என்றென்றும் தாழ்மையுடன் - விஞ்ஞானச் சிறுகதை


1

- வெய்யில் தாழ்ந்துடுத்துன்னா பெரிய கோயில் வரைக்கும் நடந்துட்டு வரலாமா?

- போலாம்..ஆனா மத்தியானம் செடிக்கு தண்ணி குத்த போகும்போது ஒரேடியா அனத்தித்து. கார்த்தாலேர்ந்து கால் வேற வீங்கிணபடியே இருக்கு.

- இன்னிக்கு கால் மாட்டிண்டுதா, தங்கம். எல்லாரும் நடக்கற தூரத்தில பீச்சும் , தீபாராதணை காட்டினா முத்தத்தில வெளிச்சம் படர தூரத்தில வீடு கிடைக்காதான்னு இருக்கா, நீவேற.

- நேத்து புவனா சொன்னபோது மட்டும் - ஆமாமா சுனாமி வந்தா தப்பிச்சு ஓடர தூரத்திலயாவது வீடு இருக்கணும்னு சொன்ன.

- காலவேனா இறக்கிவிட்டுக்கோ, ரத்த ஓட்டம் இருந்தா விறுவிறுன்னு இருக்கும்.காபி வேணா போடட்டுமா?

- வேணாம். மத்தியானம் சாப்பிட்ட பாலே நாக்குல சுழட்டிண்டே இருக்கு. போகும்போது அந்த ஜன்னல திறந்துட்டு போ.

- நானாவது கொஞ்சமா சமையல் உள் வர நடந்துட்டு வரேன்.

- ஓடிட்டுதான் வாயேன். என்ன , போன மாசம்தானே அறுபதாங்கல்யாணம் கொண்டாடினே.

- ஆமா, அப்பல்லாம் சாங்காலம் ஆச்சுன்னா அவர் வர்ற வண்டி சத்தத்துக்காக காத்துண்டிருப்பேன். ஜன்னல் கிட்ட நின்னாலே அவருக்கு பிடிக்காது.என்னவோ இந்த புருஷாளுக்கெல்லாம் ஒரு கோவம் வருதும்மா.

- சொல்லணுமா..அவர் போகும்போது அம்பத்தஞ்சு இருக்கும்லடி,விஜி? ரமா அப்பாக்கும் அந்த வயசிருக்குமோ ?

- ம்ம்..இருக்கும். அவ குழந்தை கண்ணத்துல அழகா குழிவிழறது பாத்தியா, நம்ப பாபு மாதிரியே..

- பாபுன்னு சொன்னவுடனே உன் குரல் தழுக்க ஆரம்பிச்சிடறது, சமையல் கட்டுல விசும்பாதடீ, தங்கம். எனக்கு உன்னமாதிரி காதுமந்தமில்ல.

- ஆமா..உனக்கு எப்படித்தான் இந்த வயசிலயும் பாம்பு காதா இருக்கோ? நேத்து டிவி பார்க்கும்போதுகூட யோசிச்சேன். கோகிலா 'ரோஸ் பாபுன்னு' கூப்பிடுவா இல்ல.

- உம்பொண்ணுக்கு என்னவேலை? சதா பாபுவை கொஞ்சிண்டே இருப்பா. ரமா காத்தால வந்து ஏதோ ஒன்கிட்ட பேசிண்டிருந்தாலே. இந்த நேரத்தில போய் குளிக்க வந்துட்டோமேன்னு இருந்துது. என்ன சொன்னா அவ?

- அவ வரும் போதே நினைச்சேன். எப்படியும் நீ இருந்தா அவ்வளவு பாந்தமா என்கிட்ட பேச மாட்டா.

- அது தெரிஞ்சது தானே. என்ன சொன்னா சொல்லு.

- காபி ஆறரத்துக்குள்ள சாப்பிடு.இந்த கதையை சொல்ல ஆரம்பிச்சா போய்ண்டேயிருக்கும்.இன்னிக்கு நேத்திக்கா புலம்பறா ரமா. வரிசையா மல்லுக்கட்டி இவன் சரியில்ல கட்டிண்டது விளங்களன்னு எல்லாபக்கத்தையும் நோண்ட ஆரம்பிச்சிடுவா புருஷா மாதிரி. அச்சு அப்பான்னு நினைச்சா சில சமயம் அவ அப்பாவே தேவலாம்னு ஆய்டும்.

- பால் சுழட்டலோட காபியே தேவலாம் விஜி.இந்த மாசம் கோகிலா வரணும் இல்ல , தேதி சொல்லிட்டாளா.

- நேத்து ராத்திரி போன் வந்து நின்னுபோச்சு. அவளா இருந்தா காத்தால ஒருதடவை பண்ணுவா.இவ்ளோ லேட்டாவா பண்ணுவா? நீ சும்மா தேதி பத்தி ஞாபகப்படுத்திண்டே இருக்காத. அவ ஆம்படையான் இருக்கும்போது என்னிக்கு பண்ணியிருக்கா? நீ பாட்டுக்கு அவளுக்கு போன் பண்ணாத தெரியறதா. யார் வாங்கி கட்டிக்கறது? ரமா பேச்ச மறக்கறத்துக்குள்ள சொல்லிடரேன்.இந்த மாசம் அவ பொண்ண டாக்டர் கிட்ட கூட்டிண்டு போகப்போறாளாம். அப்பல்லோல புது டாக்டர்கிட்ட காட்டப்போறாளாம்..

- போன மாசம் கூட போய் பாத்தா. புது ஸ்பெஷலிஸ்ட் வரணும்னு சொன்ன.அதுதான் சொல்லிட்டியே.புதுசா என்ன சொன்னா?

- அது ஜுர டாக்டர் இல்ல. இப்பல்லாந்தான் எல்லாத்துக்கும் மனோதத்துவ டாக்டர்கிட்ட கூட்டிண்டு போறாளே.உடம்புக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லுவா ஆனா மாத்திரை மருந்துன்னு ஆயிரத்த வாங்கிடுவா.டிவில நேத்து பார்த்த டாக்டரும் அதானே சொல்லிண்டிருந்தார். மனசுல குழப்பமிருந்தாகூட உடம்ப பாதிக்கும்னு.

- உனக்குதான் புரியறது இதெல்லாம். அக்கடான்னு இருக்கும் போதே சொல்ற எதுவுமே புரியாமாட்டேங்கறது , அப்பதான் மிக்ஸி அரச்சிட்டுவேற வந்தேன். டாக்டர் பேசாறார்னு மட்டும்தான் புரிஞ்சுது. ரமா பாபுவ கூட்டிண்டு போகும்போது நீயும் கூட போ. அவளுக்கு இதெல்லாம் தெரியுமோ இல்லியோ.

- பாபு இல்ல, சுமதி.அவ அப்பாவையே கூட்டிண்டுபோப்போறதில்லையாம்.நீ இதெல்லாம் அவகிட்ட கேக்காத தெரியறதா?

- அவ என்னோட எங்க பேசப்போறா? ஒரே தலை சுத்தலா இருக்கு.

- காபி வேலைதான் அது. பேசாம கால நீட்டுண்டு படுத்துக்கோ, ரசத்தை நான் வெச்சிடறேன்.

- கோகிலா போன் வந்தா மட்டும் எழுப்பு.

2

- ஸ்கூலுக்குப் போய் எவ்வளவு நாளாச்சு?

- நான் அங்க போகப்போறதில்ல அங்கிள். வீட்லயே இருக்கேன்,மாத்திரை சாப்பிடரேன்,நேச்சர்ல அடுத்த மாசம் நான் எழுதின ஆர்ட்டிகள் இஸ் கெட்டிங் பப்ளிஷ்ட். ஐ கேன் விஸிட் யூ ஒன்ஸ் எ மந்த்.போதாதா?

- உன் பிரண்ட்ஸையெல்லாம் மிஸ் பண்ண மாட்டியா? நீ மட்டும் ஸ்கூல் போகாதது எதனாலன்னு நினைக்கற? ஐயம் ஆஸ்கிங் யூ லைக் எ பிரண்ட்.கொஞ்சம் சாய்ஞ்சு உக்காந்துக்கோமா.

- சுமதி டாக்டர் சொல்றத கேளு.கேளண்டரை அப்புறம் பார்க்கலாம்.

- காதால கேட்டுண்டுதானிருக்கேன் அம்மா. எனக்கும் ஸ்கூல் பிடித்திருக்கிறது. ஐயாம் குட் பிரண்ட்ஸ் வித் மை கிளாஸ்மேட்ஸ். ஆனாலும் என் இஷடப்படி வீட்லேர்ந்து படிக்கறேன்.

- நீ நல்லா படிக்கற பொண்ணு, ரொம்பவே அறிவு அதிகமா இருக்கு. எல்லா சப்ஜெக்டிலையும் நிறைய மார்க் வாங்கரன்னு உன்னோட டீச்சர் சொன்னாங்க.யூ இவன் எக்ஸல் இன் ஸால்விங் பஸ்ஸுல்ஸ்,வொக்காபிலரி. இந்த வருஷம் ஸ்கூல் டாப்பரா வருவேன்னு சொன்னாங்க. ஸ்கூலுக்குப் போனாதானே முடியும். டெல் மி சுமதி, ஏதாவது பயமாயிருக்கா ஸ்கூல்லியோ, இல்ல போற வழியிலையோ?

- இன்னிக்குப் பேப்பரை பார்த்தீங்களா டாக்டர்?

- தினத்தந்தி, எக்ஸ்ப்ரெஸ் எல்லாத்தையும் ஒரு நோட்டம் விடுவேன்.பார்த்தேனேமா.இந்தா பேப்பர், உனக்கு எந்த நியூஸைப் பத்திப் பேசணும்?

- நானும் படிச்சேன் டாக்டர். டிவி கூடப் பார்த்தேன். ஒரு ஆக்ஸிடெண்ட், ரயில் விபத்து, வக்கீல்-போலிஸ் பிரச்சனை, மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதி விஷயம், ஒரே பெண்ணுக்கு எட்டு குழந்தை பிறந்த அதிசயம், தேர்தல் கூட்டணி ஆலோசனை,சென்னையில் புது தொழிட்சாலையால் இட நெருக்கடி இது தவிர வேற ஏதாவது இருக்கா டாக்டர்?

- இந்த விஷயத்தையெல்லாம் படிச்சு பயப்படறியாமா?

- பயமில்ல டாக்டர்.ரொம்ப நாளா இருக்கிற குழப்பம்.ராத்திரி தான் அந்த குழப்பம் அதிமாகிறது.நானும் இந்த மாதிரி செய்தியை படிப்பேனா இல்ல இந்த செய்திகளாகவே மாறப்போறனான்னு குழப்பமா இருக்கு. என்னோட பாட புத்தகத்துல இதை பத்தியெல்லாம் ஒண்ணுமே இல்லையே? அப்போ எதுக்கு நான் ஸ்கூலுக்குப் போகணும், படிக்கணும், இதே மாதிரி வன்முறையை மத்தவங்க மேல செலுத்தணும்.

- நீ சின்ன பொண்ணு.இதெல்லாம் பெரியவங்க விஷயம்.அவங்க பார்த்துக்கப்போறாங்க. நீயும் பெரியவள் ஆனதுக்குபிறகு இதைப்பத்தியெல்லாம் கவலைப்படலாம்.

- இதை கேட்கும்போது போன வருஷம் பாரதியார் பிறந்தநாளுக்கு பாடின "காண்பதெல்லாம் மறையுமென்றால்" வரிதான் டாக்டர் ஞாபகம் வருது.புத்தகத்தை மூடும்போது கடைசியாக மிஞ்சிய பக்கம் காமிரா ஷட்டர் மாதிரி அடுத்த வினாடி காணாமல்போகுது. அந்த எடத்தில் தினம் காணும் நிஜம் உட்கார்ந்துவிடுகிறது.

- நீ ரொம்ப வயசுக்குமீறி யோசிக்கறமா.இந்த வயசுல இதெல்லாம் தேவையா? ரமா, நீங்க ஏன் ஒரு மாசம் லீவுக்கு சுமதியை உங்க ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கு கூட்டிப் போகக்கூடாது ?

- இந்த நாடகத்துக்கு முன்னாடி என்னை ஏமாறச்சொல்றீங்களா டாக்டர்? திஸ் இஸ் எ ப்ரிடெக்ஸ்ட்.இந்த பொய் தோற்றங்களெல்லாம் எப்பவுமே மாறாது டாக்டர். இந்த கோமாளித்தனத்திலிருந்து எப்பவுமே எங்களுக்கு விடுதலை கிடைக்காது.

- சுமதி,இதோ பாருமா. இந்த மாத்திரையை சாப்பிடு. பெரிய வார்த்தையெல்லாம் பேசற.யாருக்குமா விடுதலை?

- இது சின்ன விஷயமாகத்தான் தெரியும் டாக்டர். ஆனா தினப்படி நடக்கிற விஷயத்துல எவ்வளவு குழந்தைகளுக்கும், நீங்க சொல்கிற சின்ன வயசுக்காரங்களுக்கும் சாதகமா இருக்குன்னு நினைக்கிறீங்க? டிவி,பேப்பர்,சினிமா,பத்திரிக்கைகள் இதுல வர்ற ஒருவிஷயம் கூட நீங்க சொல்கிற சின்னவர்களுக்காக ஒரு நிமிடமாவது யோசிச்சுப்பார்க்கிறதா? இது எங்கமேல திணிக்கப்படுகிற வன்முறையா எனக்கு படுகிறது.

- வன்முறையா?

- அடிப்பதிலியோ,திட்டுவதிலோ உள்ள வன்முறையைவிட இது இன்னும் சக்தி வாய்ந்தது.ஹோம் ஸ்வீட் ஹோமில் ஆரம்பிக்கிறது இந்த வன்முறை. சிறுவர் நிகழ்ச்சிகளிளோ, வாரம் ஒரு நாள் வெளியிடும் சிறுவர் பத்திரிக்கையினாளோ இதை சரிகட்டமுடியாது டாக்டர்.எந்த காலத்திலும் இருக்கும் ஒரே விஷயம். நீங்க ஜார்ஜ் ஆர்வல் எழுதிய 1984 படித்திருக்கிறீர்களா?

- இல்லை. அதுவும் டொமஸ்டிக் வயலன்ஸ் பத்தியாமா?

- நான் சொல்றது டொமஸ்டிக் வயலன்ஸ் இல்லை டாக்டர். வரலாற்றின் வயலன்ஸ்.அந்த புத்தகத்தில் வருகிற "Thoughtcrime" தான் இங்கு நடப்பதும்.அதில்வரும் "thoughtpolice" போல் நம்முடைய ஊடகங்களும்,ஆட்சியின் சிந்தனைக் கூடங்களும் வைத்திருக்கும் சிறைதான் சிறுவர்களின் உலகம்.பெரியவர்கள் இதைப் பற்றி தெரிந்திருந்தும் இந்த கேளிக்கைகளுக்கு தங்களாலான விதத்தில் கொடை செய்கிறார்கள்.

- சுமதி,நீ ரொம்ப வித்தியாசமான தமிழ் வார்த்தைகளை கொண்டு பேசறியே?

- தானாகவே வந்துவிடுகிறது டாக்டர். நானேகூட வியந்திருக்கிறேன். சில சமயம் புது வார்த்தைகளை உற்பத்தி செய்ததுபோல இருக்கும்.ஆனால் அகராதியை திறந்து பார்த்தால் அந்த வார்த்தை அப்படியே இருக்கும். ஆனால் இதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.

- உனக்கு ஒண்ணும் இல்லைம்மா. நான் சில மாத்திரைகளை எழுதித்தருகிறேன்.ரமா, இதை தினம் இரண்டுதடவை கொடுக்கவேண்டும்.இந்தாங்க. அடுத்த வாரத்துக்கும் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் தர்றேன். அப்பல்லோல ஒரு புது ஸ்பஷலிஸ்ட் அமெரிக்காலேர்ந்து வரப்போறார்.பார்க்கலாம்.இந்த வாரம் சுமதி ஸ்கூலுக்குப் போக வேண்டாம். தினம் ஒரு பதினைந்து மணிநேரமாவது தூங்கட்டும்.


3

- மெதுவா மூச்சை இழுத்துவிடுங்கள்.இன்னும் சிறிது நேரத்தில் உஷ்ணவாயு போதிய அளவை அடைந்துவிடும்.

- நண்பரே! என் வேலையின் முதல் கட்டமாக உங்களை விடுவித்துவிட்டேன்.உங்கள் குழாய்கள் போதிய அளவு காற்று இழுக்காததால் மார்பு அடைப்பது போல தோன்றும்.சிறிது நேரத்தில் குளிர்ச்சி குறைந்தவுடன் மறுபடி நாடித் துடிப்பு பார்த்து,உஷ்ணவாயுவை அதிகப்படுத்திவிடுவேன்.

- இன்னும் இருபது நிமிடங்களில் பதிவு செய்யப்பட்ட மூளைப் பகுதிகளை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கலாம்.சரியாக இருக்கும்.

- நந்தனிடம் சொல்லிவிட்டாயா?

- நேற்றே பதிவிறக்கம் செய்துவிட்டேன்.இங்கு வருவதற்கு முன்னும் பலுக்கல் அனுப்பியிருக்கிறேன்.தயாராக உள்ளதாகவே சொன்னது. பிசகு ஏற்படாமல் வரிசைப்படி அவற்றை அடுக்கு கட்டளையிடுவது உங்கள் வேலைதானே நண்பரே?

- இதை இரண்டு நூற்றாண்டுகளாகத் தானே செய்துவருகிறேன்.ஒவ்வொரு கணமும் முடிச்சுகள் முக்கியம்.அவற்றை வேறு சரியாக பகுதிகளில் அடுக்கி, காலியான் பகுதிகளில் அடுத்து செய்ய இருக்கும் இரு லட்சம் மூடிகளையும் நீக்கவேண்டும்.ஒன்று தெரியுமா நண்பரே? நாள் ஒன்றுக்கு நந்தனின் பகுதிகளில் இரட்டிப்பு வேலைகள் நடக்கின்றன, எதுவும் கண்பாணிப்பாளன் கணக்கில் வராமல் செய்யும் செயல்பாடுகள்.ஒளிபரப்பியை நிறுத்தியுள்ளீர்கள் அல்லவா?

- குளிரை குறைக்கும் போதே அதையும் செய்துவிடுவேன், கவலைப் படவேண்டாம். சற்று பொறு..இளவன் வருகிறான்.

- இன்ஹ்ச் ட்ட்ல்க்ஜ்ன் உட்ச்கசாஜ்ர ட்ன்ன்க்?

- இந்த்ய் துல்யஹாமத் டெஉயஜ்ல் சின்பாரஜ்க் முடிச்கெலங்ல்.

- ஒளிபெருக்கி,கண்காணிப்பு மையத்தின் கேளான் இதெல்லாம் விட இளவனுக்கு பயப்படவேண்டியதாக இருக்கிறது. நாம் பேசுவது மட்டும் புரிந்தால் நிலைமை மோசமாகும். இந்த உயிருடன்படிக்கையை இதனாலேயே வெறுக்க வேண்டியதாய் உள்ளது. போன உயிருடன்படிக்கை மாநாட்டில் எடுத்த முடிவுகளுக்கு என்ன ஆயிற்று? உயிர் மீட்பின் செயல்பாட்டில் வருங்காலங்களில் எதிர்பார்க்கபடும் செலவு, இடப்பற்றாக்குறை பற்றிய கோரிக்கைகளை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் புதிய கணிணி செயல்பாடுகளை நந்தனை விட ஆயிரமடங்கு அதிகப்படுத்தவும் உத்தரவிட்டு பல புதிய சிக்கல்களுக்கு வழிவகுத்துவிட்டனர் கண்காணிப்புத் துறை.

- பல காலமாக நாம் மனு அனுப்புவது அவர்கள் நிராகரிப்பதும் சகஜமாகிவிட்டதே நண்பரே. மத்திய கண்காணிப்பு துறையில் உள்ளவர்களுக்கு நாம் அன்றாடம் பார்க்கும் அலுவல்களில் ஆர்வமில்லை. நம் கூட்டத்தை அதிகப்படுத்தினால் சரியாகிவிடுமா? எத்தனை உயிருடன்படிக்கை தொடர் சங்கிலியை தொடர்வது.இதற்கு ஒரு முடிவு வேண்டாமா?

- முடிவே அவர்களுக்கு தெரியவில்லையே. என்னுடைய அனுமானம் சரியானால் இப்போதே நான் மிகுதியான அளவிலிருக்கிறோம்.

- முதல்மனிதம் சொன்னதுபடி இப்போதுதான் மொழியை பரப்பும் உயிர்களை கொண்டுவந்திருக்கிறோம்.திட்டத்தின்படி இன்னும் அறிவியல்,கலை,வாழ்வியல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறதே?

- நம்மால் முடிந்ததைதான் செய்ய முடியும்.இதோ மூளை அடுக்குகள் ஒழுங்கே பதிவு செய்துவிட்டேன்.நரம்பு , முதுகுத்தண்டுகளில் மின்னதிர்வை செலுத்திவிட்டால்..இவர் யார்..103559.தபா.2666 தயாராகிவிடுவார்.

- .. விடுவாள். ஆதிகாலப் பெண்.பெயர் சுமதி.இதையும் கேளானுக்கு அனுப்பிவிடுகிறேன்.என் சங்கிலி முடிந்தது.நண்பரே சாந்தரின் பருப்பொருள் விதியின்படி உயிருடன்படிக்கை,சந்ததி மீட்பு,மீட்பில் உதவி மூன்றையும் செய்துவிட்டேன்.இனி விண்ணேற்றம் தான்.

- சுமதி, சுமதி கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் மூளை இயக்கத்துடன் நானோ சில்லையும் பொருத்திவிடுங்கள். தலைமை கட்டளை வரும்போது இந்த மஞ்சள் விள்க்கு எரியும்.அப்போது இந்த கரும்பொத்தானை அமுக்கவும்.

- நண்பரே..நந்தனிடமிருந்துதான் செய்தி.திடீரென கூட்டத்தை ஏற்பாடு செய்ய முதல்மனிதமிடமிருந்து பலுக்கல் வந்துள்ளது , பணியாளர் பதிவர் தரைமட்டத்தில் கூடச் சொல்லி உத்தரவு.

- அன்பரே இது அலைபரப்பு செய்தி.பலுக்கலுக்கு பதிலலித்துவிட்டேன்.நீங்களும் செய்துவிடுங்கள். சுமதி நீங்களும் வர வேண்டும்.


4.

- நண்பர்களே! இங்கே வீணான வார்த்தைகளைப் பேசி உங்கள் வேலைகளை வீணாக்கப்போவதில்லை. விவேகங்களின் உள்ள வேட்டையினால் சேர்ந்த நம் மனிதத்துவ கூட்டத்திற்கு செயல் விரையத்தின் விலை புரியும். என்றென்றும் போல் நான் கண்காணிப்புத் தள்த்திலோ, ஆராய்ச்சிக்கூடத்திலிருந்தோ இந்த் கூட்டத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால் இப்போது கிடைத்த செய்தியை உங்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளவே எனக்கு விருப்பமுள்ளது.

- செயல் விரையத்தைப் பற்றி உரை தேவையா?

- நண்பா பொருத்துக்கொள்.முதல்மனிதத்தின் பக்கத்தில் இருப்பவரை தெரியுமா?

- தெரியவில்லை.

- இதுவரை கணிணி, துகள் செயலர்கள் மூலம் செயல்பட்டுக்கொண்டிருந்த நமக்கு இன்று ஒரு மிகப் பெரிய திருப்புமுனை அமைந்துள்ளது. நம் சிந்தனை ,செயல்பாடு இவற்றிற்கெல்லாம் முட்டுக்கட்டையாயிருந்த பருப்பொருள் கணிணி இன்று நம் முன்னே செயலிழந்து,தன் வித்தையெல்லாம் துறந்து,அதன் கரிய விழிகளை திறந்து காட்டியுள்ளது.ஆம் நண்பர்களே!! நம் பால்வெளி மண்டலத்தின் ஒவ்வொரு பருப்பொருளும் நமக்காக, நம் கனவுகளுக்காக வேலை செய்யப்போகின்றன. நம் ஆதவன் ரேமண்ட் குர்ஸ்வேய்ல் என்னோடு சிறிது நேரத்திற்கு முன் இந்த செய்தியை பகிர்ந்துகொண்டார். அவரின் கனவு, நம் பலம். இது இருபது ஆண்டுகளாக அவர் கண்ட கனவு.

- இது நான் பிறந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னே நடப்பதென புலப்படுகிறது.எந்த நூற்றாண்டு இது?

- சுமதி, இது நூற்றாண்டுகள் என்ற கணக்கை தாண்டி இருக்கும் ஒரு யுகம்.இங்கே நேரம் செயல்களால் முடிவெடுக்கப்படுகிறது. உன்னை உயிர்மீட்க எங்களுக்கு ஐந்து மணிநேரமானது. இது சாந்தரின் பருப்பொருள் விதியின் ஒருபிரிவின்படி சரியான நேரமாகும்.

- நீ பிறந்த இயந்திர யுகத்தில் விமானத்தை கண்டுபிடித்து,சீரமைக்க பத்துவருடம் ஆனது. ஆனால் அதே இருநூறு வருடங்களுக்குப் பிறகு கால இயந்திரத்தை ஒரு மாதத்தில் வடிவமத்துவிட்டோம். நேரம் என்பது என்ன ஒரு மாயை பார்த்தாயா?

- நண்பரே ஐன்ஸ்டீன் விதிகளை தப்பென உணர்த்திய நம் யுகத்தில், நேரம் என்பது ஒரு மாயை , என்று அவரைப்போலவே அதற்கு ஒரு மகுடம் சூட்டுகிறாயே?

- பலுக்கலை நிறுத்தியதால் நாம் விருப்பப்படியெல்லாம் பேச முடியாது நண்பா. அவரின் பேச்சை கவனி.

- என்ன இவர் நமக்குத் தெரிந்த விவரத்தையெல்லாம் சொல்கிறானே என்று எந்த நண்பரும் நினைக்கவேண்டாம். இந்த இமாலய நாளில் நாம் நினைவுகூறவேண்டிய சில முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளன. இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் ரேமண்ட் அவர்கள் க்ரையானிக்ஸ் துறையின் வல்லுனர் என்று நம் எல்லோருக்கும் தெரியும். மிகக் குளிர்ந்த தட்பவெப்பத்தில் மனித உடல்களை பாதுகாத்து,அவர்களின் மூளை நரம்பு வடிவங்களை ஆராய்ந்து,பகுத்து ஒரு உன்னதமான தொகுப்பு செய்ய முடியுமென கற்றுக் கொடுத்தவர் இவர். தெரியாத விவரம் , அவர் நம் இயக்கத்திற்கு பின்புலமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், தன்னையே உறைய வைத்து நம் மீட்புச்சந்ததியின் மூலம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்தார். அவர் பிறந்த யுகத்தில் தான் எங்களின் முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாயின. நமக்கு அன்றாடம் தேவைப்படும் பல விவரங்களில் முக்கியமானது நமது மொழி. இந்த மொழி இருந்தால் தான் நம்மால் மீட்புச்சந்ததியினரிடம் பேச முடியும்.

- கேளானால் செய்ய முடியாததேயில்லை. மொழியின் தேவையை கேளான் கண்காணிப்பு அறையிலிருந்து கட்டுப்படுத்த முடியுமல்லவா நண்பரே?

- கேளானால் நம் மொழியின் கட்டமைப்பை பகுக்க முடியாது. அது இன்னும் ஆராய்ச்சியிலிருக்கும் ஒன்றல்லவா?

- மொழியாய்வாளர்களின் ஆராய்ச்சிபடி நம் தமிழ் மொழி தோன்றிய காலம் முதல் எண்ணூறு முறை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாயிருக்கிறது.இதன் மாற்றங்களை ஆராய்ந்து , பகுத்து நேனோ சில்லுகளில் சேகரிக்கவே நமக்கு பல நூறாண்டுகள் ஆனது. இதனால் உயிர் நீட்டிப்பு மற்றும் நமது உடலினுள்ள உயிரணு இறக்கும் வீதத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தாலும் உயிர்மீட்பு முறையில் வந்த நம் முன் சந்ததியினரால் மொழி மாற்றத்திற்கு ஈடுகொடுக்க
முடியவில்லை.நண்பர்களே, இதனால் க்ரையானிக்ஸ் முறைபடி பதப்படுத்தப்பட்ட உயிர்களை நான் பகுத்துக்கொள்ள ஆரம்பித்தோம். மொழி மாற்றமடையாமல் இருக்க சில உயிர்களை இருபதாம் நூற்றாண்டில் பதப்படுத்தி,நமது தேவைகளுக்கேற்ப அவ்வப்போது உயிர்மீட்பு செய்து,மொழியை மற்ற உயிர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம். இருபதாம் நூற்றாண்டில் நமது பேச்சு மொழிக்கும் எழுதும் மொழிக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கக்கூடும்.

- வேறுபாடு இருந்தால் இருவேறு மொழியல்லவா நண்பரே? இளவன் பேசும் மொழிக்கும் நம் தமிழ் மொழிக்குமுள்ள வேறுபாடு போல்?

- நண்பரே, இளவல் மொழி மாற்றமடைந்த தமிழ் மொழி, தெரிந்துகொள்ளுங்கள்.

- ரேமண்ட் அவர்களின் ஆராய்ச்சிபடி மொழிக்கு ஒரு குழுவையும்,விஞ்ஞானம்,அரசியல்,கலை என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு குழுவை ஏற்பாடு செய்துள்ளோம். இன்று நடந்த ஆராய்ச்சியின் முடிவுபடி நம் பால்வெளியிலுள்ள பருப்பொருள் ஒவ்வொன்றையும் கணிணிபோல் ஒன்றாக செயல்படுத்தி ஒரு மாபெரும் மண்டலமாக உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் நமக்கு என்றென்றும் சேகரிப்பு மற்றும் செயலகத்திற்கும் குறைவு ஏற்படாது.மொழி உயிர்மீட்பில் இன்று உயிரூட்டிய சுமதி என்ற பெண்ணை நம் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.சுமதி என்னருகே வர உத்தரவிடுகிறேன்.

- இந்த வழியாக செல்லுங்கள்.

- வாம்மா. உலக வரலாற்றின் சிகரத்திலுள்ள அறிவார்ந்த எதிர்கால சிந்தனையுள்ள சுமூகமான நம் கூட்டத்தின் முன் உன் முதல் வார்த்தை என்னவாக இருக்க விரும்புகிறாய்?

- வரலாற்றின் வயலன்ஸ்.

5.

- கோகிலா போன் செய்தாளா,விஜி.

- வழக்கம் போல அவ ஆம்படையான் பண்ணான்.சில சமயம் என் காது ஏன் இவ்வளோ தீர்க்கமா இருக்குன்னு இருக்குடீ.

- இந்த தடவையும் கத்தினானா? அவன் வாய்ல தான் என்னென்னவோ வருமே எப்போதும்.

- பாபு போனதுலேர்ந்து இப்படி ஆயிட்டாமாதிரி கதை அளப்பா கோகி.

- தங்கம்,திரும்ப சொல்றேன்னு நினைக்காத.நேத்தே கோயிலுக்குப் போகாதது என்னமோ போல இருக்கு. இன்னிக்காவது ஏதும் சாக்கு சொல்லாம வாயேன்?

- கோகி நிலமையை நினைச்சா பாவமா இருக்கு. சின்ன பசங்களுக்கு பாட்டு, கணக்கு,டிராமா போடரதும்மா சின்ன வயசுல இருந்த கோகிக்காக மனசு ஏங்க்றது தெரியுமா?

- பாபு போனதோட இவளை நினைச்சுதான் ரொம்ப தவிப்பா இருக்குடீ. என்னவர் விட்டுட்டுப் போகும்போதுகூட இவ்வளவு கவலைப்படல.சரி நமக்கு ஆனது போறது.கோகியையாவது நன்னா பாத்துக்கணும்னு நினைச்சேன்.

- டாக்டர் கிட்ட கூட்டிண்டுபோனாலாமா ரமா?

- அவள காத்தால செடிக்கு தண்ணி குத்த போன போது பாத்தேன்.

- அதான் சொன்னியே.அத பத்தி கேக்க வர்ரத்துக்குள்ள பேச்சு மாறிப்போச்சு. எழுபது வருஷமா பேசிண்டேதான இருக்கோம்,என்னவோ போ.

- இப்பவாவது சொல்லவிடு. டாக்டர் கிட்ட காட்டினாளாம். அவ பொண்ணோ எடக்கு மொடக்கா பேசிருக்கு போலயிருக்கு.

- இந்த காலத்துப் பொண்ணுல்ல , கொஞ்சம் தைரியமா பேசியிருக்கும்.

- சில மாத்திரையும் கொடுத்துட்டு,ஸ்கூலுக்கு போவேணாம் நல்லாத் தூங்கச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாறாம்.அப்புறம் அப்பல்லோல ஒரு ஸ்பலிஸ்ட் டாக்டர் அமெரிக்காலேர்ந்து ஆராய்ச்சி பண்ண வந்திருக்காராம்.அவரும் ஏதோ இருபது நாள் மூளை சம்பந்தமா ட்ரெய்னிங் கொடுக்கப் போறாறாம்.

- தைரியமா இருக்கற பொண்ண நம்பள மாதிரி அப்பிராணியா மாத்தப்போறா பாரு. அப்புறம் எங்க போனாலும் நம்மை மாதிரி முழிக்கப்போறது பார்த்துண்டேஇரு.

- நம்ப என்ன பண்ண முடியும். இரு, பால உள்ள வெச்சுட்டு வந்துடறேன்,கோயில் மூடறத்துக்குள்ள போய்ட்டு வந்துடலாம்.

--------

( இந்த கதை ஞானக்கூத்தனின் கவிதையான "அம்மாவின் பொய்கள்" அளித்த பிம்பத்தால் கவரப்பட்டு, ஜன்னல் கண்ணாடியில் வழியும் தண்ணீர்த் துளிகள் போல சிதறிப் பிரிந்த கதை)
---------------------------

மே 2009, வார்த்தை இதழில் வெளியான கதை
-------------------------

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை