கிரேக்கத் தத்துவக் கொழுவினால் விஞ்ஞான மெய்த்தேடல்


Carlo Rovelli எனும் பிரபலமான பெளதிக விஞ்ஞானி எழுதிய புத்தகமான Reality is not what it Seems (The Journey to Quantum Gravity) புத்தகத்தின் சில சுவாரஸ்யமானப் பகுதிகளை இந்தக் கட்டுரைத் தொடரில் பார்க்கலாம். கிரேக்க தத்துவத்தின் கேள்விகளுக்கும், இன்றைய விஞ்ஞானத்தின் ஆய்வு முடிவுகளுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய புத்தகம் இது.

*

இந்த புத்தகம் இருபத்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிலேட்டஸ் (Miletus) எனும் கிரேக்க நகரத்தில் தொடங்குகிறது. குவாண்டம் ஈர்ப்புவிசை பற்றிய ஒரு புத்தகத்தை ஏன் ஆதி கால நிகழ்வுகளையும் ஆட்களையும் கொண்டு தொடங்க வேண்டும்? வெளியின் பொட்டலத்தைப் (குவாண்டா) பற்றித் தெரிந்துகொள்வதற்காகப் படிக்கும் வாசகர்கள் இதனால் சலிப்படையக் கூடாது. எந்த ஒரு புது சிந்தனையையும் அதன் மூலத்திலிருந்து தொடங்க வேண்டும். மேலும் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான புது சிந்தனைகள் ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டன. அவை கடந்து வந்த பாதையை சுருக்கமாக அறியும்போது சிந்தனைகள் தெளிவடையும். புது சிந்தனைகளின் தொடர்ச்சிக்கும் இயல்பாக அவை வித்திடும்.

இதுமட்டுமல்ல. ஆதிகாலத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. சமீபகாலமாக அண்டத்தைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளும் சிந்தனைகளும் ஆதிகாலத்தில் தொடங்கியவை என்பதும் ஒரு காரணம்.  பழையகால சிந்தனையைப் பற்றி ஆராயத்தொடங்கும்போது நான் குவாண்டம் ஈர்ப்புவிசைக்கு மையமான கேள்விகளையே முன்வைக்கப்போகிறேன். இதன்மூலம் குவாண்டம் ஈர்ப்புவிசை சம்பந்தமான கேள்விகளில் எவை அக்காலகட்டத்திலேயே எழுப்பப்பட்டன, எவை அண்மைக்காலத்தின் நவீனச் சிந்தனை என்பது போன்ற வித்தியாசங்களுக்குள்ளும் போக முடியும். ஆதிகால சிந்தனையாளர்கள் அறிவியலாளர்கள் எழுப்பிக்கொண்ட கேள்விகளுக்கும், இன்றைக்கு ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பதில்களுக்கும், குவாண்டம் ஈர்ப்புவிசைக்கும் பல அதிசயத்தக்கத் தொடர்பு உள்ளதைக் காண்போம்.

*

மரபான இயற்பியல்

கிரேக்க சிந்தனையாளரும் அறிவியலாளருமான அரிஸ்டாட்டில் எழுதிய புத்தகம் Physics.  அதற்கு முன் இயற்பியல் எனும் துறை கிடையாது. இந்த புத்தகத் தலைப்பிலிருந்து நாம் இப்போது அழைக்கும் இயற்பியல் எனும் துறை பெயரிடப்பட்டது.

அரிஸ்டாட்டிலைப் பொருத்தவரை இயற்பியல் என்பது என்ன? அவரது சிந்தனைத் தொடர்ச்சியைப் பின் தொடர முயல்வோம். முதலில் வானலோகத்துக்கும் பூமிக்கும் வித்தியாசத்தை நிறுவவேண்டியது அவசியம். நம் கண்ணுக்குத் தெரிகிற வானத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன. அந்த நீள்வட்ட வடிவில் பூமி மத்தியிலும், சூரியன் சந்திரன் மற்றும் பிற கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன. பூமியில் இயற்கையான நகர்தலுக்கும், கட்டாய நகர்தலுக்கும் வித்தியாசத்தை நாம் உணரவேண்டும் கட்டாய நகர்தல் ஒரு பொருளின் மீது இயங்கும் விசையைப் பொருத்து அமைவது. அந்த விசை குறையும்போது பொருளின் இயக்கமும் குறையும். பின்னர் நின்றுவிடும். இயற்கையான நகர்தல் மேல் - கீழ் இயக்கத்தைப் பொருத்து மாறுபடும். மேலே போகும் பந்து இயற்கையாக நகர்ந்து தனது இயல்பான நிலைக்குத் திரும்புவதற்காக கீழே வருவதை உதாரணமாகக் கொள்ளலாம். 

அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு நிலை என்று ஒன்றுண்டு. பூமீ கீழேயும், நீர் மேலேயும், காற்று அதற்கு மேலேயும், நெருப்பு எல்லாவற்றுக்கு மேலேயும் இயல்பு நிலையில் இருக்கும். நீங்கள் ஒரு கல்லை கையிலிருந்து கீழே விடும்போது அது  தனது இயல்பு நிலைக்குத் திரும்பும். நீரில் உருவாகும் குமிழிகள் மேலேறும், நெருப்பு காற்றில் ஏறி விண்புகும், குழந்தைகளின் பலூன்களும் காற்றில் பறக்கும் இயல்புடையதாகும்.

மேலேயுள்ள சிந்தனையை எண்ணி சிரிக்க வேண்டாம. இவையாவும் சந்தேகத்துக்கு இடமின்றி இயற்பியலால் விளக்கப்பட்டவை. பல முறை சோதிக்கப்பட்டவையும் கூட. நீருக்குள் மிதந்திருக்கும் பொருள் மற்றும் புவி ஈர்ப்பு விசையினாலும் உராய்வினாலும் மாறும் விசை சக்தி நாம் தினமும் பார்க்கும் உதாரணங்களால் நிரம்பியவை. இவை தவறான பெளதிக விதிகளால் கட்டப்பட்டவை அல்ல. முழுமையான உண்மைகளும் அல்ல. தோராயமான மாதிரியை உருவாக்கும் பெளதிக விதி இதில் உள்ளது. ஆனால் நியூட்டனின் மரபு இயக்கவியல் கூட ஐன்ஸ்டீன் பொது சார்பியல் தத்துவத்தின் தோராயமான விளக்கம் ஆகும். மேலும் இன்று நமக்கு திட்டவட்டமாகத் தெரியும் உண்மைகள் அனைத்தும் நமக்குத் தெரியாத உண்மைகளின் தோராயமான விளக்கங்கள் மட்டுமே. அரிஸ்டாட்டிலின் இயற்பியல் விதிகள் இப்படிப்பட்ட தோராயமான கணக்குகள் தான். அவற்றை அளக்க முடியாது என்றாலும் தர்க்க ரீதியான முடிவுகளை நான் கணிக்க முடியும். இயக்கவியலை அறிந்துகொள்ள இதுவே மிகச் சிறந்த வழியாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது.

எதிர்கால அறிவியல் வளர்ச்சிக்கு இதை விட முக்கியமானவர் பிளேட்டோ.

அவரே பித்தகாரஸ் மற்றும் அவரது கணித வழிமுறையும் முக்கியமானவை என்பதை உணர்ந்தவர்.; மிலேட்டஸைத் தாண்டி அறிதல் விரிவடைவதற்கு தர்க்கத்தை விட கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை