உள்ளும் வெளியும் - மு.தளையசிங்கத்தின் அகலிகை


அகலிகை கதையை பின்புலனாகக் கொண்டு நவீன எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளில் மூன்று நம் கவனத்தை உடனடியாகக் கவரும். புதுமைப்பித்தன் எழுதிய 'அகலிகை', மு.தளையசிங்கம் எழுதிய 'உள்ளும் வெளியும்' மற்றும் பிரமிள் - 'நிகழ மறுத்த அற்புதம்' கவிதை. புதுமைப்பித்தனின் கதை பாதிக்கப்பட்ட அகலிகை பார்வையில் சொல்லப்பட்டது.கெளதமர் - அகலிகை புராணத்தின் உள நிலையை இரு விதங்களில் இவை அணுகுகின்றன. 

உள்ளும் வெளியும் கதை அகலிகை சாப விமோசனம் அடைந்த பிறகு தொடங்குகிறது. பலத்த மனக்குழப்பங்களுக்கு ஆளாகும் அகலிகை சாபம் பெற்றதன் மூலக்காரணமான காமத்தை ஒறுக்கப் பார்க்கிறாள். உலகில் அனைத்தும் மாயை, காமமும் மாயை எனும் பாவனையில் காமத்தை சுட்டி நிற்கும் அனைத்திலிருந்தும் விலகப் பார்க்கிறாள். 

சாபவிமோசனத்திற்குப் பிறகு மிதிலா நகரை ஒட்டியிருந்த கெளதமக்காட்டிலிருந்து அவர்கள் பிரிந்து சரயு நதிக்கரையில் பர்ணசாசிரமம் அமைத்துக்கொள்கிறார்கள். கெளதமர் வீடு திரும்பக் காத்திருக்கும் அகலிகை இரு பாம்புகள் பிணைந்து விளையாடும் ஆட்டத்தைப் பார்க்க நேர்கிறாள். அவள் கண்கள் அதிலிருந்து விலகாவிட்டாலும் 'மாயை, மாயை' என நா முணுமுணுத்தபடி இருக்கிறது. இரு பாம்புகளும் பிணைந்து, வழுக்கி, நழுவி பின்னர் இறுகி தங்கள் ஆட்டத்தைத் தொடர்கின்றன. காண்பது அனைத்தும் மாயை என நடுக்கத்துடன் அவள் மனம் அவற்றிலிருந்து பிணைந்து, தொட்டு, வழுக்கி விலகப்பார்க்கிறது. அவள் மன சதா சந்தேகத்துடனே உழல்கிறது. பூனை வடிவில் வந்தவன் பாம்பு வடிவிலும், சுகந்தமாக வீசும் மந்த மாருதம் வடிவிலும் ஏன் வரமுடியாது? நடுக்கத்துடன் குடிலுக்குள் சென்று படுத்துக்கொள்கிறாள்.

கெளதமருக்கும் அந்தி சாய்வது சிறு திடுக்கிடலைக் கொடுக்கிறது. அகலிகையின் மனப்போக்கை அறிந்தவர் குடிலுக்குத் திரும்பியதும் நடுங்கும் திரியை அணைக்காது படுத்துக்கிடந்த அகலிகையைப் பார்க்கிறார். அவளது உதடு 'மாயை, மாயை' என முணுமுணுத்தபடி இருக்கிறது. தன்னைத் தொட்டது கெளதமரே எனும் திடமான நம்பிக்கை இருந்தாலும் இப்படித்தானே இந்திரனும் வந்தான் என உணர்ந்ததும் சட்டென மனம் கலக்கம் கொள்கிறது. கெளதமர் அவளது சந்தேகத்தைக் களையப் பார்க்கிறார்.

அகலிகை விழிக்க மறுக்கிறாள். அவளது நிலையை பார்த்திருக்கும் கெளதமருக்கு சாபத்தின் கணம் நினைவுக்கு வருகிறது. எத்தனை குரூரமான சாபம்! இந்திரன் ஒரு பக்கம் பயந்து நிற்க, இவர் முன் கற்பை இழந்த அகலிகை நிலைதடுமாறி நின்றிருந்தாள். ஆயிரம் யோனிக்கண்ணாக உடல் என இந்திரனுக்கும், கல்லாய்ப் போக வேண்டுமென அகலிகைக்கு அவர் சாபமிடுகிறார். ஆயிரம் யோனிக்கண், உடலெல்லாம் யோனி எனும் சாபம் தென்புலக் கதைகளில் மட்டுமே இருக்கிறது. தென்புலக்கதைகளில் கம்பர் முதலில் இதைக் குறிப்பிடுகிறார்.

காணாமல் போன இந்திரனையும், கல்லாய்ப்போன அகலிகையையும் பார்த்து நிற்கிறார். அவரது உள கொதிப்பு அடங்கவில்லை. சட்டென ஒரு சிரிப்பு சத்தம். சுற்றியும் யாரும் தென்படவில்லை. சிரிப்பொலி அதிகரித்ததில் அது கல்லிலிருந்து வருவதை அவர் கவனிக்கிறார். மெல்ல அந்தக்கல் ஆதி சக்தியாக, அன்னை பராசக்தியாக உருவெடுக்கிறது.

'உன்னிஷ்டப்படியா எல்லாம் நடக்கின்றன? உனக்கேன் ஆத்திரம்? உனக்கேன் சோகம்?'

'நீதான் தபசியாச்சே..உனக்கேன் அவளில் அத்தனை ஆசை?'

ஆசை என்றொன்று இருந்ததால் தான் கெளதமர் வேறொன்றம் அகலிகை வேறொன்றுமாகத் தெரிந்தனர்?சதை ஆசையிருப்பதால் தான் ஒருவனின் இன்பம் மற்றொருவன் இன்பத்திலிருந்து வேறு எனும் எண்ணம் தோன்றுகிறது. அறியாமை என்பது இங்கு எல்லாருக்கும் பொதுவாக, அளவுக்கதிமாகவே இருப்பதாக அன்னை கூறுகிறாள். மாய உலகினிள் இல்லாத காமத்தை இந்திரன் தேடி வந்தான், நீ இல்லாதவற்றை அவன் உடலில் பொருத்தி இருப்பதாக்கிவிட்டாய் என பரிகாசம் செய்கிறாள். ஞானி என்பனுக்கு தான் வேறு, பிறர் வேறு எனும் அறியாமை அழகா? தன்னிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றை பிரித்துவிட்டதாக நினைத்தாலும் உண்மையான ஞானியருக்கு கல்லும், யோனியும், காமப்பசியும் ஒன்றுதான்.

அந்த நேரத்தில் நாணிக்குனிந்த இந்திரனை கெளதமர் முன்பு தேவர்கள் இழுத்து வருகிறார்கள். இப்போது கெளதமரின் கண்களுக்கு அவன் தவறிழந்தவன் போலத் தெரியவில்லை. தன்னில் ஒரு பாகமாக அன்பு மிகுகிறது. மன்னிக்கும்படி கேட்கும் தேவர்களிடம் யார் யாரை மன்னிப்பது என உணர்கிறார். காப்பாற்றுபவரும் காப்பாற்றப்படுபவளும் ஒன்றுதான் எனும் ஞானம் அவருக்கு உரைக்கிறது.

அந்த நேரத்தில் அவர் முன்பு தோன்றிய விஸ்வாமித்திரர் இராம இலக்குவர்களை அறிமுகப்படுத்துகிறார். கையில் வில் ஏந்திய இருவரும் பேருரு கொண்ட அன்னையாக கெளதமருக்குத் தெரிகிறார்கள். விஸ்வாமித்திரர் சாப விமோசனத்தைக் கூறியபோது, 'யார் கால்பட்டு யார் எழுவது?' எனும் முழுமுதற் ஞான நிலைக்கு கெளதமர் சென்று சேர்கிறார்.

ரிக்வேதம் சிருஷ்டிகீதம் (பத்தாவது மண்டலம்)

ஆதியில் அதில் காமம் எழுந்தது
மனத்தின் முதல் பீஜம் அது தான்
இதயங்களில் தேடுகின்ற ரிஷிகள்
தங்கள் மேதமையால்
அசத்தில் சத்தைக் கண்டனர்

- மொழியாக்கம் ஜடாயு (இந்து ஞானம் - ஓர் எளிய அறிமுகம், தமிழில்: சுனில் கிருஷ்ணன், சொல்புதிது வெளியீடு)

முதல் பீஜமான காமம் எழுந்த வேகத்தில் ஆசையைத் தூண்டி, அகம்பாவம் அளிக்கிறது. அதை இரு உடல்களிலின் இணைவாக எண்ணாது அந்த பீஜத்தின் வீரியத்தை இதயங்கில் தேடுபவர்கள் காமத்துக்கும், அதன் செயலுக்கும், செயப்படுபொருளுக்கும் வித்தியாசத்தை உணர்வதில்லை. அசித்தில் சத்தைக் காணத் தொடங்குவர் - இங்கு கெளதமர் போல.

விசுவாமித்திரர் மிதிலைக்குக் போகும்போது 'சினத்தைக் குறைத்துக்குள்' என கெளதமரை வாழ்த்தி சாப விமோசனம் பெற்ற அகலிகையிடம் விடை பெறுகிறார். அப்போதும் கெளதமர் மனம் சதா யோசித்தபடி இருக்கிறது.

'சீற்ற தணியுமாறு கூறும் விஸ்வாமித்திரர் சீற்றம் தணியாது வசிட்டருடன் போராடுகிறார். தாய் புனிதமானவள் என போதிக்கும் இராமன் தானே நம்பிக்கையற்று நெருப்பு வளர்க்கிறான்', என கெளதமரின் மனது பொங்கியபடி இருக்கிறது.

கல்லிலிருந்து விலகி எழுந்து நின்ற அகலிகையைப் பார்த்து, 'சீதை நெருப்பிலிருந்து வெளியே வந்துவிட்டாள். அவளே நெருப்பு'

இப்போது அகலிகை மீது கனியும் அன்பு மட்டுமே அவரிடம் உள்ளது.

நடுங்கும் விரலோடு அவளைத் தொட்டதும், குடிலில் நினைப்பு திரும்பி, 'அகல்யா', என அழைக்கிறார்.

அகலிகை தன் மாயா பூஜையிலிருந்து இன்னும் விடுபடவில்லை. அவளால் தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் நம்பமுடியவில்லை. தன் தோளின் மீது கை வைத்திருப்பவர் இந்திரனா, பாம்பா, கெளதமரா எனும் குழப்பமும் உண்டு. நம்ப மறுப்பதும், மாயை எனத் தள்ளிப்போவதும் விடுதலைக்கான வழியல்ல என விளக்கப்பார்த்தாலும் அகலிகைக்குப் புரிவதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததாலே, அந்த அவித்யையாலேயே, இந்திரனையும் அகலிகையையும் சபிக்க முடிந்த அஞ்ஞானத்தை அவர் விளக்குகிறார். அவள் கல்லாக இருந்த கணத்திலெல்லாம் அவர் மனமும் கல்லாய்க் கிடந்ததைச் சொல்கிறார்.

அவரது தொடுகையை அருவருப்போடு பார்க்கும் அகலிகையின் அஞ்ஞானம் விலகுவதற்கு கெளதமரின் மறைவு தேவையாகிறது. அவள் மனதில் கெளதமரின் தத்துவம் ஏளனத்தை வரவழைக்கிறது. கல்லும் மண்ணும் உயிருடன் இருப்பதும் ஒன்றாமே? அப்போ இவர் கல்லாய் இருந்தால் என்ன என அவள் மனம் எண்ணுகிறது.

அதை உணர்ந்த கெளதமர் புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறார். அவரது விலகலிலேயே அகலிகையின் ஞானம் இருக்கிறது என்பது உணர்ந்து மறைகிறார். கல்லாகவோ, காற்றாகவோ அந்தக் குடிலைச் சுற்றி இருக்கிறார். சொல்ல முடியாத சந்தோஷம் அவளுக்கு ஏற்படுகிறது. அகலிகை கெளதமரின் விமோசனத்துக்காகக் கனியாக மாறி காத்திருக்கிறாள்.

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

கம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்