உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை


மரப்பாச்சிஉடலின் மீது ஆதிக்கத்தைச் செலுத்த எண்ணும் ஆண் பெண்ணுக்குள் இருக்கும் குழந்தையை நசுக்கிவிடுகிறான். அவனது ஆதிக்கம் வெறும் உடலோடு நின்றுவிடுவதில்லை. அவனது காம வெறிக்கு ஆளாகும் பெண் தனக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை இழக்கும் முதல் தருணம் இக்கதையில் பதிவாகியுள்ளது, பரணில் கிடைத்த மரப்பாச்சியுடன் தனது வாழ்வைக் கழிக்கத் தொடங்குகிறாள் அந்த சிறுமி. பழைய பொம்மையானாலும் புது கவர்ச்சி. அதன் அழகிய வடிவிலும், புராதண ஜடை பின்னல்களிலும் மனசை இழக்கிறாள். எல்லாக் குழந்தைகள் போல அதனோடு உரையாடுகிறாள். தங்கை பிறந்தபின் தன்னைப் புறக்கணிக்கும் பெற்றோரிமிருந்து மரப்பாச்சியிடம் அடைக்களம் ஆகிறாள். 

உயிரற்ற ஒரு பொருள் அவளது வாழ்வின் ஒவ்வொரு பருவத்தோடும் உறவாடுகிறது. மண் போல பருவத்துக்கு ஏற்றார்போல புது வகைப் பழங்களைத் தருகிறது. குழந்தைப் பருவத்தில் விளையாட்டுத் தோழி, சிறு பெண்ணாகும்போது ஊடலுக்கும் கூடலுக்குமான நண்பி. தனது மனம் கூட அறியாத கிளர்ச்சிகளையும் மர்மங்களையும் பகிராமலேயே உணர்ந்துகொள்கிறது மரப்பாச்சி. அவள் அறியாத இன்பத்தை சிறு ஆண் வடிவிலில் தருகிறது. வயதுக்கேற்ற வகையில் விளையாடும் வகையினைத் தெரிந்து அதன் படி நடக்கிறது. தங்கை வளர்ப்பில் கவனம் செலுத்தும் பெற்றோர் இவளை உதாசீனம் செய்யும்போது விடைபெறும் குழந்தைத்தனம் மரப்பாச்சி மீது மையல் கொள்கிறது. எல்லாமேவாக அது மாறுகிறது. இவளது குழந்தைத்தனத்துக்கு ஈடு கொடுக்கிறது; குறும்புக்கு சககளவானி ஆகிறது; எட்டிப்பார்க்கும் பெண்மைக்கு கற்பனையில் தூபம் ஏற்றுகிறது. ஒரு தேர்ந்த confidante.

அத்தை அழைக்கும்போது மறுக்காமல் அவர்கள் வீட்டில் சில நாட்களைச் செலவிட செல்கிறாள். மரப்பாச்சியை மறந்து செல்வது ஒரு துர்சகுனம். ஆனால் தனக்குக் கிடைக்காத அன்பு குழந்தையில்லாத அத்தையிடம் கிடைக்கிறது.  அதனால் அவள் அங்கு மரப்பாச்சிக்கு ஏங்காமல் தங்குகிறாள். மாமாவின் பார்வையும் பேச்சும் அவள் நுழைந்த நேரம் முதலே சரியில்லாமல் இருப்பதை அத்தை உணர்ந்திருக்கிறாள். கழுத்துக்கீழான பார்வையும், இறுகப்பிடித்த சட்டையைத் தொட்டு வளர்ந்ததைச் சுட்டிக்காட்டுவதும் அந்த வயதுக்கு விபரீத அர்த்தத்தைத் தராது. ஆனால் அவள் மயிரடைந்த ஒரு இளைஞனின் மார்பில் கிடக்கும் கற்பனையைக் கொண்டவள். மரப்பாச்சி அவளுக்கு அளித்தது அதைத்தான். வழுக்குப்பாறை. சகஜமாக நடக்காவிட்டாலும் வீழ்வதைத் தவிர்க்கமுடியாது. மரப்பாச்சி ஏன் அதை முன் கூட்டியே சொல்லவில்லை? 

மரப்பாச்சியுடன் இல்லாத இரவு அவளுக்கு வயிறு முட்டிக்கொள்கிறது. இரவின் அழகில், பூக்களின் சுகந்தத்தில் திளைக்க நினைப்பவளை ஒரு முரட்டுக்கரம் கட்டி அணைக்கிறது. மறைவான இடங்களிலெல்லாம் ஆக்ரோஷமாக இறுக்குகிறது. சிகரெட் வாசம். காலையில் உணர்ந்த அதே சூடான மூச்சுக்காற்று. 

ஒரே ஒரு கணம் தான். உடல் வெலவெலக்க அவளை விட்டு மரப்பாச்சியும் குழந்தைத்தனமும் விலகுகிறது. ஒரே ஒரு கணத்தில் சொல்லொண்ணா அசூயை உடலிலும் மனதிலும் ஒட்டிக்கொள்கிறது. சில நொடிகளே நிகழ்ந்த சம்பவம். காலம் முழுக்க மறக்க முடியாக உணர்ச்சிகளை அவளுக்கு அளித்துவிடுகிறது. அறியவொண்ணா உணர்வு தந்த மயக்கத்திலிருந்து முரட்டுத்தனமாக உலுக்கப்படுகிறாள். இதுதானா அவள் உளம் அறிந்த மாய உணர்ச்சி? இந்த இறுக்கமா? இந்த முறையற்ற ஆதிக்கமா? அந்த சிகரெட் வாசமா? சிறு முலையை அழுத்திய முரட்டுக்கைகளின் ஆக்ரோஷமா? இதுவா மரப்பாச்சி தனக்குக் காட்டிய உணர்ச்சி? இப்படித்தான் முடியுமா?

அகல்யையைப் போல தன் மீது பலவந்தமாக வீழும் கரத்தை அகற்ற முடியாது தவிக்கிறாள். இது எந்த விதமான காதல்? உடலதிகாரம். சிறு தசைகளின் உராய்வு தரும் இன்பம். இப்படியா உளத்தைத் தைத்து மாற்ற முடியாத தருணத்துக்கு அப்பால் தன்னைத் தள்ளிவிடும்? மீள முடியாத ஆழத்துக்குள் போய்விட்டாள். இனி கைக்கெட்டு தூரத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த தனக்கே பிரத்யேகமாக ரகசியம் எங்கோ எட்டப்போய்விட்டது. இனி திரும்பமுடியாது.

உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி இழந்த தருணத்தின் கனத்தை மீட்டும் சிறுகதை. ஏதோ ஒரு கட்டத்தில் குழந்தையாகவே உறைந்து போய்விட்டால் என்ன என மர்ப்பாச்சியைப் பார்த்து ஏங்க வைக்கிறது. உடலால் தீண்டப்பட்டு உளம் திருடப்பட்ட பெண்களின் கதைகளையே நாம் மரபு முழுவதும் பார்த்து வருகிறோம். உள்ளத்தை மேலொன்றுக்கு அர்ப்பணிக்கும் பெண்கள் இந்த தருணத்தைக் கடந்துவிடுகிறார்கள். எங்கிருந்து தப்பிச்செல்கிறார்களோ அங்கே ஏதோ ஒன்றை விட்டுச் செல்கிறார்கள் என்றும் அர்த்தம். தன்னைக் காதலான உருவகித்துக் கொண்ட கோதைப்பெண் விட்டுச்சென்ற பெரியாழ்வார் பெற்ற குழந்தையை. மரப்பாச்சி விட்டுச் சென்றது தனது உடல் வளர்ச்சியை. அதை அறிவதற்கு முன்பே இயல்பாகக் கைவிட்டவர்கள் இந்த கணத்தைக் கடக்கிறார்கள். அவர்கள் மீது திணிக்கப்படும்போது சிதைந்து போய் தன்னிலை தவறுகிறார்கள். அதைக் கடந்து மேலொன்றுக்காக தங்களை அர்ப்பணிக்கும்போது முழுமையான விடுதலை பெறுவார்கள். இது போன்ற தருணங்களைக் காட்டுவதால் இது முக்கியமானக் கதையாகிறது.

Comments

Popular posts from this blog

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

கரைகாணமுடியா காமம்

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?