கனவுகளைப் புதைப்பவர்கள்


சில நாட்களுக்கு முன் நடந்த கவிதை விவாதத்தில் கவிஞர் இசை பற்றிய ஒரு உரையாடலில் நவீனக்கவிதையின் அண்மைக்கால மாற்றங்களைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்த நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி , “அது எப்படி? நையாண்டிக்கவிதையைப் பலரும் எழுதியிருக்கிறார்களே? சும்மா மரபைக் கிண்டல் செய்வது என்பது ரொம்ப காலமாக நடந்து வருவதுதானே,” என்றார். அதைப் பற்றிப் பேசப்புகுந்து நவீனக் கவிதை காலகட்டத்தில் வந்த ஒற்றை வரி கேலிகளையும் இன்றைக்கு இசை, வெயில் உட்பட பல கவிஞர்கள் எழுதும் நையாண்டிக்கும் உள்ள வித்தியாசத்தை நுணுகிப்பார்க்கவேண்டியிருந்தது.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மரபை கிண்டல் செய்தும், விழுமியங்களை கேலி செய்தும் பலவிதமான கவிதைகள் எழுதப்பட்டன. அப்போது எதையாவது பற்றிக்கொண்டு சிந்தனையை முன்னகர்த்திவிட வேண்டும் எனும் எண்ணத்தை விட, மரபும் அது சார்ந்த அறிதல்களும் நம்மை பின்னுக்கு இழுத்துவிடும் முக்கியமான கருத்தியல்கள் எனும் எண்ணம் பரவலாக இருந்ததை கவனிக்க முடிகிறது. இது தமிழுக்கு மட்டுமான தனித்துவம் அல்ல. அக்காலகட்டத்தில் மரத்தியில், இந்திய ஆங்கிலத்தில் (my motherland/you are in the world’s slum, the lavatory..) கன்னடத்தில் (நவ்யா) என பல தளத்திலும் நடந்ததுதான். மரபை பற்றி எழுதிய நவீன எழுத்தாளர்கள் கூட அதை மொழி அழகுக்காக மட்டுமே ரசித்து வந்தனர். விழுமியங்களின் அரசியல் பற்றிப்பேசத்தொடங்கிய காலகட்டம். அக்காலகட்டத்தில் நீரில் அழுத்தும் பந்தென விசை மீறி எழும் ஆர்வத்தில் பலரும் மரபை ஒரு பாரமாகக் கருதி வந்தனர். பாரதிக்கு முன்னர் எழுதிய பலரையும் அப்படிப்பட்ட ஒரு டப்பாவுக்குள் அடைப்பதற்கு தயங்கியதில்லை. வணிக எழுத்தாளர்கள் மட்டுமல்லாது இலக்கிய கர்த்தாக்களுக்குக் கூட அந்த எண்ணம் இருந்து வந்ததை நாம் அறிகிறோம். உதாசீனம் இல்லாதவர்கள் கூட ஏதோ போனால் போகட்டும் என ஈர்ப்புக்குத் தங்களை ஒப்புகொடுக்காதவர்களாகக்  காட்டிக்கொண்டார்களோ எனும் எண்ணம் கூட இப்போது தோன்றுகிறது. பின்னிழுக்கும் பாரமாகப்  பார்த்ததோடு மட்டுமல்லாது, வேற்றுமொழியிலிருந்து அடித்த அலைகளும், எதையும் சாதித்துவிட முடியும் எனும் தனிமனித நம்பிக்கையும், முற்போக்காகச் சிந்திக்கும் முறையை பரவலாக்கியது. எழுபதுகளில் வாழ்த்தவர்கள் age of innocence இல் இருந்திருக்கிறார்கள். இந்த பெரிய பிரபஞ்சத்தில் மனிதனின் பங்கை பெரியதாக ஊதிப்பெருக்கிக் காட்டுவதற்கு மகத்தான வெகுளித்தனம் தேவை. அந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட கற்பனைத்தூண்டலும் தொடர்ச்சியாக இயங்கவும் அந்த அறியாத்தனம் அவர்களுக்கு உதவியது எனலாம். தந்தையை வெட்டிச் சாய்த்துவிடும் வேகம். விண்ணை முட்டும் தன்னம்பிக்கையும், அசாத்திய இளமை வேகமும் அதன் உள்ளீடுகள். அவசர அவசரமாக தந்தையைரை புதைத்துக் கொலை செய்தனர். chop down an elder tree - அரவிந்த் மெஹ்ரோத்ரா. அவர்கள்  கோபத்திலும் கோபமாக அடைந்தது என்னமோ ஒன்றுமில்லை என்றானது. அந்த வேகமும், இளமை அவிசும் கொண்டு சேர்த்தது எங்கே?

Must pick up an axe
reach the forest
chop down an elder tree
Move steadily on my raft
burn myself
at every port

(அரவிந்த மெஹ்ரோத்ரா)


இங்கே என் தோணி/ என்னை எரிக்கிறேன் என இளமை வேகம் ஒற்றையாய் உலகை முட்டி மோதி தூளாக்கி வென்றுவிடத்துடிக்கும் துடிப்பு.  குளம்பொலிக்கப் பாய்ந்து வரும் குதிரை போன்றதொரு வேகத்தோடு எதிர்படுகிற எல்லாவற்றோடும் மோதுகிறது.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உளவானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை 
(பிரமிள்)

ரெண்டாயிரத்துக்குப் பின்னர் எழுதிய பலரும் பெரிய நம்பிக்கை ஏதுமற்ற காலத்திலிருந்து மொழியையும் உலகலாவிய சிந்தனையையும் கையாள்கிறார்கள். இவர்கள் அறியாத்தனம் அற்றவர்கள். இலக்கியத்துக்குள் நுழைவதற்கு முன்னரெ வாழ்வின் சகல வெகுளித்தனங்களையும் முற்றாக ஒழித்துவிட்டவர்கள். எவ்வித சுயதேடல் முயற்சியுமின்றி அவர்களால் இந்த பொய்த்தன்மையை ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.பெரிய கேள்விகள், கனவுகள் அற்றவர்களாக மாறிவிட்டனர. ஒற்றைப் பார்வையில் உலகின் நொய்மைப் போக்கை எதிர்கொள்ளப் பழகியவர்கள். பிறந்ததுமே வெகுளித்தனத்தை இழந்தவர்கள். தம்மை மீறிய கனவுகளும், அளவுக்கதிகமான எதிர்பார்ப்பும் இந்த உலகில் தேவையற்றவை என்பதை உணர்ந்துகொண்ட தலைமுறை. நம்மைச் சுற்றிலும் அடையாகக் கிடக்கிற விளம்பர உலகும் அதனூடாகக் கிடக்கும் சுயநலங்களும் வெட்டவெளிச்சமாகிப்போன காலகட்டம். இவர்கள் தங்களை ஏமாற்றிக்கொள்ளும் தலைமுறை அல்ல. அளவுக்கதிகமான நிதர்சனத்துடன் சில சமயம் இயங்குவதால் தங்கள் கனவுகளைக் கூட கட்டுக்கோப்பாகக் காண்பவர்களோ எனும் அச்சுறுத்தலும் இத்தலைமுறையினரின் சாபம். ஆனால் இவர்கள் முன் இருக்கும் நாயகர்கள் அப்படிப்பட்ட மொன்ணைகத்திகள். சுற்றியிலும் முழுவதுமாக மூடப்பட்ட எறும்புப்புற்று போல வேடங்களும், பலதரப்பட்ட உண்மைகளும் சூழப்பட்டவர்கள். 

மு.மேத்தாவின் கவிதையில் இருக்கும் கேலிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மு.மேத்தா முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர். மரபை மீறிச்செயல்படும் ஆவேசமும், வெகுளித்தனமும் நிறைந்தவர். பேகன் கொடுத்த போர்வையால் கூட ஒரு சமூக நீதியைச் சாடும் ஆவேசம் அவரது கவிதைகளில் தெரிகிறது. உணர்வுநிலைக் கவிதைகள். அதன் உணர்ச்சி என்பது இதுதான் - பசியில் இருக்கும் மீன் குஞ்சுக்காக நீந்தி உணவை எடுத்து வரும் வெளியாளின் கருணை போன்றது; நீந்தக் கற்றுக்கொடுக்கும் தாயின் நிதர்சனமும், ஞானசுத்தியும் கொண்டதல்ல. தேவை உடனடி செயல்.

”மயிலின் நடுக்கத்துக்குப் 
போர்வை கொடுத்த பேகனே 
எங்கே போய்த் தொலைந்தாய்? 
வா 
லட்சோப லட்சம் பச்சை மயில்கள் 
வறுமை அடிமை வரதட்சணைக் கொடுமை 
இவற்றில் நடுங்குகின்றன – என்றேன் 
வேக வேகமாய் 
எதிரே வந்த பேகன் 
அவசர அவசரமாய்ப் 
போர்வையை எடுத்துத் 
தன் 
முகத்தைப் போர்த்துக்கொண்டான்”

(மு.மேத்தா)

தந்தையரைக் கொல்லாது தங்கள் கனவுகளையும் வேகத்தையும் கொல்ல நினைக்கிறது இன்றைய கவிஞர் உலகம். இதனாலேயே தந்தையருக்கும் இவர்களுக்கும் மட்டுமல்ல, அவர்களது ஆதிமூலனிடம் கூட இவர்களால் நெருங்கி தோளணைக்க முடிகிறது. தந்தையரைக் கொன்று மேலே நிற்க நினைப்பதில்லை. 

வேறொருவனாக தான் மாற நினைக்கும் ஆசை என்பதே செயல்வேகங்கொண்டு வெறியாக மாறுகிறது. கற்பனைக் கவசத்தை அணிய முடுக்கும் வேகம். வேறொருவனாக மாற முடியாத பட்சத்தில் தன் இருப்பு கசப்பாகவும் வெறுப்பாகவும் ஆகிறது. இதுதான் பழைய தலைமுறை எடுத்தப் பாதை. 



இன்று இருப்பவர்கள் புதிதாக மாறி எட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயங்களை ஒழித்துவிட்டனர். அவர்கள் எட்டிப்பிடிக்க வேண்டிய ஊக்கத்தையும் தேவையையும் செயல்படுத்தா வண்ணம் பழகிவிட்டனர். சுற்றியிருக்கும் சூழல் இளமையிலேயே இவர்களிடமிருந்த அந்த வெகுளித்தனத்தைப் பிடுங்கிவிடுகிறது. வெகுளித்தனம் இருப்பதினால் இளமை வேகம அந்தம் தெரியாது காட்டாறு போல ஓடும். இன்று அவர்கள் காலம் முழுக்க கனவுகளைச் சுமந்துகொண்டு தானிலாத ஏதோ ஒன்றைத் தனதாக்கும் பொருட்டு எட்டிப்பிடிக்க வேண்டிய பாரத்தை விட்டுவிட்டனர். இவர்கள் தந்தையரைக் கொல்லத் தேவையில்லை. இதனாலேயே அந்த இடைவெளி குறைந்துவிட கேலியும் கிண்டலுமாக காலத்தை முன்னுக்குப் பின்னாக ஓட்டிப்பார்க்க முடிகிறது. முன்னோரும் அவர்களது மரபும் இவர்களுக்குச் சுமையல்ல, அது அடுத்த வீட்டை எட்டிப்பார்த்துவிடத் துடிக்கும் குறும்பு மட்டுமே. நடக்கும்போது பாதை ஓரங்களில் இருக்கும் பூக்களைத் தொட்டுப்பார்த்தும், இலைகளை கிள்ளிப்போட்டும் செல்லும் சகஜபாவம் உள்ளவர்கள். 

எவ்விதமான தயக்கமும் இல்லாது பரோட்டா போட்டபடி எஸ்பிபியிடம் அதுவா அதுவா எனக் கேட்க முடிகிறது, ஹஸ்தினாபுரத்தின் ரயில்நிலையத்தில் மண்ணைத் தொட்டதும் தொலைக்காட்சி நாடகக் காட்சி போல தொடை தட்டி ஒரு குண்டூசி கூடக் கிடையாது என “போலச்செய்ய” முடிகிறது. கொடுமையான வெயிலில் மூளை சூடானவன் போல பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த மின்சாரம், ஃபேனை 20இல் வை என சகட்டுமேனிக்கு கட்டளை இட முடிகிறது. இசையின் இந்த விவரணைகளில் தெரிவது தந்தையரைப் புதைக்க வரும் வேகமல்ல. இது வாழ்க்கை இவ்வளவுதான் அளித்திருக்கிறது என்னும் விவேகம். இந்த சட்டகத்துக்குள் நான்காம், ஐந்தாம் பரிமாணங்களில் வாழ்வைப் பார்ப்பது எப்படி எனும் கருத்தியல் மட்டுமே உள்ளது. அந்த பரிமாணங்களில் எல்லாவற்றையும் பாகுபாடின்றி ஒரு நேர் கோட்டில் அணுகலாம்.

வரலாற்றிலிருந்து யாரையும் விளித்து சகஜமாக உரையாடும் சுதந்திரத்தை இது கொடுக்கிறது. மரபிலிருந்து பிய்த்தெடுத்து கபிலர், பரணர், கம்பர் என யாருடனும் சகஜமாக உரையாடலாம். அவர்களது விழுமியங்களின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தாது உரிமையோடு பழகலாம். நேர் எதிர் இயக்கங்களை உருவாக்காமல் சுதந்திரமான சமதளத்தை இது அளிக்கிறது. ஆனால் இந்த இயல்பு பாதகமற்ற பாதை அல்ல..

இன்றைய கவி எதை நோக்கிச் செல்கிறான் எனும் கேள்வி எழாமலில்லை. அப்படி எட்டிப்பிடிக்க தொடுவானை நோக்கி கைகளை நீட்டித்தான் ஆகவேண்டுமா என அவன் கேட்கலாம்.  ஆனால் கவிமனம் எல்லாவற்றையும் நோக்கிச் சமமாக விரியும் என்பதை நம்புவதற்கு ஒரு வெகுளித்தனம் தேவை. இந்த பாதை உடைபெறும் சமநிலைக்குலைவு சீக்கிரமே வரும். சர்வோதயத்தில் அவனுக்கு இருக்கும் அதே நம்பிக்கை கீழ்மைகளிலும் இருக்கும்போது சமநிலக்குலைவு என்பது அடுத்தத் திருப்பத்தில் காத்திருக்கும்.

எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்
அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது

அடேய் சுடலையப்பா
இந்த பந்தை வானத்திற்கு அடி
திரும்பி வரவே வராதபடிக்கு
வானத்திற்கு அடி
(இசை)

சாலையில் இறந்துகிடக்கும் முதியவவனை அருகில இருப்போர் அணுகுவதைப் போலொரு கவிதை. தயங்கித் தயங்கி நகரும் பேருந்தில் ஒருவன் புத்தகம் படிக்கிறான். அநாதை போல இறந்தவனுக்கு தாயிருக்கலாம், தந்தை, மனைவி, நேற்று பிறந்த குழந்தை என எல்லாரும் இருக்கலாம். அவனைக் கிடத்தி தரையில் சுற்றி வட்ட வரைபடம் கிடக்கிறது. யாருமில்லை அவனுக்கு. சுற்றிலும் வேடிக்கைப் பார்ப்பவரும், எட்டிப்பார்த்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. அதில் நாமோ கவிஞரோ புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கலாம். ஒரு நிமிடம் தயங்கிவிட்டு வேகமெடுக்கும் வண்டி போல நாமும் படிப்பதை ஒரு கணம் நிறுத்தி அடுத்த கணமே தொடரலாம். எல்லாம் அதனதன் நிலைக்குத் திரும்பிவிடும். சமூகக் கோபமாகவோ, தனது இயலாமை குறித்த கழிவிரக்கமாகவோ இது மாறாது. நடுவே “பேருந்துக்குள் தமிழின் மிக முக்கிய இளம்கவி/இருக்கிறான்” எனும் கறுப்பு நகைச்சுவை ஒன்றை திணிக்கும் சொற்கள் நவீனத்துவ காலத்திய கவிஞனிடம் இல்லை. தன்னால் உயிரையே கூட மீட்டு வந்துவிட முடியும் எனும் வேகம் அவனிடம் கூடுதலாகத் தென்படும். இன்றைய கவிஞன் எbப்பேர்பட்ட கணத்திலும் தான் ஒரு முக்கியமான கவி என மிகவும் தேவையான ஒரு தற்சுட்டலை சொருகிவிடுவான். சுயகேலி என்பது தன்னிலிருந்துத் தொடங்கி வரலாற்றில் எங்கும் சென்று மீண்டும் தன்னிடமே திரும்பிவிடும் சுதந்திரம் அவனுக்கு உண்டு.

ஓடுமீன் ஓட உறுமீன் என எதற்கும் காத்திருக்காதே:-


இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது
கிடைக்கிற குஞ்சுகளைக்
கொத்தித் தின்
என் கொக்கே

என சிவாஜி கணேசனிடம் மட்டுமல்ல கொக்கிடம் கூட சகஜமாக உரையாடும் தன்மை இவனிடம் உண்டு. ஆனால் இழந்ததை விட பெற்றது அதிகமா எனும் இயல்பான கேள்வி எழலாம். அவனிடம் இதற்கு பதில் எதிர்பார்ப்பதை விட வியர்த்தம் வேறொன்றுமில்லை.

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

கம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்