யாருமற்ற பாழ்வெளியில் - கோபி கிருஷ்ணன் & கோணங்கி


புயல் - கோபி கிருஷ்ணன்

நமக்குத் தெரிந்த சிறுகதை எனும் பாணியிலிருந்து சற்றே விலகிய கதை. முடிவுக்கு மிக அருகில் தொடங்கும் கதை ஒரு உச்சகட்டத்தின் வெடிப்பில் முடியும் எனும் யுத்தியை விடுத்து எழுதப்பட்ட கதை. இதில் திட்டமிடல் இல்லை. கோபி கிருஷ்ணனின் கதை இயல்பே இதுதான்.

ஆதவனும் கோபியும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனித மனங்களின் விசித்திரங்களையும், மனித உறவுகளால் உண்டாகும் விநோத ரச மாற்றங்களையும் கதைகளாக்கியவர்கள். ஆதவனின் 'இரு நாற்காளிகள்' கதை ஒரு உதாரணம்.

எவ்விதமான பதில்களையும் சென்றடையாமல் நவீன வாழ்வின் சிக்கல்களை காட்டக்கூடிய கலைஞர் கோபி. நவீனத்துவ மனிதனின் பாசாங்குகளை வெளிப்படையாக்கி அதற்கு மரபு சார்ந்த பதில்களைக் கொடுக்காதவர். மனிதன் தனிப்பட்ட மிருகம். அவன் இந்த சமூகத்தில் வாழ்வது வழியே தனது இயல்பையும், தன்னுடன் வாழும் மனிதர்களின் இயல்பையும் முடிவு செய்கிறான். அவனது குழப்பங்களுக்கும், வாழ்வியல் போராட்டங்களுக்கும் மரபிலும் மண்ணிலும் பதில் இல்லை.

புயல் கதையின் தொடக்க வரியே மேற்சொன்ன சித்தாந்தத்தை நிறுவிவிடுகிறது. எங்கோ காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது, அதன் பாதிப்பு வேறு எங்கோ நடக்கிறது. "அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்"

சாதாரண வரியாகத் தெரிந்தாலும், கதையின் ஊடே பயணிக்கும்போது மனிதர்களின் நடத்தைகளையும் இயல்புகளையும் தீர்மானிக்கும் கருத்தாக மாறிவிடுகிறது. ஸோனா வேலைக்குப் போவதில் அதிக நாட்டமில்லாமல் உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஏக்நாத்தின் வற்புறுத்தலாம் வேலைக்குச் செல்கிறாள். 

கடும் மழைக்கு நடுவே ஜூரம் அடிக்கும் குழந்தைக்கு மாத்திரையும், காபி பொடி, சாக்லெட் வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிறான் ஏக்நாத். மழையின் ஊடாக தனது பொத்தல் விட்ட மழை உடுப்பைப் போட்டுச் செல்கிறான். ரோட்டை அடைத்துக் கோலம் போடும் மாமியின் புள்ளிகளை அழிக்காமல் செல்வதும், சிகரெட் புகைக்கு முகம்சுளிக்கும் மாமியிடம் மன்னிப்பு கேட்டு அணைத்துவிடுவதுமாக அவன் சமூகத்தை 'அட்ஜெஸ்ட்' செய்து செல்பவன்.

அவன் சென்ற அதே மழையில் வீடு திரும்பியிருக்கும் மனைவி சோனாவுக்கு சென்ற இடமெல்லாம் சமூகம் இடர் கொடுக்கிறது. தேவையற்ற பாலியல் தீண்டல்களும், பெண்களை அடைய நினைக்கும் மனோபாவத்தையும் அவள் வேலை செய்யும் மருத்துவமனை முதல் வீடு வரும் வரை அனுபவிக்கிறாள். வீடு வந்தபின்னும் பக்கத்து போர்ஷன் குடிகாரன் ரெண்டு டிக்கெட் இருக்கு சினிமா வர்றியா என்கிறான். அவள் மனம் பதபதைத்து விடுகிறது.

இதைக் கொட்டித் தீர்க்கும்போது ஏக்நாத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவிதத்தில் கையாலாகதவன் தான். அவனது மனம் உடனே "அப்பன் செய்த தவறுதானே மகன் தலையில் வரும்". நானும் எதுவும் செய்ததில்லையே. எனக்கு ஏன் அப்படி ஒன்று நடக்கிறது என குழப்பம் அடைகிறான். சமூகம் விஸ்வரூபத்தை உன்னிடம் காட்டியிருக்கு விடு எனச் சொல்கிறான். இதற்கு ஈடான சிக்கல்களை அடைந்தவன் தான் என்றாலும் அவன் ஒருவிதத்தில் இந்த சமூகத்தின் கீழ்மைகளுக்குப் பழகியவனாக இருக்கிறான்.

திடீரென ஒரு இடத்தில் புயல் தோன்றியதில் மற்றொரு இடத்தில் மழை பெய்வது போல மனைவின் புலம்பலாலும் இயலாமையும் நிலையாலும் சட்டென "சாக்கடையில் உழலும் பன்றிகள்" என சமூகத்தின் சீர்கேட்டை நோக்கி கத்துகிறான். 

அவன் சரி செய்யக்கூடியது எதுவுமல்ல. அதே சமயத்தில் இந்த கத்தல் மட்டுமே அவனது மனைவிக்கும் ஆறுதலாக இருக்காது என்பதையும் அறிந்தவன் தான். ஆனால் கத்தி வைக்கிறான்.

மதினிமார்கள் கதை

மதினிமார்கள் கதை - ஒரு சிற்றூரின் இயல்பு மாறி காலத்தைக் கடந்து உலர்ந்து நிற்கும் காட்சியைக் காட்டும் கதை. செம்பகம் வெளியூரில் வேலை செய்து ஊருக்குத் திரும்புகிறான். காலம் கடந்தபின் ஊருக்குத்திரும்பி வருபவன் ரயில் நிலையத்தில் ஆவுடத்தங்க மதினியைப் பார்க்கிறான். வெள்ளரிக்காய் விற்பவனுடன் ஓடிப்போனவளாக அறியப்பட்டவள் ரயிலில் பூ விற்கிறாள். அவளது குரலில் மாற்றமில்லை, சிரிப்பில் மாற்றமில்லை ஆனால் உடல் மெலிந்து சோகையாக மாறிவிட்டாள்.

அவளைக் கண்டு பேசத்துடிக்கும் செம்பகம் தனது சிறு வயதில் பழகிய பவிதமான மதினிகளைப் பற்றி எண்ணத் தொடங்குகிறான். செம்பகத்தைக் கட்டிக்கொள்ள ஆசைப்படும் பாவனையில் கேலி செய்யும் மதினிகள், உடம்பு சரியில்லாதபோது மருந்துகொடுக்கப் போட்டிபோடுபவர்கள், அவர்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டே வளரும் செம்பகம்.

செம்பகம் நினைவில் இருப்பது மிகவும் செழிப்பான சிறுவயது நினைவுகள். மதினிகளுடனான அன்பும், பிரசவத்தில் இறந்த தாயின் இழப்பை அறியாது வளர்க்கும் அய்யா, ஊர்கூடி கதை சொல்லும் சமூக அமைப்பு என சந்தோஷம் நிறைந்த வாழ்வு. அந்நினைவோடேயே ஊருக்குத் திரும்பும் செம்பகம் பஸ்ஸில் கூட அறியா முகங்களாக இருப்பதை மனம் கசியப்பார்க்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவனது நினைவு நிகழ்காலத்துக்கும் கடந்த கால ஏக்கங்களுக்கும் இடையே ஊசலாடுகிறது. 

பஸ்ஸில் பயணம் செய்யும்போது தெரியும் வறண்ட நிலக்காட்சிகளும், பனைமரங்களும், தண்ணீரில்லாத ஆத்தில் ஊத்துத் தோண்டும் காட்சிகளும் ஒரு சீரழிந்த கிராமத்தின் காட்சியாக அமைந்திருக்கிறது. மதினிகள் அங்கேயே தங்கியிருந்தால் கிராமத்தின் மகிழ்ச்சியும் செழிப்பும் தக்கவைத்திருக்கலாமோ என நினைக்கிறான். வரண்ட நிலப்பகுதியின் மகிழ்வும் சந்தோஷமும் எங்கிருக்கும்? ஊர்கூடி இவனது அனுபவங்களைக் கேட்பவர்கள் கூட தீப்பெட்டி தொழிற்சாலை வண்டி வந்ததும் கலைந்துவிடுகிறார்கள். மதினிகள் இல்லாத ஊரில்  எவ்விதமான மகிழ்ச்சியும் இல்லை..

கதையின் முக்கியத்துவம் இப்படி சிதிலம்மடைந்த வாழ்வையும் ஊரையும் காட்டுவதில் தொடங்கி அன்புக்காக யாருமற்ற பாழ்நிலமாக இவ்வுலகத்தை ஆக்குவதில் முடிகிறது.

Comments

Popular posts from this blog

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

கரைகாணமுடியா காமம்

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?