மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?


மென்பொருள் துறை வேலையைப் பற்றி நம்மவர்களுக்குப் பொதுவான அபிப்பிராயங்கள் சிலது உண்டு. பொட்டி தட்டுவது, ஆண் பெண்கள் ஜாலியாக இருந்தபடி வேலை செய்வது, அள்ளி வாங்கும் பணத்தில் குடி, போதை என மிதமிஞ்சிய சல்லாபங்களில் ஈடுபடுவது, பிற துறைகளை அலட்சியம் செய்யும் மனப்பாங்கோடு இருப்பது என பலவிதமான கருத்துகள் உண்டு. பொதுவாகவே இவை கணினி துறை சார்ந்த வேலையில் இல்லாதவர்களின் கருத்தாக இருக்கும். பிற சேவை மையத்தொழில்கள் பற்றியும் இப்படிப்பட்ட அபிப்ராயங்களையும் இதே ஆட்கள் வைத்திருப்பதைக் காணலாம். பிபிஓ துறை பிரபலமானபோது இந்த விஷம் மேலும் அதிகமாகப் பரவி ஒரு தலைமுறையினரிடையே கணினித் துறை பற்றி மிக கீழ்த்தரமான கருத்துகள் பரவ வழிவகுத்தது. கிழக்குக்கடற்கரைச் சாலை எனும் பெயரில் கதைகளும, சினிமாக்களும் இத்துறை சார்ந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால் கீழ்த்தரமாக வசை பாடப்பட்டது. வழக்கம்போல இத்துறையில் இயங்கும் பெண்களே இவர்களின முதல் இலக்கு. இதனால் கணினித் துறையில் வேலை செய்பவர் என ஒரு அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது கவனமாக பிபிஓ அல்ல என ஒரு மறுப்பையும் சேர்த்துச் சொல்லத் தொடங்கினர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பதை ஒரு நாள் திடுக்கிட உணர்ந்தேன். என் முதல் வேலை சதர்லேண்ட் டெக்னாலஜி எனும் நிறுவனத்தில் அமைந்தது. அங்கு நான் மென்பொருள் உருவாக்கும் வேலையில் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு பிபிஓ தொழில் சார்ந்த வேலையிடம். பின்னர் வேறு பல கம்பெனிகளில் வேலை செய்திருந்தாலும், என் முதல் பணியைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் பிபிஓ துறையில் வேலை செய்யவில்லை என்பதையும் சேர்த்தே சொல்லிவந்திருக்கிறேன். அவ்வேலை மீது சமூகம் உருவாக்கிய ஒவ்வாமை ஒரு புறம் இருந்தாலும், மென்பொருள்  உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தேன் எனும் கருத்தை ஆழமாகச் சொல்வதற்காக நான் இந்த வித்தியாசத்தைப் பயன்படுத்தினேன்.

கணினித் துறையில் சில காலம் இருப்பவர்களது கவலை வேறு வகையிலானது. பெரும்பாலானோர் தாங்கள் செக்கு மாடு போல ஒரே வேலையை நேரம் காலம் பாராது செய்துவருபவர்கள் எனும் கடும் வெறுப்பு எண்ணம் கொண்டவர்கள் (இதில் உண்மை இல்லாமல் இல்லை. கடுமையான உழைப்பைக் கோரும் நேரக்கெடுபிடிக்குள் உழைப்பவர்களே இதில் பிரதானம்). பலருக்கு இந்த வேலை கிரியேட்டிவிட்டிக்கான இடம் இல்லை, மேனேஜர் சொல்வதை செய்யும் அடிமை எனும் எண்ணம் உண்டு. அதனால் இவ்வேலையிலிருந்து தப்பித்து வேறு ஒன்றை செய்ய வேண்டும் எனச் சதா துடிப்பார்கள். சிலருக்கு சொந்தத் தொழிலார்வம், சிலருக்குச் சினிமா. ஆனால் எதிலும் நிலையான வருமானம் இருக்காது என்பதை உணர்ந்தே இருப்பார்கள். அப்படி முடிவெடுத்து செயல்படுத்தத் தயங்குவதாலேயே செய்யும் வேலை மீது எரிச்சலையும் கொட்டித்தீர்த்தபடி, பொட்டி தட்டும் குமாஸ்தா எனவும் புலம்பியபடி காலத்தைக் கழிப்பார்கள்.

உண்மையில் இன்று கணினித் துறையைப் போல தினந்தோறும் சாதனைகள் நடக்கும் துறை கிட்டத்தட்ட வேறெதுவும் இல்லை. இச்சாதனைகள் எதுவும் அருப உருவத்தில் இல்லை. ஒவ்வொன்றும் கணினித் துறையில் இல்லாதவர்களின் வாழ்வைக்கூட தினப்படி மாற்றியபடி இருக்கிறது. அந்த ஒவ்வொரு சாதனைக்குப்பின்னரும் பலருடைய கற்பனையாற்றலும், மேதமைத்தனமும் விரவி உள்ளது. நான் பார்த்தவரை ஒவ்வொரு அடுக்கிலும் படைப்பாற்றல் மிதமிஞ்சி வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ள துறை இது. 

கணினி செயலிகள் மற்றும் அவற்றுக்கு இடையேயான தொடர்புச்சாதனங்கள் ஒரு நிறுவனத்தின் நரம்புமண்டலம் போன்றது (Digital Nervous System) என பில் கேட்ஸ் தனது சிந்திக்கும் வேகத்தில் வர்த்தகம் (Business at the Speed of Thought) நூலில் குறிப்பிடுகிறார். அதாவது ஒரு இடத்தில் நடக்கும் இயக்கம், மறு எல்லையில் இன்னொரு அமைப்புக்கு உடனடியாகத் தெரிவதோடு மட்டுமல்லாது, தேவையான செய்தியைப் பயனுள்ள விதத்தில் கடத்தவும் வேண்டும். நான் மென்பொருள் எழுதத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் படித்த அந்த புத்தகம் இணைக்கப்பட்ட மென்பொருள்களின் (connected systems) வடிவமைப்பின் மீது வர்த்தகக முடிவுகள் செலுத்தும் மாற்றத்தூண்டல்களைப் பற்றி புது கண்ணோட்டத்தை எனக்கு அளித்தது. ஒவ்வொரு சிறு மென்பொருள் கூட அந்த நரம்பு மண்டலத்தின் அங்கம் என எண்ணிப்பார்க்கும்போது நிறுவனத்தின் வர்த்தகத்தை ஒரு தனிச்செயலாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. நான் எழுதும் மென்பொருள் தேவைப்பட்ட செயலை சரியாகச் செய்தால் மட்டும் போதாது. புற மாற்றங்களுக்குத் தக்கவாறு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பது மிக முக்கியமானது. இது மென்பொருள் உருவாக்கத்திலும், செயலிகளை உபயோகப்படுத்தும் முறைக்கு அத்தியாவசியமான தத்துவமாகும். மென்பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்த உயிர் உண்டு. அவை புறச்சூழலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பது மிக முக்கியமான ஒன்று. இன்று மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுவோருக்கு முன்னால் இருக்கும் சிக்கல் இதுதான். அதனால் படைப்பாற்றல் அதிகமாகத் தேவைப்படும் இடமும் இதுதான்.

மென்பொருள்களும் அவற்றின் கட்டமைப்பும் நம் தோலின் உணர்வுமையங்கள் போல செயல்பட வேண்டியவை. ரத்த ஓட்டம் அல்லது உட்கட்டுமானத்தில் சிக்கல்  தோல் நிபுணருக்கு உடனடியாகத் தோலில் தெரிந்துவிடும். கண்ணைக் கட்டிக்கொண்டு பலவிதமானப் பொருட்களைத் தொடும்போது அவற்றை உணர முடிவது தொடுகை எனும் புலன் சக்தியின் நுண்மையை நமக்குக் காட்டுகிறது. அதுபோல ஒரு நிறுவனத்தில் இருக்கும் கணினி அமைப்புகள் ஒன்றை ஒன்று அறிந்துகொள்ளவும், மாற்றங்களை உடனடியாகப் பரிமாறிக்கொள்ளவும் உருவாக்கும் தகவல் தொடர்பு வழிமுறைகள் மிக நுட்பமானதாகும். 

குறிப்பாக, நம் ஒவ்வொரு புலனசைவையும் பதிவு செய்து வேறொரு வடிவில் எங்கோ தொகுக்கப்படும் இன்றைய தகவல் உலகில், மென்பொருட்கள் கிட்டத்தட்ட சிறு ரோபாட்கள் போல உருவாக்கப்படுகின்றன. கைக்கடக்கமான சாதனங்களில் மென்பொருள் கொண்டு உச்சகட்ட சாத்தியங்களைத் திறந்துவிடும் சிந்தனைச் செயலிகளை உருவாக்கிவிடமுடிகிறது. அவை நம் குழந்தைகள் போல சுற்றியிருப்பவற்றைப் பார்த்து கற்றுக்கொள்ளவும், இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்கவும் நம்மால் சொல்லித்தர முடியும். சில திட்டவட்டமான விதிகளுக்கு உட்படும்படி செயலியை எழுதமுடியும். அண்மைக்காலங்களில் தானாகக்கற்றுக்கொள்ளும் செயலிகள் (Machine language) உருவாக்கப்படுகின்றன. அவை  சிக்கலான உள்ளீடுகள் கொண்டு திட்டவட்டமான முடிவுகளை எடுப்பதோடு, பல புறக்காரணிகளையும் குறித்துக்கொண்டு சில வகைமாதிரிகளை சேர்த்துவைக்கின்றன. அடுத்த முறை இதே சிக்கலைத் தீர்க்க முனையும்போது கடந்த முறை உள்ளீட்டில் வந்த புறக்காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புது முடிவுக்குக்கூட வரமுடியும். இதுமாதிரியான தானியங்கியாகக் கற்றுக்கொள்ளுதல் அடுத்தகட்ட மென்பொருள் செயலிகளுக்கு வித்திட்டுள்ளது. 

நிரூபண அறிவியல் மென்பொருள்களிலும், அறிவியலின் தத்துவத் துறையிலும் (philosophy of science) பலவகையிலான அளவீட்டு முறைகளில் இப்படிப்பட்ட தானியங்கியாகக் கற்றுக்கொள்ளும் மென்பொருள்கள் (Neural network - Matlab) பல உள்ளன. மனிதனின் சிந்தனை முறைகளை பலவிதமான செயல்முறை தொகுப்புகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் தீர்வு கொடுப்பது இதுபோன்ற மென்பொருள்களின் முக்கியமான வேலை. அதற்குப் பல செயல்முறைகள் உள்ளன (tree, forest algorithm).

அண்மைக்கால மென்பொருளின் வளர்ச்சி பில் கேட்ஸ் சொன்னது போல ஒரு நரம்பு மண்டலத்தை ஒத்திருப்பதை பிரமிப்புடன் பார்க்கிறேன். இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்கள் ஒற்றை வரி பிரகடனங்களாக இருந்தாலும், தலைமுறைகளின் சிந்தனையைப் பாதிப்பதை நாம் பல துறைகளில் பார்க்க முடியும். கணினித்துறையும் இன்றைய டிஜிடல் யுகமும் இன்று இவற்றின் முன்னணியில் இருக்கின்றன.

சில எளிமையான உதாரணங்களைப் பார்க்கலாம்

1) நெட்ஃபிளிக்ஸ் -  இன்று நெட்ஃபிளிக்ஸ் எனும் ஊடகப்பாய்வு (media streaming) சேவையை உபயோகிக்காதவர்கள் குறைவு. திரைப்படங்கள் மட்டுமல்லாது இணையத் தொடர்களும், காணொளிகளும் இந்த ஊடகத்துக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இன்று யார் ஊடகங்களை அதிவேகமாகக் கடத்தி தடையில்லாமல் சாதனங்களில் தருகிறார்களோ அவர்களே ஜெயிக்கிறார்கள். இன்று நெட்ஃபிளிக்ஸ் முன்னணியில் இருக்கிறது. அவர்களது மென்பொருள் பரவல் வடிவமைப்பைக் (distributed achitecture)  கொண்டது.  உதாரணத்துக்கு, ஆப்பிரிக்காவில் பதிவேற்றப்படும் ஜிகாபைட் காணொளி அடுத்த அரைநொடிக்குள் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான வீடுகளை அடைந்தாகவேண்டும். இது யூடியூப் போலில்லாமல் உடனுக்குடன் அதிவேகமாகக் கடத்தப்படவேண்டும். அதற்கு அவர்கள் மிக நூதனமான மென்பொருள் இணைப்புச் சேவைகளை உருவாக்கி வருகிறார்கள். பல ஆயிரம் மென்பொருள் சேவையகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இதைச் சாத்தியமாக்குகின்றன. உதாரணத்துக்கு,  உள்ளுக்குள் குரங்காட்டம் போடும் ஒரு மென்பொருள் ஒன்றும் உண்டு. அதன் வேலை பிற மென்பொருட்களை செயலிழக்கச்செய்வதாகும். அவை செயலிழப்பதால், உள்ளே இருக்கும் சுயசெப்பனிடும் (reselient, self healing) செயலிகள் துரிதமாக வேலை செய்து புதிய மென்பொருள் செயலிகளைத் தொடங்கிவைக்கும். வயதாகும்போது ரிட்டயர்மெண்ட் கொடுத்துவிட்டு புது ஆட்களை எடுப்பது போல ஒரு சுயமாகத் திருத்தும் சேவை. புது செயலிகள் புத்துணர்ச்சியோடு வேகமாக வேலை செய்யும், தங்கள் இறப்பு அடுத்த திருப்பத்தில் காத்திருக்கிறது என அறியாமல். இன்றைக்கு இப்படிப்பட்ட சுயபிணிநீக்கிகள் மனிதன் சிந்திப்பது போல செயல்படுகின்றன.

2) ஊபர் - ஓலா மற்றும் ஊபர் டாக்ஸி மையங்கள் இன்று ஒரு தொடுகையில் வாடகை வண்டிகளை நாம் நிற்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நம் கையில் இருக்கும் சாதனம் ஒவ்வொரு நொடியும் வானில் திரியும் செயற்கைக்கோளோடு சேர்ந்து நாம் நிற்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கிறது. அதுமட்டுமல்லாது நம் ஒவ்வோர் நகர்வையும் கண்காணித்து செய்தி அனுப்பியபடி இருப்பதால் ஊபரின் மென்பொருள் இயங்கும் சேவைமையங்கள் பல லட்சக்கணக்கான செய்திகளை ஒவ்வொரு நொடியும் செரிக்கிறது. இதிலும் தானாக நம் தேவையை அறியும் அல்காரிதங்கள் உண்டு. நாம் செல்லும் வழியில் இருக்கும் இடர்பாடுகளைக் கணக்கில் கொண்டு புது வழிகளைச் சொல்லும் அறிதலும் (adaptive learning) உண்டு. இவ்வகை சேவையினால் ஆட்டோக்காரர்களிடம் செய்யும் சண்டைகள் குறைந்துள்ளதாக பொதுவாக இப்பயனாளிகள் கருதுகிறார்கள். 

மேற்சொன்ன ஒவ்வொரு மென்பொருளும் நாம் அன்றாடும் பயன்படுத்தும் கணினிகளில் நிறுவி பயன்படுத்திப்பார்க்க முடியும். அதுவே இன்று சிறிய நிறுவனங்கள் கூட இவற்றை மையமாகக் கொண்டு தங்கள் தேவைகளை பரவலாக்க வழிவகுக்கிறது.

அடுத்தப்பகுதிகளில் இவ்வகை மென்பொருள்களின் வடிவக்கட்டமைப்பு பற்றிப் பார்ப்போம்

(தொடரும்)

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை