அகலிகை - ஹமார்ஷியா (Hamartia)


அகலிகை பற்றிய கதை நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் சங்க நூல்களில் பரிபாடலில் வருகிறது. நப்பண்ணனார் எழுதிய 19ஆவது பாடல். திருப்பரங்குன்றம் செவ்வேளைப் பற்றிய பாடல். அவள் இந்திரனின் மகள் என்றும், "ஐயிரு நூற்று மெய்ந்நயனத்தவன் மகள்" என இந்திரன் பெற்ற ஆயிரம் யோனிச்சாபம் பற்றியும் வருகிறது. கோயில் மண்டபத்துத் தூண்களில் இந்திரனாகிய பூனை, அகலிகை, கெளதமர் ஆகியோர் சித்திரங்கள் இருப்பதாகப் பாடல் சொல்கிறது.


அ.கா.பெருமாளின் "காலம் தோறும் தொன்மங்கள்" புத்தகம் அகலிகைக் கதையை வாய்மொழிக்கதையாக இருந்திருக்க வேண்டும் என்கிறது. சாதரணக் குடிமகனுக்கும் தெரியும் கதையை சித்திரமாக வரைந்து வைத்தும் பாணியைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இதற்குப் பின்னர் சமணர்கள் வாழ்ந்த களப்பிரர் காலத்தில் திருவள்ளுவரும் இதைக் குறிப்பிட்டு, "இந்திரனே சாலும் கரி", என புலனடக்கத்தை மீறுபவர்களுக்க இந்திரனின் நிலையே கடை என்கிறார்.

கிரேக்க தத்துவத்தில் ஹமார்ஷியா எனும் நிலை புராணப்பாடல்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஒரு செயலும், செயலுக்கான பொருளும், செயலுக்கானத் காரணமும் சேர்ந்திருக்கும் புள்ளி என ஹமார்ஷியாவைச் சொல்லலாம். இலக்கியங்களில் ஹமார்ஷியாவை குற்றத்தின் இயல்பு அல்லது குற்றம் மற்றும் காரணம் இரெண்டுக்குமானத் தொடர்பை விளக்கப் பயன்படும். குற்றம் செய்யத்தூண்டும் இயல்பு என இதைச் சுதந்திரமாக மொழியாக்கலாம். ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கு அவனைத் தூண்டிய வெளியாள் காரணமல்ல, அந்த மனிதனிடம் அமைந்த குற்றமே காரணம் என்பது இதன் அடிப்படை.  இப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனும் அவனுள் தோல்விக்கான விதையை சுமந்து வாழ்கிறான். அவனது  செயல்களுக்குப் பின்னாலிருந்து இயக்குவது அந்த குற்றம் தான். ஹமார்ஷியா இதை அறியாமல் ஆட்பட்டுக்கொள்ளும் குற்றம் என பொதுமைப்படுத்துகிறது. திடீர் எனத் தோன்றும் உணர்ச்சிக்கு, அறியாமல் வீழும் தன்மை. தாய் என அறியாமல் இடிபஸ் தாயுடன் இணைந்த தன்மையை நவீன ஆசிரியர்கள் இவ்வகையில் சேர்க்கிறார்கள். ஆனால் அவனது இந்த இயல்பை தீர்மானிப்பதும் அவனே என்பதுதான் ஹமார்ஷியாவின் அடிப்படை அர்த்தம்.

ஹமார்ஷியாவைக் கொண்டு அகலிகைக் கதையை ஆராயப்புகுந்தால், வால்மீகி ராமாயணம் அகலிகையின் கர்வத்தையே அவளது வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்கிறது. கெளதமர் வடிவில் தன்னைப் புணர வந்தவன் இந்திரன் என ஆரம்பம் முதலே அறிந்தவளாக அவள் அதில் வருகிறாள். அவளது காமம் என்பதை விட தன் அழகினால் விளைந்த கர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் அகலிகையின் அடிப்படை வழு அவளது கர்வமே. அ.கா.பெருமாளின் விளக்கத்தின்படி அவள் பஞ்சகன்யாய ரேந்நித்யம் எனும் ஐந்து கன்னிகைகளாகப் பெயர் பெற்றவர் என்கிறார். இதுவும் அவளது கர்வத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும் பிரம்மனின் படைப்பிலேயே மிகுந்த அழகானவள் எனும் கர்வம் தான் அடிப்படை காரணம்.

