சுனில் கிருஷ்ணன் வாழ்த்துரை, அம்புப் படுக்கை விமர்சனம்.

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இலக்கிய உலகில் எனக்கிருக்கும் மிகச் சில நண்பர்களில் ஒருவர். நண்பர் நட்பாஸ் கூறியது போல, சுனில் பிறருடனான பொதுவான அடையாளங்களைக் கண்டடைந்து உரையாடுபவர். இலக்கிய செயல்பாடுகளில் தணியாத ஆர்வமும் தீவிரமும் கொண்டவர். அவருக்கு இந்த வருடத்தின் சாஹித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்திருப்பது எனக்கே கிடைத்தது போல மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.


சுனில் எழுதத் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து நாங்கள் உரையாடியபடி இருக்கிறோம். ஆம்னிபஸ் தளத்தில் இணைந்து பணியாற்றினோம். சொல்புதிது, பதாகை என பல குழுக்களில் தொடர்ந்து ஒன்றாய் பயணம் செய்திருக்கிறோம். ஆம்னிபஸ் செயல்பட்ட ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் மடலில் உரையாடியிருக்கிறோம், விவாதம் செய்திருக்கிறோம். நான் எழுதும் ஒவ்வொன்றையும் நண்பர் நட்பாஸும், சுனிலும் உடனடியாகப் படித்துக் கருத்து சொல்வார்கள். இன்று வாட்ஸப்பிலும் அது தொடர்கிறது. இத்தனை வருடத்தில் சுனிலின்  செயல் வேகம் குறையவில்லை; அதிகமாகியபடி இருந்திருக்கிறது. இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, விமர்சகராக அவர் மாறியிருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். இந்த விருது அவரை மேலும் சிறப்பானதொரு பயணத்துக்குத் தயார் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான சான்றுகளை சமீபத்தில் அவர் தந்த தொலைக்காட்சி பேட்டியிலும், விருது பாராட்டு விழாவின் காணொளிகளிலும் பார்க்க முடிகிறது.

சுனில் கிருஷ்ணனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

காலம் இதழில் வெளியான அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக்கட்டுரையைக் கீழே படிக்கலாம்.

**



சுனில் கிருஷ்ணனின் - “அம்புப்படுக்கை” - சிறுகதைத் தொகுப்பு
யாவரும் பதிப்பகம் வெளியீடு

மானிடப்பூச்சிகளின் வாழ்க்கை ஒரு கனவினும் கனவாம்

பத்து கதைகள் கொண்ட சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பு “வாசுதேவன்” எனும் கதையில் தொடங்குகிறது. காலவரிசைப்படி இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் முதலில் எழுதப்பட்டது. ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும் முதல் கதைக்கு என ஒரு தனி உயிர் உண்டு என எனக்குத் தோன்றும். பள்ளிக்கூடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடைதெரிந்தும்  முன்னால் வரத்துடிக்காத மாணவனும் இருப்பான். ஆனால் சிறந்தவன் என நினைப்பவன் முன்னே நிற்பான். எல்லா தொகுப்புகளிலும் இப்படி முந்தி நிற்கும் கதைகளிலும் கவிதைகளிலும் நான் ஆசிரியரைப் பார்ப்பேன். அதுவும் முதல் தொகுப்பின் முதல் கதை என்பது ஒரு பிரகடனம். ஏனோ எழுதப்பட்ட முதல் கதை எனும் நிலையைத் தாண்டி என் படைப்பின் முதல் வாசற்படி இதோ இங்கே இருக்கு. இதுதான் நான் எனும் பிரகடனம் அதில் தெரியும். எழுத்தாளன் முன்னெடுக்கப்போகும் தேடலின் முதல் அடி. வணிக நோக்கின்படி முதல் சில கதைகளின் வாசிப்புத்தன்மையைப் பொறுத்துதான் புத்தகத்தின் விற்பனை இருக்கும் எனும் விதிகளுக்குள் நான் போகவில்லை. தமிழ் இலக்கியத்தில் அப்படிப்பட்ட வணிக யுத்திகள் எடுபடாது என்றே நினைக்கிறேன்.

“வாசுதேவன்” எல்லாவிதத்திலும் சுனில் கிருஷ்ணனின் முத்திரைக் கதை. மரணம் என்பதை ஒரு ஊசலாட்டமாகவும், உயிர் இச்சையை நிரந்த்ரமாகவும் நினைக்கக்கூடிய மனப்பான்மை பற்றிய கதை. உலகத்திலேயே சிரிப்புக்கு உரியது என்ன தெரியுமா, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் மனிதன் தான் மரணமில்லாதவன் என்பதுபோலொரு பாவனையில் வாழ்வது எனும் தருமனின் சிந்தனையை ஒட்டிய கதை. வாசுதேவன், அண்டத்தில் உயிர்களை ரட்சிப்பவன். வாசுதேவன் எனும் இளைஞன் உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலோடு நாட்களைக் கடத்துபவன். அவனது அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க சிகிச்சை கொடுக்க வரும் கதைசொல்லியும் அவனது இணங்கநண்பன் இளங்கோவும் முதலில் வேண்டாவெறுப்பாக ஆயுர்வேத உடல்பிழிசல் செய்கிறார்கள். அவர்கள் தொழில் தர்மத்துக்கு எதிரான மனோபாவம் கொண்டவனாகக் காட்டப்படும் இவர்கள் கடமையென சிகிச்சையைச் செய்கிறார்கள். உடல் சிகிச்சை மீறி மருத்துவரின் நம்பிக்கையும் நோயாளியின் மனத்திடமுமே வியாதிலிருந்து நம்மை குணப்படுத்துகின்றன. எந்தவிதமான சுரணையுமில்லாது கிடக்கும் வாசுதேவனுக்குள் கங்குபோல உயிர் இச்சை துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சிகிச்சையின்மூலம் சிறு மாற்றங்களை அடைகிறான். அதே சமயம் இதற்கு நிரந்தரமான விடுதலை அல்ல என்பதும் எல்லாரும் அறிந்ததே. பிரக்ஞை ஒவ்வொரு கணத்திலும் உடல் உறைந்துபோன கணத்திலும் கிடக்கின்றது. 

ஒருவிதத்தில் மரபும் நவீனமும் இணைந்த சுனில் கிருஷ்ணனின் நடையில் நாம் எதிர்பாராத இடங்களை அடைய முடியாததும் இயல்பானதே. நவீனத்தின் எதிர்மறைப்பண்பான மரபு மீதான உதாசீனத்தை அவர் நாட்டார் கதைகளின் மூலம் கடக்கிறார். அதே சமயத்தில் மரபு மீதான எதிர்மறை நிலைப்பாடுகளைக் கவனமாகக் களைய முற்படுகிறார். அதில் அவர் முழுமையாக வெற்றியடைகிறார் எனச் சொல்ல முடியாது. உதாரணமாக காளிங்க நர்த்தனம் கதையில் வரும் யோகக்குறியீடுகள் காளிங்க நடனமாக இருப்பதும் அதுவே தலைமுறைகளை விழுங்க வரும் சாபமாக அமைவதையும் சொல்லலாம். யுகம் யுகமாகத் தொடரும் ஒரு சுழற்சியை நம்முன் காட்டும் கதை விடுதலையற்ற நிலையாக ஆகிவிடுவதும் ஒரு எதிர்மறை அம்சமே.

“பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” மற்றும் “பேசும் பூனை” கதைகள் நவீன வாழ்வின் சிக்கல்களைப் பற்றி இரக்கமற்ற முறையில் குறிப்பிடும் கதைகள். நவீன வாழ்வு தரும் செளகரியங்கள் நமக்கு அதிக நேரத்தை அளித்திருக்கின்றது. உபரியாகக் கிடைக்கும் நேரம் நம் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் எப்போதுமில்லா உளவியல் நெருக்கடியை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். கால் இன்சு அன்பு கூட இல்லாத உலகத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கை வளங்கள் மீது அலட்சியம்,  சக மனிதனின் மீது கரிசனமற்றத்தன்மை, நாடுகளுக்கிடையே பலநிலைகளில் நெருக்கடி நிலைமைகள் என சகலமும் விரியும் அண்டத்தத்துவம் போல ஒன்றை ஒன்று விலகிச்சென்றபடி உள்ளது. இதில் கணவன் மனைவி உறவோ, மகன் தந்தை உறவோ விலக்கல்ல. “பொன் முகத்தை” கதை நம் உறவுக்குள்ளே இயங்கும் ஊசலாட்டத்தைப் பற்றியது. நடைமுறையில்  உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வுத்தன்மை நம் மன இயல்புகளோடு நெருக்கமான தொடர்புகொள்ளும் ஒன்று. கீழே பிளந்து செல்லும் வேர் மண்ணின் நெகிழ்வுத்தன்மையைப் பொருத்து தனது இயல்பை வெளிப்படுத்துவதுபோல நம் மன அமைப்பு சூழ்நிலைக்குத்தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் உறவுகளுக்குள் உருவாகும் நெருக்கங்களும் தூரங்களும் நம் காலத்தின் புதிய விதி. 

வாசுதேவன் கதையில் அவனது அக்காள் குழந்தையுடன் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவது ஒரு திருப்பம் தரும் தருணம். ஒன்று - கையிலிருக்கும் உயிரை பாதுகாப்பதில் வரும் சுணக்கம் என்பதைவிட நம் கண் முன் ஒரு உயிரின் வதையைப் பார்க்கத் திராணியற்ற உள்ளத்தின் குமுறலாக அவனது அப்பா அம்மாவின் குரல் கேட்கிறது. மற்றொன்று - புதிதாக வந்திருக்கும் குழந்தைக்கு நாம் காட்டக்கூடிய வாழ்க்கை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிறு மனோகிலேசம். இது ஒரு கையாலாகத்தனம் என்றாலும் நம் மதிப்பீடுகளை அவர்கள் மேல் போட்டுப்பார்க்க முடியாது என்பதே உண்மை. சதுப்பு நிலப்பகுதிகளிலும், பசுமைக்காடுகளிலும் காயல்களில் காணப்படும் பூச்சி உயிர் போராட்டங்களில் கருவறையும் பிணவறையும் ஒரே குழியாக அமைவதுதான் இயற்கை. பூச்சிகளின் வாழ்வில் இருக்கும் இந்த உண்மை ஒரு இயற்கையின் ஒரு பகுதியே.

அம்புப்படுக்கையில் ஆனாரூனா செட்டியாரின் மீதிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் அத்தகையதே. உயிர் பிழைத்திருப்பது ஒரு வரமென்றாலும் அது சில சந்தர்பங்களில் அதீத இம்சையும் கூட.  பொதுவாக மருத்துவர்கள் மரணத்துக்கும் சீக்குக்கும் பெரியளவு அசைந்துகொடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவற்றின் மீது ஒரு மெல்லிய தருக்கப்போர்வையைக்கொண்டு மூடியிருப்பார்கள். அந்த தருக்கம் அவர்களுக்கு அறிவியல் தந்ததாக இருக்கலாம், அல்லது பொதுவாழ்வில் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு காட்சியினால் இருக்கலாம். மருத்துவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் மரணத்தைப் பற்றி எழுதும்போது அதீதமான சமநிலை கைகூடிவிடுகிறது. அதில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அதிகம் கலக்காமல் ஒரு இயற்கை நிகழ்வுக்கு சாட்சிமுகமாக நிற்பவனின் முகபாவனையை அவர் மேற்கொண்டுவிடுகிறார். முன்னரே சொன்னது போல, இது அவரே திட்டமிடப்பட்டு அமைத்த பாதையில் முதலிலிருந்து நடக்கப்பழகுவது போன்ற உணர்வினைத் தந்துவிடுகிறது. எங்கே குண்டுங்குழியுமாக இருக்கும் எனத் தெரிந்து அதற்கு ஏற்றார்போல வண்டியை ஓட்டுகிறார். சகஜமான மொழியாக இவை அமைய உதவினாலும், புனைவு எனும் மாயப்புதிரை சிக்கல்படுத்துவதும் அவிழ்ப்பதும் கெட்டித்த பாதையில் பயணிக்கிறது.

குருதிச்சோறு - இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இதை ஆக்குவது பாலாயி எனும் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தில். தெய்வங்கள் உருவாகும் கதையே குருதிச்சோறு. குல தெய்வம், சிறு கூட்டத்தினருக்கான தெய்வம் என்றும் அடிப்படையான உணர்வுகளின் உருவகமாகவோ, குலத் தொடர்ச்சிக்குத் தேவையானவற்றை வழங்கும் சாமியாகவோ அமையும். இங்கு குருதிச்சோறு எனும் குல தெய்வ சடங்கு ஒன்று அரங்கேறுகிறது. குருதியில் வடித்த சோற்றை காற்றில் ஏறி நிற்கும் மூதன்னை ஒருத்தி கபளீகரம் செய்யும் காட்சியுடன் கதை தொடங்குகிறது. அவளது பசி அடங்குவதில்லை. பாலாயி என்பவள் அன்னத்தை வழங்கும் அன்னையாக மாறி நின்று அழியச்செல்லும் கூட்டத்தைக் காத்து நிற்பவளாததால் மூதன்னையாக மாறும் சித்திரத்தைக் காட்டும் கதை. குல தெய்வ வழிபாட்டில் தொன்மங்களின் உருவாக்கம் ஒரு புது உலகை சிருஷ்டித்துக் காட்டத் துடிக்கும் கலைஞனின் வழி. இன்றைய பின் தொன்ம காலத்தில் குருதிச்சோறு போன்ற மறு உருவாக்கங்கள் நமது மூதாதையரின் அடிப்படை கேள்விகளை நோக்கி நம் சிந்தனையைத் திருப்பும் முயற்சி. ஒருவிதத்தில் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதைக் காட்டுகிறது.

திமிங்கலம் கதை ஒரு அறிவியல் புனைவுச்சித்திரத்தைக் காட்டும் முயற்சி. apocalypse சித்திரம் இல்லாத சமூகங்களே கிடையாது. மனிதனின் நனவிலிகளில் உயிர் நீட்டிப்பைத் தடுக்கும் சகலவிதமான சித்திரங்களும் சுவரோவியம் போலத் தீட்டப்பட்டிருக்கின்றன. அனுபவமில்லாத அனுபவத்தில் அவை ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இக்கதை உலகை அழிக்க வந்திருக்கும் இரு பெரு நிகழ்வுகளின் பின்னணியில் சமூக மாற்றத்தினை காட்டுகிறது. மனித அழிவை நிறுத்தும் பல முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடும் சமயம். அப்படி மனிதனை அழிவிலிருந்து முழுமையாகக் காக்க முடியுமா எனும் கேள்வி நோக்கிச் செல்லும் பயணம் இக்கதை.

ஆரோகணம் ஒரு சிறு மனிதனின் மகத்தானப் பயணம் பற்றியது. திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் வெற்றியைப் பெறுவதில் இருக்கும் களிப்பு பற்றியதல்ல. மனித உருவெடுத்த யாருமே இதுவரை செல்லாத பாதையில் செல்லத் துணியும் ஒரு மனிதனின் கதை. மாமனிதன் என வரலாற்றால் பொறிக்கப்பட்டு மனித மனதின சாத்தியங்களை சோதனை செய்துபார்த்தவர். வாழ்வில் எதிர்படும் சங்கடங்களையும், தடைகளையும் எதிர்த்து ஒரு பாதை உருவாக்கக் கைகொள்ளும் விளக்கை வழிநடத்துவது எது? தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனும் எளிய சூத்திரத்தை சோதித்துப்பார்த்து அது அத்தனை சுலபமல்ல என புரியவைத்தவர். ஆனால் ஒவ்வொரு அடியும் பின்னால் சுழித்து சென்ற பதையின் மீது பாவிக்கப்பட்ட திடமான கற்பாதைகள் அல்ல. தேவைக்கேற்ப முந்தியும் பிந்தியும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மனதின் வழிநடத்தலுக்கு ஏற்ப முன் செல்ல்லும் பயணம். காந்தியுனுடனே வந்த நாய் அவரது மனசாட்சி மட்டுமே. கடைசிவரை சற்றே பின்னே இரைக்க ஓடிவந்த மனசாட்சி. காந்தியும் காந்தியமும் முன் சென்றபடியே உள்ளனர்.

சுனில் கிருஷ்ணன் எழுத்தில் மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் சில உள்ளன. 

எழுதப்பட்ட கதைகளில் இருக்கும் அதீத ஒழுங்கு. மொழியின் ஒழுங்கு என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக சிறுகதை சுட்டி நிற்கும் படிமங்களும், கனவுகளாக வரும் மன ஓட்டங்களும் திட்டவட்டமான நோக்கத்தோடு அமைந்துவிட்டதை அதீத ஒழுங்கு என இங்கு குறிப்பிடுகிறேன். உதாரணத்துக்கு, காளிங்க நடனம் பகுதியின் முடிவில் வரும் விவரணைகளைக் குறிப்பிடலாம். புனைவின் மர்மத்தன்மையைக் கூட்டும் விதமான எழுதப்பட்ட இந்தப் பகுதி, ஆசிரியர் செல்ல வேண்டி உத்தேசித்த திசையில் ஒழுங்கு மீறாமல் செல்கிறது. முன்னேற்பாடுகளின்றி புனைவு எழுதக்கூடாதா எனும் கேள்விக்கு இங்கு இடமில்லை. கனவுகளும், படிமங்களும் புனைவின் நிழலாக அமைந்திருப்பது அவற்றின் மாயத்தன்மைக்கு மெருகேற்றும் சாத்தியத்தைத் தொட்டுப்பார்ப்பதற்காகத்தான். அவை புனைவு செல்லும் திசைக்கு எதிர்திசையில் கூட இருக்கலாம் என்பதே அவற்றின் விசேஷம். கச்சிதமான அமைப்பில் சிறு விலகலுக்கான வெளி. வாசுதேவன் கதையில் இது அமைந்துவிடுகிறது. வாசுதேவன் அழிவற்ற பரம்பொருள் எனும் வரும் இடத்தில் இப்புனைவின் சாத்தியத்தை நாம் மறு பார்வை பார்க்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு மொழி நடை நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது. பொதுவான நடையில் வரும் கதைகளில் இருக்கும் நிதானம் நாட்டாரியல் கதைகளைப் பேசும் காளிங்க நர்த்தனம் கதையில் இல்லை. இதையே வேறு விதங்களில் சொல்லப்போனால், யதார்த்தக் கதையின் மொழியிலிருந்து முற்றிலும் விலகிய ஒரு நடையைக் கொண்டு மாயக்கதைகளை எழுதும்போது படிமங்கள் மேலும் கூர்மையான அர்த்தங்களை அடைகின்றன. அதை அடையும் முயற்சியை அவர் அடுத்தடுத்த கதைகளில் அடைவார் என நம்புகிறேன்.

நிகழ்வுகளை படிமங்களாக மாற்றி குறிப்பிட்ட சூழலிலிருந்து பிரித்தெடுத்து அடிப்படை உணர்வுகள் நோக்கி நகரும் தன்மை. ஆரோகணம் கதையில் இந்த நோக்கு இல்லாததன் குறையை உணர முடியும். வாழ்க்கையின் அடிப்படை விழுமியமான மெய்ம்மையை தேடிச்சென்ற இருவேறு காலகட்டத்தில் வாழ்ந்த நாயகர்களை இணைக்கும் கதை. தருமரின் வேதாந்தக் கதையில் காந்தியைப் பொருந்திப்பார்க்கும் கணம். தர்மரின் குழப்பங்களை காந்தியின் கேள்விகள் சென்று தொடாமல் நின்றுவிட்டது. நிகழ்வுகளாக மட்டுமே நின்றுவிட்டதில் மெய்ம்மையைத் தேடும் பயணம் ஒரு படிமமாக மாறவில்லை.

முதல் தொகுதியாக அம்புப்படுக்கையைப் பார்க்கும்போது இளம் எழுத்தாளரின் ஒரு தனித்துவமானத் தொடக்கத்தைப் பார்க்கிறேன். பின்நவீனத்துவ முயற்சிகளும், ஓயாத காம நிழல் போராட்டங்களாகவும், நலிந்தவர்களை முன்னிறுத்துவதான போலியான பாவனைகளும் மலிந்து போன இன்றைய புது எழுத்துகளிடையே மனித வாழ்வைச் சூழ்ந்திருக்கும் அடிப்படை உணர்வுகளை மையமாகக் கொண்டு எழுத வந்திருக்கிறார். சோதனை முயற்சிகளாலும் மேல்பூச்சு தளும்பல்களாலும் எழுத்தின் திசையை மாற்றாதிருக்கவும், புது திசைகளில் தனது ஆழமான பார்வையை கொண்டு நித்தியத் தேடல்களில் திளைத்திருக்கவும் இளம் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனை வாழ்த்துகிறேன்."

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை