மட்டுமே சாத்தியமாகும் வெகுளித்தனம். பெரியவனாக மாறும் பாவனை. நண்பனிடம் ஏதோ திட்டத்தை விவரிக்கும் சாக்கில் சட்டென சிரித்ததில் முயல் குட்டி போல அங்கும் இங்கும் குதிக்கும் களிப்பு. 

கவிஞர் சபரிநாதனின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது. என் சிறுவயதும். பல தாவர விரல்களை விட்டுவிட்டு ஓடிவிட்டு வந்தவன்..

குசக்குடித்தெரு
---------------------------

வயோதிக மின்விளக்குகளின் சாலையில் நடப்பவன் திரும்பிப் பார்க்கிறேன்.
சிறுவன் ஒருவன் வருகிறான் தெருமுக்கில்
நினைவின் தூண்டிலுக்கும் மறதியின் வலைக்கும்
எட்டாத தூரத்தில் ஓர் ஒற்றை நாடி முகம்
அவனுக்கு எப்படி கிடைத்தன என் பழைய உடைகள்
கையசைத்து நிற்கச் சொல்கிறேன்:

வராதடா தம்பி அங்கேயே இரு
அதை விட அழகான தெரு உலகில் இல்லை
அதை விட அழகான பெண்களைச் சந்திக்கப் போவதில்லை நீ
பகற்போதுகளில் சுற்றியும் சுழலாத மரச்சக்கர நிழல்களை வெறித்துக்கொண்டு
லாந்தர் வெளிச்சத்தில் கொதி குழம்புகளின் வாசமிடை கதை கேட்டுக்கொண்டு
அங்கேயே இரு..அத்தாவர விரல்களை விட்டுவிட்டு வராதே

ஆயினும் அவன் வருகிறான்..அருமை வாசகரே
ஏழு வயதில் மட்டுமே ஒருவர் அறியக்கூடிய வகைப்படுத்தவியலாக் களிப்புடன்
அப்போது மட்டுமே வாய்க்கும் ஒரு நடை போட்டபடி
வந்து கொண்டிருக்கிறான் எனை நோக்கி

*
- வால் தொகுப்பிலிருந்து, குசக்குடித்தெரு, கவிஞர் சபரிநாதன்


Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை