போர் எனும் பெருந்தீனிக்காரன் - ததீசி முனி


போர்க் கருவிகள் இருந்தாலே போர் செய்யும் உணர்வு வந்துவிடும். அக்காலம் முதலே போரைத் தவிர்ப்பதற்கு ஆலோசனை சபைகளும், சூழ்ச்சி விளைவிக்கும் ஒற்றனின் குறிப்புகளும் பயன்பட்டு வந்தன. உடனடி போரைத் தவிர்த்து சூழ்ச்சிக்குள் இறங்கி உயிரிழைப்பைத் தவிர்க்க நினைக்கும் திட்டங்களையும் நாம் கம்பராமாயணத்தில் காண்கிறோம். ராமன் மட்டுமல்லாது கொடிய அரக்க ராஜன் எனக் கூறப்படும் ராவணன் கூட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியிருப்பதைக் கம்பர் பாடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக  வெளிப்படையாகத் தெரியும் வடிவில் மட்டுமே போர்க்கருவிகள் எப்போதும் வருவதில்லை. நல்லுருவமும் தீயுருவமும் கொண்டு மாயமாக அவை வருவதை நாம் புராணங்களிலும் காப்பியங்களிலும் காண்கிறோம். பூதனை, சுரசை, அங்காரதாரை, கூனி, சகுனி என போர் தெய்வம் தம் கருவிகளை வெளிப்படையாகத் தெரிய வலம் வருவதில்லை. பலருக்கும் காமமும், குரோதமும், மோகமும் மாயமாகத் தங்கள் சுய சிந்தனையை மறைக்கும். சீதையின் அழகு மீதான ஆசையின் உருவில் ராமாயணத்திலும், தருமனின் சூதாட்ட வெறியின் மாயத் தோற்றத்தில் மகாபாரதத்திலும் போர் தனது ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தது.

சிறிய தோட்டா

கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டுப் போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய
தோட்டா
குழந்தையின் உடலுக்கென

(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - கவிஞர் நரன், டிஸ்கவரி புக் பேலஸ்)

புராணத்தில் வரும் ததீசி முனிவர் வித்தியாசமானவர். சும்மா போகும்போது ஆயுதங்களோடு போகாதீர்கள் என காவற்படையினருக்கு ஆலோசனை வழங்கியவர். புராணத்தில் பாற்கடலைக் கடையப் போன அசுரர், சுரர்களுக்கு அவர் கூறியது உபயோகமாக இருந்தது. கடையப் போகும் இடத்திற்கு வேலும், சூலமும், வில்லும் எதற்கு? அவர் முன்னே மலையெனக் குவித்து வைத்த ஆயுதங்களை ஒரேடியாக விழுங்கி தன் முதுகுத்தண்டோடு பொருத்திக்கொண்டார்.

அப்படி ஒரு ததீசி முனி வேண்டும் நமக்கு.

நம்முன் இருக்கும் போர் குணங்களையும், காம, குரோத மோக வெறிகளையும் சமர்ப்பிக்க ஒருவரின் தாள் வேண்டும்.

ஆலோசனை, போராட்டம், நடைகோரிக்கை செல்லுமிடத்தே ஆயுதங்களை சரித்து வைத்துச் செல்ல ஒரு ததீசி வேண்டும் நமக்கு. நம் பாரங்கள் குறைந்து போகும்வழி மாசுப்படாமல் இருக்கும்.

ஐவகை அச்சம் தவிர்க்கும் மாநிலங்காவலர் வேண்டும் என சேக்கிழார் சொல்கிறாராம். பெரிய புராணத்தில். தன்னால், தன் அதிகாரிகளால், வெளிநாட்டவர் பகையால், கள்வரால் என நாலு வழி சொன்னவர் கடைசியாகச் சொன்னது முத்தாய்ப்பு - ஒரு உயிருக்கு மற்றொரு உயிரால் துன்பம் நேரும் அச்சத்தையும் தவிர்க்க வேண்டுமாம். இவன் கவிஞனும் பெரும் ஞானியுமில்லாமல் வேறென்ன? 

அடுத்த நாள் காலை மகுடம் என்றபின் வசிட்டனின் அழைப்பின் பேரில் அரசூழ்தல் ஆலோசனைப் பெறப்போன அறத்தின் மூர்த்தி துயிலுக்கு முன் கேட்டது -

யாரொடும் பகைகொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அதுதந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

போர் இல்லாமல் இருந்தால் ஒரு குடி கூட கெடத் தேவையில்லை. போர் மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் பகை உண்டாக்காது, ஐந்து வழி பயத்தையும் உண்டாக்காது இருந்தாலும் குடி கெடாது.

ஆட்சி கெடாது பகை அல்லாவிட்டால் என உறங்கியவன் எழுந்ததும் தன் ரெண்டாவது தாயின் பகையானான். கூனியின் போர் குணத்துக்கு இரையானான். எப்பேர்ப்பட்ட நகைமுரண் இது?

ஆயுதங்கள் உள்ளுக்குள்ளும் உண்டு. அவை கூர் தீட்டப்படாது புகை மூட்டமாக இருத்தல் வேண்டும். புகைக்கு நடுவே தீயைப் போல பகைக்கு நடுவே பண்பு. தீ மூண்டால் போர் கருவிகள் சூள் கொள்ளும். தத்தம் வேகத்தை அடைந்து வேரொடு கெடுக்கும்.

வேறென்ன செய்ய

உருவானார்கள் மகான்கள்
நெடிய தவத்தினால்
கெடுதிகளை கண்டுணர்ந்தார்கள்
உலகின் மீதான பற்றுதல்களால்
பிரகடனப்படுத்தினார்கள் விடாது
வழித்தோன்றியவர்களும் தொடர்ந்தனர்
கதை கவிதை ஓவியமென
தனக்குத் தெரிந்த மொழிகளில்
இயற்கையும் சொல்லிப் பார்த்தது
அதற்கான மொழியில்
நிலம் நடுங்கி புயல்கண்டு
சுனாமியாகி கொத்தாய் பறித்தும்
எதையும் செவிகொள்ளாது
சுயம் வளர்க்க தீராபசியோடிருக்கும் 
அழிவின் வேட்டையில் தீராதிருக்கும்
மயிராண்டிகளின் வாழ்வின் மீது
சாவகாசமாய் நின்று
நிறைவான மூத்திரம் பெய்வோம்

(மதுவாகினி - கவிஞர் ந.பெரியசாமி, அகநாழிகை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

கரைகாணமுடியா காமம்

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?