கம்பன் அவளை உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுகிறான். இந்திரன் புணரும்போதுதான் அவள் வந்திருப்பது கெளதமரனல்ல என்பதை உணர்கிறாள். ஆனால் இங்கு அவளைக் கட்டுப்படுத்தியது இரண்டு காரணங்கள் - தக்கதன்று எனத் தெரிந்தும் இந்திரன் எனும் தேவேந்திரனுக்குக் கட்டுப்படவேண்டும் எனும் கீழ்படியும் குணம் மற்றும் மதுவினது தெளிவைப் பெற்றது போன்று அறிவிழந்த்வளாக இருந்தாள்.

புக்கவ ளோடுங் காமப் புதுமண மதுவின் றேறல்
ஒக்கவுண் டிருந்த லோடு முணர்ந்தன ளுணர்ந்த பின்னும்
தக்கதன் றென்ன வோராள் தாழ்ந்தன ளிருப்பத் தாழா
முக்கண நனைய வாற்றன் முனிவனும் முடுகி வந்தான்

ஒக்கவுண்டிருந்தாள், தாழ்ந்தனள் இருப்ப - என இரு அடிப்படை வழுக்களை கம்பன் காட்டுகிறான்.

இதில் மது உண்ட மயக்கம் போக இந்திரனுடன் சமமாக அனுபவித்துக் கொண்டிருத்தல் எனும் நிலை அறிவு மயக்க நிலை. தர்க்க புத்தி சார்ந்த அறிவும், உணர்ச்சிகளுக்கு ஆட்படும் மனம் இருவேறு நிலைப்பாடு கொண்டிருக்கும் களம். அறியாமையின் விளைவே என்றாலும் இதில் சமநிலை பேணுவதென்பது சாதாரண மனிதனுக்குச் சாத்தியமல்ல. இது ஒரு 'மாயா மனித' நிலை (புலவர் கீரன் சொல்படி மாயா சனகன் படலமும் ஹமார்ஷியாவுக்கு ஒரு உதாரணமே)

கம்பனில் அகலிகையின் குற்றக்கூறு விதிவசம் விட்டது. கம்பனின் காவியத்தின் ஆன்மா உறைந்த இடம் விதிவசம். அவரவர் விதிவழி அடைய நின்றனரே. ராமனின் விதியும் முன்னே சென்றது அவன் நகர் நீங்கும்போது. விதி யாரையும் பேதம் பார்ப்பதில்லை.

அகலிகையின் பிழை உணர்ந்தபின்னும் கல்லாய்க் கிடந்தது. உணர்ச்சிக்கும் தருக்க புத்திக்கும் இடையேயான இழை நீக்கம் பெறும்படியான மதுச்சுவையில் கிடந்ததால். இதனாலேயே

பிழைத்தது பொறுத்த லென்றும் பெரியவர் கடனே யென்பர்

என அறிவிலாது செய்த தவறுக்கு தடுப்பு அருஞ்சாபம் கொடுக்க முடியாதபடி ஒரு தப்பித்தல் வழியை ஏற்படுத்தியுள்ளனர். மாயமே நிரந்தமான உலகினில் அறியாமல் செய்த் தவறுகளைத் திருத்திக் கொள்ள சந்தர்ப்பத்தைக் கொடுப்பது அவசியம்.

மாயா நிரந்தர முலகினிற்கு நெடும்பழி பூண்டாள் நின்றாள்

கம்பன் அகலிகை மீது முறைமீறிய வழுவை உண்டாக்காது இந்திரனின் காம ஆசை மீது அதைத் திருப்பிவிட்டான். 

பூனை போல தப்பித்த இந்திரனும், ஆயிரம் யோனியுள்ள உடலாய் ஆவதாகப் போடும் சாபமும் கம்பன் வாய்மொழி மரபிலிருந்து எடுத்தாண்டது என்கிறார் அ.கா.பெருமாள். தெரிந்து செய்யும் தவறுக்காக பூனை உதாரணமாக்கப்பட்டிருக்கு - இது சங்க காலத்தில் அன்றாடக்காட்சியாக இருந்திருக்கும். ஆயிரம் யோனியுள்ள உடல் ஆண்களை வெறிகொண்டு ஈர்க்கும் வகை. இந்திரனின் காம இச்சை அவன் மீண்டும் மீண்டும் வீழ்வதற்குக் காரணம்.

ப.சுப்பிரமணிய முதலியார் எழுதிய அகலிகை வெண்பா.

Comments

Post a Comment

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை