தேவைசார்ந்த எந்திரம்




நாகரத்தினம் கிருஷ்ணாவின் "சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது" எனும் அறிபுனைவு ஆண்டிராய்ட் எனும் ரொபோக்கள் மனிதர்களுக்கு உபயோகமான செயல்களைச் செய்துத்தரும் benefit robot பற்றியது. தமிழில் வரும் பெரும்பாலான அறிபுனைக்கதைகள் ஆங்கில அறிவியல் புனைவுகளைச் சார்ந்திராமல் ஹாலிவுட் அறிவியில் படங்களை ஒத்திருக்கின்றன.  எந்திரமயமாக்கப்பட்ட உலகில் மனிதனின் இருப்பு சார்ந்த தத்துவக் கேள்விகளையோ,   எந்திரத்துடனான உறவு சார்ந்த கேள்வியை மையமாகவோ, மனிதனின் எதிர்கால முக்கியத்துவம் சார்ந்த functional/utilitarian பார்வையை முன்வைப்பதாகவோ ஆங்கில அறிபுனைவு பொதுவாக அமைந்திருக்கும். கதையின் மையத்தில் மனிதனின் இருப்பு சார்ந்த தீவிரமான தத்துவக்கேள்வி இருக்கும். சுவாரஸ்யமான கதைப்பின்னலைத்தாண்டி இப்படிப்பட்ட கேள்விகளே மனிதனின் எல்லைகளை விஸ்தரிக்கும்படி சிந்திக்கவைக்கின்றன.

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது கதையில் வரும் ஆன்டிராய்ட் பெண், வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தை கெவினைப் பார்த்துக்கொள்வது எனும் அடிப்படைச் செயல்களைச் செய்வதோடு, கதிரேசனுடைய காமத்தேவைகளுக்கும் பயன்படுகிறாள். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு விலை வைத்து பிரொக்ராம் செய்து விற்கும் நிறுவனத்திலிருந்து கதிரேசன் ஆண்டிராய்டை வாங்குகிறான். ஆண் கருத்தரிக்கும் காலமது. கதிரேசனின் ஆண் நண்பன் மூலம் பிறந்த கெவினை வளர்ப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இருவரும் நீதிமன்றம் சென்று விவாகரத்து வாங்கிக்கொள்கிறார்கள்.  நீதிமன்றம்  ரொபோக்களால் நடத்தப்படுவதல்ல. தெளிவான சட்டதிட்டங்கள் உள்ள நகரம் அது என்பதால் ஆண்டிராய்டுக்கும் மனிதர்களுக்கும் விதிகள் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. எந்திரங்களை மனிதனின் தேவைக்கு மட்டுமே கட்டுக்கோப்பாக உபயோகப்படுத்துகிறார்கள்.

இங்கு கதையை மீறி சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. benefit robot களின் தேவை எதிர்காலத்தில் அதிகமாகலாம் எனும்போது  எதிர்கால எந்திரங்களை உருவாக்கவும், பாதுகாக்கவும், அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் உலகின் பல நாடுகளிலும் சில குழுக்களை அமைத்திருக்கின்றன. அமெரிக்காவில் நேஷனல் ரோபாட்டிக்ஸ் அஸ்ஸோசியேஷன், நாசா விஞ்ஞானிகள், கூகிள் வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் குழுக்கள் என பலவகை இதில் உண்டு. அவர்களின் முதல் வேலை, பாதுகாப்பான எந்திரங்களை உருவாக்குவதும், அதற்குத் தேவையான விதிகளை இயற்றுவதும் தான்.

எந்திரங்கள் மனிதனுக்கு அழிவு ஏற்படுத்தும் எதையும் உருவாக்கிவிட முடியாது என்பது முதல் விதி. இது அசிமோவின் விதியின் தொடர்ச்சி என்றாலும், எந்திரங்கள் தங்களைச் சீரமைத்துக்கொள்வதும், புது எந்திரங்களை உருவாக்கவும் இருக்கும் சாத்தியங்களை இந்த விதி தடுப்பதில்லை. தங்கள் இனத்தை அதிகமாக்கும்போதும் அடிப்படை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மரபணுவில் செலுத்துவது போல தங்கள் வாரிசுகளுக்கு கைமாற்றிக்கொடுக்கின்றன. 

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது கதையில் வரும் எந்திரம் பேசுவதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சிரிக்கும் அழகிய தமிழ் பெண் போல அதை கதிரேசன் உருவாக்கியுள்ளான். காஞ்சிப்பட்டும், ஒற்றைப்பின்னலும், மல்லிகை சரமுமாக அவன் முன்னே அவள் வரும்போது அப்படியே மயங்கிவிடுகிறான். அதன் மீது காமவயப்பட்டு அதிகப்பணம் கொடுத்து தேவைப்படும்போது உடலுறவு கொள்ளும் மேலதிக சேவையை வாங்கிக்கொள்கிறான். அதற்கு ஒத்துழைப்பது போல எந்திரமும் பிரோக்கிராம் செய்தது போல அவனைக் கிறக்கமாகப் பார்ப்பதும், அருகே நின்று உரசுவதுமாக இருக்கிறது.  கதிரேசன் இந்தியாவுக்குச் செல்லும் பயண மும்முரத்தைப் பார்த்து கண்களின் ஓரம் கண்ணீர்கூட விடுகிறது.

இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லா கதைகளைப் போலவே, இந்தியாவுக்கு விடுப்பில் வரும் கதிரேசன் சொந்த கிராமத்துக்கு தனது வேரைத் தேடிச் செல்கிறான். அத்தை மட்டுமே இன்னும் உயிரோடு இருக்கிறாள். தன்னைத் தனியே விட்டு அமெரிக்காவுக்குச் சென்ற தனது ஒரே மகளின் புகைப்படத்தை கதிரேசனுக்குக் காட்டுகிறாள். அது கதிரேசனின் பேபி சிட்டர் போலவே இருக்கிறது என்பதோடு கதை முடிகிறது. இங்கிருந்து நமது கற்பனையைத் தொடங்க முடியும். நமக்குத் தேவையான எந்திரத்தை நமது சிறு வயது ஞாபகங்கள் கொண்டு தாத்தாவின் உருவத்தில் பொருத்தலாம். அப்படி பொருத்தும் எந்திரம் நம்முடன் சாகாவரத்தோடு காலத்தைக் கடத்துவதும், நிஜத்துக்கும் எந்திரத்துக்கும் எவ்விதமான வித்தியாசமும் இல்லாத வகையிலும் இருக்க முடியும் என்றால் எவ்விதமான சாத்தியங்கள் நம் வாழ்வில் திறக்கக்கூடும்? கதை இந்த இடத்தை சென்று சேராமல் சிறிது தொலைவில் நின்றுவிடுகிறது.

மிக எளிமையான கதை. எதிர்பார்க்கப்பட்ட முடிவு. எந்திரங்களின் உளவியலோ, அவற்றுக்கும் மனிதனுக்குமான உறவைப்பற்றிய விவரணைகளோ இல்லாத கதை. அறிபுனை கதைக்கும் இதற்கும் இடைவெளி நிறைய உண்டு. முடிவை உத்தேசித்து செல்லும் கதையில் வாசகனின் கற்பனையைத் தூண்டும் நிகழ்வுகள் இல்லை. ஒரு அறிபுனை கதைக்குத் தேவையான மனிதனின் இருப்பு சார்ந்த கேள்விகளின் விளிம்பை மட்டுமே தொட்டுச் செல்லும்கதை.

தேவை சார்ந்த எந்திரங்களின் அமைப்பைப்பற்றிப் பேசுவது கதையின் தேவையை ஓரளவு முக்கியமாக்குகிறது.

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை