விடுதலையும் பந்தனமும் - புதுமைப்பித்தனின் - அன்று இரவு


பிரமிள் எழுதிய 'கலைஞனும் சநாதனியும்' விமர்சனக்கட்டுரையில் வந்த புதுமைப்பித்தன் எழுதிய 'அன்று இரவு' கதை பற்றிய ஒருவரியைத் தாண்டி மேலே படிக்க முடியவில்லை. அந்த வரி இதுதான் - 'பக்த குசேலாவின் அசட்டுப்பழமையைச் சாடும் புதுமைப்பித்தனும் ஹிந்துவின் அடிக்குரலைக் கெளரவித்த அன்று இரவு ஆசிரியனும் ஒருவனே தான் என்பதை உணர்ந்துகொண்டு, இன்று கதை எழுதுகிறவன் பேனா தூக்க வேண்டும்'

என்ன ஒரு சாட்டையடி வாக்கியம்! இக்காலத்தில் ஒரு கதையைப் படித்ததும் அதில் தென்படும் அரசியலுக்குப் பலவித சாயங்களைப் பூசி கனம் கூட்டிவிடுவதை முன்வந்து சாடியிருக்கும் ஒரு வரி இது. சநாதனத்தின் இருவித எல்லைகளையும் கணக்கில் கொண்டு , ஒன்றில் ஒளிந்திருக்கும் திரையைக் கிழித்து, வீழ்ந்த இடத்திலிருந்து மேலெழ வேண்டியத் தேவையைக் காட்டும் விமர்சன வரி இது. 

'அன்று இரவு' - புதுமைப்பித்தனின் மிகச் சிறப்பான கதைகளில் ஒன்று. ஏற்கனவே புராணங்களில் அறிந்த பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் கதையும், நரியைப் பரியாக்கி மாணிக்கவாசகரின் பக்தியை உலகுக்குத் தெரிவித்த கதையும் நவீன புனைவாக எழுதப்பட்டிருக்கு. தெரிந்த கதையின் மீது நவீன வெளிச்சத்தை வீசி அவை நிழல்களா, விளக்குகளா எனக் காட்டத் துணியும் பார்வை இதில் தெரிகிறது.

கதையின் தொடக்கம் நவீனக் கதை வடிவத்தை ஒத்திருக்கிறது. 'நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை'. அந்த மூவரில் ஒருவர் அரிமர்த்தன பாண்டியன். மற்றொருவர் அமாத்தியன் திருவாதூரர (எனும் மாணிக்கவாசகர்). மூன்றாமவர் சிறப்புமிக்கவர் - மதுரை அழகர். சொக்கேசன்.

மூவருக்கும் ஒவ்வோர் விதத்தில் வேதனை. அவர்களே கூட்டிய வேதனை. அதிலும் கீழ்மை தங்காத வடிவில், எவ்வித முற்வினைப்பயனையும் முடிக்க வந்தது அல்ல.

சொக்கேசன் பிறவா நெறி காட்டுவோன். அவனுக்கு ஏது உறக்கம் என தொடக்கத்திலேயே புதுமைப்பித்தன் தனது டிரேட்மார்க்கைப் போட்டுவிடுகிறார். அடுத்த ஒரு வார்த்தையில் தான் அவரது மேதாவத்தனம் தெரிகிறது. அவனுக்கு ஊண் ஏது என்கிறான். ஊண் என்பது கர்மவினைப்பயனால் உண்டாகிற சுக துக்கங்கள் என மேலோட்டமாகச் சொன்னாலும் ஊண் என்பது பக்தர்களில் தன்னைப் பார்க்கும் நெறி கொண்ட மேலோனின் உறங்காத்தன்மையைக் காட்டுகிறது. இது தேர்ந்த சொல். பாண்டியன் கொடுத்த காசுக்கு குதிரையோடு வராததால் வாதவூரர் கைவிலங்கின் பாரத்துடன் அமர்ந்திருப்பதால் வந்த உறங்காத்தன்மை.

வாதவூரரின் பாரம் வேறுவகையிலானது. அவரும் உறங்கவில்லை. ஆனால் அது பெரியோனைச் சந்தித்த சித்தகலக்கத்தினால் அடைந்த பிரமிப்பு. அவர் சொன்னாரே - 'குதிரை குதிரை எனச் சொல்லாதே. உன்னுள்ளே இருக்கும் குதிரைகளை அடக்கு' என. அதிலிருந்து வந்து ஒரு குளிர் ஜூரம்.

அரிமர்த்தன பாண்டியனின் தூக்கமிழந்தது பரம் ஒன்றைப் பார்த்துவிட்டு வந்த வாதவூராரைப் பார்த்ததினால். முப்பது வயது கூட நிரம்பாத ஒருவனுக்குள் இப்படி ஒரு நினைப்பு நடமாடமுடியுமா எனும் குழப்பம். அதோடு மட்டுமல்லாது குதிரைப் பாகனின் முகஜ்ஜுவாலை! பல இரவுகளில் மிணுக்கும் விண்மீன்களுக்கு துணையிருக்கப்போகும் இரவுகளைக் காட்டியது. அதில் இது முதல் இரவு. 

பாண்டியனை எழுப்பும் குரல் புலரின் முதல் குரலல்ல. நள்ளிரவில் நரிகளின் ஊளையும், குதிரையும் கணைப்புகளும். தேர் சாய்ந்து குதிரை மீதேறி அலறும் குரலைக் கேட்காதவரல்ல அவர் என்றாலும் இது அடி வயிற்றிலிருந்து வரும் ஓலம் என்கிறார் புதுமைப்பித்தன். தி.ஜாவின் கண்டாமணியைப் போல நரியின் ஊளை, போலிகளையும், மெய்யியல்பை மறைத்து நிற்கும் மேல்பூச்சுக்கும், நியாயமற்ற அவலங்களையும் சுட்டி நிற்கிறது. 

கதைக்குள் இடைவெட்டாக வரும் பாண்டியன் காலத்து விமர்சகர்கள் நடக்கும் காலத்திலேயே உடனுக்குடன் செய்தியாக நமக்கு விவரிக்கின்றனர். காலத்தின் சாளரத்தைக் கடந்து நம்முடன் அண்மையில் உரையாடும் இதிகாசத் தன்மையை இது அளிக்கிறது. சேனாவரையர் திருஷ்டாந்தத்தை ஏற்று நிற்கும் தரிசனத்தைச் சார்ந்து நிற்பவர். திருஷ்டி அல்லது கண்ணால் காண்பவற்றை மட்டுமே நம்புபவர். இகல் வாழ்வின் லெளகீக நன்மையை மீறிய தர்க்கத்தை ஏற்றுக்கொள்வதிலும் இவருக்குச் சிரமம் உள்ளது. அடியார்க்கு நல்லார் காவித தரிசனத்தை முக்காலமும் உணர்ந்து சொல்லும் நிலையில் புராணத்தை நோக்குகிறார். இளம்பூரணர் சமண தத்துவத்தை ஏற்று நிற்கிறவர். 

இடைவெட்டு கதையை நம்முடன் சேர்ந்து பார்க்கும் நிகழ்வாக மாற்றுகிறது. சுவாரஸ்யமான உத்தியாக இருந்தாலும், புராணம் என நாம் இன்றும் மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து செல்லும் நம்பிக்கைக்கு அர்த்தபூரணத்தைத் தருவதாகவும், கதைக்குள் நிலவும் தர்க்கங்களுக்கு தராசாகவும் அமைந்திவிடுவது இடைவெட்டின் சிறப்பு.

வாதவூரர் மனம் பேதலித்துக் கிடக்கிறது. குதிரை வேட்கையில் பணத்தைக் கொடுத்தனுப்பிய பாண்டியனுக்கும் அவர் நியாயமாக நடந்துகொள்ளவில்லை, ஊருக்குச் செல் குதிரை வரும் எனச் சொன்ன பெரியவரின் வார்த்தையும் முழுவதுமாக நம்பாதவனாக ஆகியிருக்கிறார். கண்ணால் காண்பதை நம்ப முடியாத தர்க்கத்தை மீறிய கட்டத்தில் அவர் இருந்திருக்கிறார். பணம் போன வழி என்ன எனச் சொல்லிவிட்டால் போதும் மீண்டும் அமைச்சராக்கிவிடுகிறேன் எனச் சொன்ன மன்னனின் நீதி அவரை குற்ற உணர்வில் ஆழ்த்தியது. நீதியே மேலானது என நினைக்கும் பாண்டியனிடம், மானுட நீதியைத் தாண்டிய பிரபஞ்ச சக்தியின் ஆடல்வல்லானின் நீதியை எப்படி உரைப்பேன் எனக் குழம்பிப்போகிறான். மனித சக்தி முழுவதும் கண்ணைக்கட்டிக்கொண்டு நீதியின் பின்னால் செல்வது மனுதர்மம். அது ஆத்ம தர்மமாகுமா? குதிரைகள் வந்ததும் கைவிலங்கு நீக்கி முதல் மரியாதைத் தரும் சமயத்தில் அதுவே பெரிய விலங்கு எனும் எண்ணத்தில் ஆழ்த்தும் நீதியை பாண்டியனால் உணர முடியுமா? தான் சொன்ன பொய்யை மெய்ப்பிக்க வந்த குதிரையும், அதன் பாகனும் அவரை குற்ற உணர்வில் வாட்டின. தூங்க ஒட்டாமல் செய்தது.

பிரதிபிம்பமான வாதவூராரின் மனகிலேச்சம் ஈசன் மனதை உருக்கியது. அவன் வாதவூரராக மாறி மனம் வெதும்பினார். துயரத்தில் மனித வம்சம் மட்டும் ஒன்றுபட்டு வராது, அதனூடாகவே பிரபஞ்ச சக்தியும் அணிவகுக்கும். வாதவூரார் அடைந்த கொடுமைக்கு பதிலாக ஊரில் வெள்ளம் புகுந்தது.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

கரைகாணமுடியா காமம்

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?