கலையின் கதை - உலகை மாற்றிய சில ஓவியங்கள்


சென்ற மாதம் லண்டனில் உள்ள புகழ் பெற்ற பிரிட்டீஷ் ஓவியக்கூடத்தில் நவீன ஓவியங்களை அர்த்தம் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஓவியம் என் கவனத்தை முழுவதும் கவர்ந்தது . அது டேவிட் ஹாக்னி வரைந்த "My Mother" என்ற ஓவியம் (Pic-MyMother) - இதன் மூலம் நல்ல ஓவியங்களுக்கான உப்பு கார சுவைக்கான அடையாளங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். தெரியாததை தெரிந்தது வழியாக அடைய முடியாது என்பது நிச்சயமான உண்மைதான். இந்நிலையில் 'The Story of Art' by E.H.Gombrich என்ற புத்தகம் கிடைத்தது. குகை ஓவியங்களிலிருந்து இந்த நூற்றாண்டு ஓவியம் வரை விவரமாக ஆராய்ந்து விவரித்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிக்மண்ட் ஃராய்ட் போன்ற மனோத்துவ ஆராய்சியாளர்களின் பாதிப்பால் நம் செயல்,பேச்சு முதல் காலை சாப்பிடும் இட்லி,இரவு உடுத்தும் உடைகளுக்கு மனோரீதியான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டன. இதன் நீட்சியாக கலையில் பலவித மோஸ்தர்களும் இஸங்களும் உருவாக ஆரம்பித்தது.Pointillism, Impressionism,Abstract art போன்றவை உருவாயின. இவை மக்களுக்கு குழப்பத்தையே அதிகரித்தன. இந்த ஓவியங்களுக்கான அர்த்தத்தை ஓவியரின் சிறு குழு தீர்மானிக்க ஆரம்பித்தது. பார்ப்பவர்கள் தங்கள் கோணத்தை பொருத்து இந்த ஓவியங்களை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.பார்வையாளர்களின் பங்களிப்பை கோரிய இந்த குழுக்கள், அவற்றை புரிவதற்கான அடிப்படை படிப்பினையை உருவாக்க தவறியது. இதனாலேயே நவீன ஓவியங்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டது.

தற்கால ஓவியரான  தாமஸ் பெட்ரோவின் Bless Our Troops (Pic-ModernPainting) போன்ற ஓவியங்கள் உடனடியாக புரிந்துவிட்டாலும் அதிலுள்ள கிண்டலை ரசிக்க நம் காலத்தின் சரித்திரம் ஓரளவாவது தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஊடகங்கள் , புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சியால் இந்த அடிப்படை அரசியல் வெகு சுலபமாக மக்களை அடைந்தாலும் ஓவியத்தின் பின்புலத்தை ரசிக்க மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியிருக்கிறது (உ.ம்: கேலிச்சித்திரங்கள்). இடைப்பட்ட காலத்தில் கலை பலவித மாற்றங்களை அடைந்துள்ளது. இந்த மாற்றங்களை கலையின்வழியே மட்டும் புரிந்துகொள்ள முடியாது. ஆன்மீகம், அரசியல்,மனிதர்களின் வாழ்கைத்தரம்,அறிவுசார் துறைகளின் வளர்ச்சி - முக்கியமாக புகைப்படம் மற்றும் திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி - இவற்றைக்கொண்டே இந்த ஓவியங்களின் முழுமையான அறிவைப் பெறமுடியும்.

ஒரு காட்சியின் இயல்புகளை தெரிந்துகொள்வது முதல் கட்டம்.அதை அவ்வாறே நகலெடுத்து வரைவது ஓவியர்களின் உத்தி.கணிப்பொரியியலில் 'hands-on' என்று சொல்வார்கள்.இந்த பயிற்சியுள்ளவர்களே நுட்பமான கலையை படைக்க முடியும்.கடல்-நீலம், இலை-பச்சை, நாய்-நாலுகால்,குதிரை-வால்,மரம்-உயரம் போன்ற விவரணைகள் எளிதானாலும் வரையும்போது சற்றே சறுக்கும்.இந்த ஏட்டு சுரக்காய் பாலிசி இல்லாதது கலை தேடல் உள்ளவர்களுக்கு முக்கியமாக ஓவியர்களுக்கு அவசியமானது. இதனால் இலவசமாக கிடைக்கும் இயற்கை அழகு உள்ள இந்த உலகத்தை சில ஓவியர்கள் வரைவதின் அர்த்தமின்மை திடுக்கிடும்படி உரைக்கும். பல காலமாக நாம் ஓவியங்களை வரைவதும் பார்ப்பதுமாக இருப்பது எதனால்? படத்திலுள்ள இரு ஓவியங்களும்(Pic-Laucaus_Horse, Whistlejacket) பதினைந்து நூற்றாண்டுகள் வித்தியாசத்தில் வரையப்ப்ட்டவை. இந்த குதிரை படம் சொல்லும் விவரங்கள் என்ன? கால வித்தியாசங்களால் இந்த படங்கள் சொல்லும் தகவல்கள் எவ்வாறு மாறுபடுகின்றன?

ஓவியர்கள் சந்தித்த சவால்கள் , நவீன ஓவியம் கடந்து வந்த தூரம்,வரலாறு மற்றும் நாகரிகம் எய்திய பூமராங்குகளால் தடம் மாறிய ஓவியக்கலையின் பரிணாம வளர்ச்சி பற்றி புரிந்துக்கொள்வது ஓவியக்கலைக்கு தீவிரமான பின்புலனாக அமையும்.



ஓவியங்கள் எதனால் வரையப்படுகின்றன?


'பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குகை மனிதன் வரைந்த ஓவியங்களின் சிக்கல் தற்கால ஓவியங்களிலும் உள்ளது'.

கோம்ப்ரிசின் இந்த கூற்றினால் மனித மூளையின் வளர்ச்சி கேள்விக்குள்ளாகிறது. நம் மூளை இடைப்பட்ட காலங்களில் வளர்ச்சி அடையவில்லையா? இதற்கான பதில் ஒரு குகையில் கிடைத்தது.

பிரான்ஸ்-ஸ்பெய்ன் எல்லையில் இருக்கும் உள்ள குகைக்குள் ஊர்ந்துதான் செல்லமுடியும். குகையின் முடிவில் ஒருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். இந்த இடத்தில்தான் உலகத்தின் பழமையான குகை ஓவியம்(Pic-san-eland_dancing) கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஆராய்ந்தவர்கள் முடிவில் பல ஆச்சர்யங்களை எதிர்கொண்டார்கள்.அந்த குகையின் சுவற்றில் பலவிதமான மிருகங்களின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. மிருகங்களின் உடம்பில் பல புள்ளிகள் சீரான இடைவெளியில் இருந்தது. இந்த மிருகங்களின் பக்கத்தில் மனித உருவம் ஒன்றும் வரையப்பட்டிருந்தது.இதனால் இந்த புள்ளிகள் வேட்டையாடுவதின் அடையாளமாகக் கொள்ளப்பட்டது. காட்டு மிருகங்களை எதிர்கொண்ட மனிதனுக்கு இந்த குகை மறந்துகொள்ள நல்ல இடம். தற்காப்பிற்காக குகைகுள் நுழைந்த மனிதன் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தது ஏன்? ஒரு துறையின் கேள்விகளுக்கு வேறு துறையில் பதில் இருந்தது.

1998 இல் பிரான்ஸின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முக்கியமான ஆவணங்களில் இந்த கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கப்பட்டது.(http://www.mazzaroth.com/ChapterOne/LascauxCave.htm).

வில்ஹெல்ம் ப்லீக் என்ற ஜெர்மனிய மொழியாய்வாளர் சான் என்ற அழிந்துகொண்டிருந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறையை ஆராய்ந்தவர்.இவர் சான் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள் பற்றி 12,000 பக்கங்கள் தொகுத்தார். இதன் மூலம் இவர் சில முடிவுகளை கண்டடைந்தார்.சான் போன்ற ஆதிகால குழுவினரிடமும் ,ஆஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கும் சில வினோத சடங்குகளும் , தந்திர பழக்கங்களும் இருந்தன.அதனால் குகை ஓவியங்கள் வேட்டையாடுவதின் குறீயீடு இல்லை.

'சான்' மக்களின் சடங்குகள்


சான் குழுவின் இன்றியமையாத தலைவனாக இருந்தது மருத்துவ மனிதன். இந்த மனிதனுக்கு இயற்கையை மீறிய அதீத சக்தி இருப்பதாக சான் மக்கள் நம்பினர்.  இந்த சடங்கில் நெருப்பைசுற்றி சான் பெண்கள் சத்தமிட ஒருவித மயக்க நிலையில் தன் மாய சக்தியால் மற்றொரு உலகத்திற்கு மருத்துவன் செல்வான். மிருகங்களின் வீரியத்தை அடையும் பொருட்டு தன் உடம்பிலிருந்து விலகி கூடுவிட்டு கூடு பாய்வான். அந்நிலையில் பலவித மிருகங்களிடம் தொடர்பு ஏற்படும்.'இலாண்ட்' (Pic- Eland.) என்ற காட்டுமிருகத்திடம் எல்லாவற்றையும்விட அதிக சக்தியுள்ளதாக இம்மக்கள் நம்பினார்கள்.

மருத்துவனிடம் இலாண்டை வசியம் செய்யும் சக்தியிருந்தது. இலாண்டை கொன்ற உடனே கலஹாரி சான் மருத்துவன் அதை சுற்றி நடனமாட ஆரம்பிப்பான். இந்த நடனத்தின் அதீத பரவச நிலையில் மருத்துவன் இலாண்டின் சக்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தன் குழு மக்களின் வியாதிகளை குணப்படுத்துவான்.

லூயி வில்லியம்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் இந்த பழக்கங்களை ஆராய்ந்து குகை ஓவியங்களின் அர்த்தங்களுக்கு படம் வரைந்து பாகங்களை குறித்தார். மருத்துவனும் இலாண்டும் இறக்கும் தருவாயை இந்த படம் குறிப்பிடுகிறது.(Pic-san-eland_dancing, man-eland). மன மயக்க நிலையில் இருவரும் ஆவி உலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். வெள்ளை புள்ளிகள் இலாண்டின் உடம்பிலிருந்து நடனமாடும் ம்ருத்துவனை அடைகிறது - இது சக்தி இடம் மாறுவதைக் குறிக்கிறது.இந்த சக்தியே சான் இனக்குழுவின் ஆரோக்கியம் மற்றும் வீரியத்திற்கு விதை. இதை வரைந்தவர்களில் மருத்துவர்களும் இருந்தனர்.இந்நிலையை மனதில் கொண்டு மருத்துவன் வரைந்த ஓவியங்களே இந்த குகை ஓவியங்கள்.

வில்லியம்ஸின் ஆராய்ச்சிபடி சான் குழுவினரிடம் இதைப்போல மனித உலகையும் மிருகம் மற்றும் ஆவி உலகத்தை இணைக்கும் குறீயீடுகள் பல உள்ளன. இவை மிக சிக்கலான பல உருவகங்களை கொண்டதால் நமக்கு வேறு விதமான அர்த்தங்களையும் விளக்கக் கூடும். இவ்வோவியங்கள் பல தலைமுறைகளாக வரையப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஓவியத்திலுள்ளும் வேறு படங்களும் (superrimposition) உள்ளதால் பாலிம்செஸ்ட் (palimpsest) ஓவியங்களாகயும் இவை கருதப்படுகின்றன.முக்கியமாக, தலைமுறையகளாக வரைவதால் இந்த ஓவியங்களின் முழு அர்த்தத்தையும் குறியீடுகளின் சிக்கல்களையும் முழுவதும் புரிந்துகொள்ள முடியாது என்பதே வில்லியம்ஸின் முடிவு.

இந்த சடங்குகள் உருவாக்கிய குறியீடுகள் செய்த மாயங்கள் பல. குழுபரம்பரையின் தொடர்ச்சியை தக்கவைக்க பல குழுக்களுடன் சண்டையிட்டதால் வெவ்வேறு இடங்களைக் கைப்பற்றினர். சிதறிய குழுக்களுக்கும் வழிவழியாக வாழ்ந்த குழுக்களுக்கும் இது முக்கியமான வித்தியாசம். சமகாலத்தில் தங்களுடன் வாழ்ந்த குழூஉறுப்பினர்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கும் பிற்கால சந்ததியினருக்கும் புரியும்படியான குறியீடாகயும் இந்த ஓவியங்கள் உருவாயின.தகவல் பரிமாற்றமே இந்த ஓவியங்களுக்கு முதல் பயன். இதன் மூலம் காலத்தையும்(குலத்தொடர்ச்சி) வென்றார்கள். இந்த முக்கியத்துவத்தை உணர்ந்த குழுக்களே செழித்தனர்.

பிற்கால ஓவியங்களின் சிக்கல்

ஓவியக்கலையின் வரலாற்றிற்கு கார்ல் மார்க்ஸின் தத்துவம் எடுபடாது.ஏனென்றால் , பலவித சிக்கல்களை சமாளித்து உயிரோட்டமுள்ள அழகான ஓவியங்களை வரைவது தான் ஓவியர்களின் முதல் கனவாக இருந்தது. தான் கண்டு பரவசப்பட்ட அதே காட்சிகளை பிறரும் ரசிக்கும்வண்ணம் வரைவதில் பல சவால்களை ஓவியர்கள் எதிர்கொண்டார்கள். இச்சவால்களின் போராட்டமும் பதில்களுமே ஓவியக்கலையில் வரலாறாக இருந்துவந்திருக்கிறது.

பதினைந்தாயிரம் ஆண்டுகளின் மனித வளர்ச்சியில் கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகதான் ஓவியங்கள் வெகுவான மாறுதல்களை அடைந்துள்ளது. குகை மனிதர்களுக்குக் பிறகு ஆசியா மற்றும் எகிப்தில் ஓவியக்கலை மிகுந்த வளர்ச்சியைக் கண்டது.

எகிப்தின் ஓவியங்கள்

ஆயிரவருட இடைவேளியில் வரையப்பட்ட இரு எகிப்திய ஓவியங்கள் இங்குள்ளது(Pic-Valley_Of_Kings,Valley_Of_Queen). இந்த ஓவியங்களிளுள்ள பொருட்களின் அளவுகளில் வித்தியாசங்கள் குறைவு. முகங்களும் ஒரேபோல இருக்கும். எகிப்தின் மூவாயிரவருட கலாச்சாரத்தில் ஓவியகலை சிறிதளவே மாறியது. நவீன , இத்தாலிய ஓவியங்களுக்கு பழக்கபட்டவர்கள் எகிப்திய ஓவியங்களை பார்க்குபோது முதலில் தோன்றும் சில அடிப்படைத்தன்மைகள் சில பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும். எகிப்திய ஓவியம் பக்கவாட்டில் மட்டுமே வரையப்பட்டுள்ளது. எந்த ஓவியத்திலும் உயிரோட்டமுள்ள நகர்வுகள் தெரியாது. பொருட்களனைத்தும் சீரான அளவுகோளிலே இருக்கும். தலை,கால்கள் பக்கவாட்டில் இருந்தாலும் , உடம்பின் மற்ற அங்கங்கள் நேராக இருக்கும் (விரல்கள் தெரியாது!).தசைகள், மற்றும் நரம்புகள் எதுவும் தெரியாது.

பொதுவாக மனித உடம்பு சமச்சீரான அளவுகோளையே கொண்டுள்ளது. ஆனாலும் இந்த ஓவியங்களில் நரம்பு,தசை, கை கால் விரல்கள் அரிதாகவே காணப்படும்.
மேலும் நம் உடம்பின் வலது மற்றும் இடது பகுதிகளில் வித்தியாசங்கள் அவ்வளவாக இருப்பதில்லை. இந்த சமன்பாட்டை மனதில் கொண்ட எகிப்தியர்கள் எளிதாக (minimal representation) மனித உருவங்களை பக்கவாட்டில் வரைந்தார்கள். இந்த ஓவியங்கள் அனைத்திலும் முகவடிவங்களைக் கொண்டு ஒருவனைக் கண்டுபிடிக்க முடியாது. அரசர்களுக்கும் சாமானியர்களுக்கும் ஒரே உருவ அமைப்புதான். அவர்கள் அணிந்துள்ள ஆடைகள் மற்றும் சில குறியீடுகளாலும்தான் ஒருவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். பழைய எகிப்திய மொழியான ஹைரோக்லைஃக்ஸ் (hieroglphics) என்ற குறியீட்டு மொழியால் உருவாக்கப்பட்டது. ஓவியங்களின் பொருள் இந்த மொழியில் எழுதப்பட்டிருக்கும்.

ஆய்வாளர்களை குழப்பியது இந்த ஓவியங்களிளுள்ள பொருட்களின் சம அளவு. மூவாயிரம் ஆண்டுகளாக எகிப்தியர்கள் ஒரே மாதிரியான ஓவியங்களையும் சிற்பங்களையுமே வரைந்து கொண்டிருந்தார்கள். அஸ்வான் என்ற எகிப்திய நகரத்தில் பாதி முடிந்த அளவிலிருந்த கோவிலில் இதன் அர்த்தம் கண்டுபிடிக்கப் பட்டது. இக்கோவிலின் சுவற்றில் பல ஓவியங்கள் முடிக்கப்படாமல் பாதி நிலையில் இருந்தது. எகிப்தியர்கள் கணித முறையில் குறுக்கும் நெடுக்குமாக 19 கட்டங்கள் வரைந்து அதன் மேல் ஓவியங்களை வரைந்தார்கள். இந்த கட்டங்களில் ஓவியத்தின் அமைப்புகள் அதன் அளவுகளின் விகிதம் விளக்கமாக இருந்தது.இந்த விகிதத்திலேயே எல்லா எகிப்திய ஓவியங்களும் பல நூற்றாண்டுகளாக வரையப்பட்டது தெரியவந்துள்ளது.

கணித விதிகளைக்கொண்டு வரையப்பட்ட எகிப்திய ஓவியங்களில் உயிரோட்டமும் நகர்வுகளும் இல்லாதது ஆச்சர்யமில்லை. பலவித ஓவியங்களையும் சிற்பங்களையும் வரைந்த எகிப்தியர்கள் ஜடத்தன்மை ஒருவித சிக்கலாக இருந்திருக்கலாம். இதனால் மூவாயிரமாண்டு நாகரீகமுள்ள எகிப்த் மற்றும் மெசபடோமியா ஓவியங்களில் ஓர் மலர்ச்சி நிலை உருவாகவில்லை. கிரேக்க ஓவியர்கள் இதற்கு ஒரு முடிவு கொண்டுவந்தார்கள்.

கிரேக்கர்களின் மறுமலர்ச்சி இயக்கம்

எகிப்தியர்கள் கணித சூத்திரத்தின் மூலம் வரைந்தார்கள். கிரேக்கர்களின் காலத்தில்தான் கண்களால் ஓவியங்கள் வரையப்பட்டது. ஓவிய வரலாற்றின் முதல் திருப்புமுனை இந்த காலகட்டத்தில்தான் ஆரம்பித்தது. கிரேக்கர்கள் ஓவியம் , சிற்பக்கலை, துன்பியல் நாடகம் ஆகிய பல துறைகளில் எழுச்சி மிகுந்த நூறாண்டுகளை கண்டார்கள். பல்முனை வளர்ச்சி கண்ட கிரேக்கர்கள் புதுமுயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கிரேக்கர்கள் வாழ்வில் சில புதுமையான சமூக மாற்றங்கள் ஏற்ப்பட்டன. கிரேக்கர்களின் கலை எகிப்திய நாகரிகத்தின் தொடர்ச்சி. ஆனால் மக்களின் சுதந்திரமும் ஆர்வமும் பன்மடங்கு உயர்ந்தது. கலை , விளையாட்டு , நடிகர்கள் ஓவியங்களும் சிற்பங்களும் வரையப்பட்டன. ஓவியர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் மக்களிடையே செல்வாக்கு உண்டானது.

கிரேக்கர்கள் முற்றிலும் எகிப்திய வழிகளை கைவிடாமல் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொண்டார்கள். முதலில் ஜடத்தன்மையை தங்கள் ஓவியம் மற்றும் சிற்பத்தில் முற்றிலும் நிராகரித்தனர். இதனால் பலவித சாத்தியக்கூறுகள் உருவாயின. உயிரோட்டமான ஓவியங்களும் ஒளிமயமான முகங்களும் நடனமாடத் தொடங்கின. கிரேக்கர்ளின் அறிவுசார் குருவான சாக்ரடீஸின் கூற்றுப்படி 'கிரேக்கர்கள் கண்களைக் பார்த்து தங்கள் ஆன்மாவால் வரைய வேண்டும்' - ஒவ்வொரு ஓவியமும் இயற்கையின் வடிவாக வளர்ந்தன.இதன் நீட்சியாக பல விளையாட்டு வீரர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. 'தட்டுஎறியும் (Discus throwing)' (Pic-Discobolous) போன்ற போட்டிகளில் வீரர்கள் எடுக்கும் ஒவ்வொரு அசைவும் வடிவமைக்கப்பட்டு கிரேக்கர்களின் பல ஊர்களில் வைக்கப்பட்டது. இந்த வடிவங்களைக் கொண்டு வீரர்கள் பயிற்சியெடுத்தார்கள்.

எகிப்திய ஓவியங்களின் தொடர்ச்சியே கிரேக்கர்களின் அடிப்படை ஓவிய பாடத்தின் சித்தாந்தமானது.எகிப்திய ஓவியங்களின் பல அம்சங்கள் இந்த கிரேக்க அமைப்புகளிலும் இருக்கும் . இந்த வீரரின் உருவம் பக்கவாட்டில் உள்ளது.இது எகிப்திய ஓவியத்தின் மிக முக்கியமான அம்சமாகும். பக்கவாட்டில் இருந்தாலும் கால், கை உடம்பின் அங்கங்கள் முழுவதுமாக உள்ளது. சற்றே வளைந்திருப்பதால் இந்த சிற்பம் தரும் நகர்வுத்தன்மை தெளிவாகயுள்ளது. தசை மற்றும் நரம்புகள் தெளிவாகத் தெரிவதால் இந்த வீரர் உயிருடன் நிற்பதுபோல காட்சிதருகிறது.

இதுவரை சான் மக்களும் எகிப்தியர்களும் தங்களுக்கு கற்பனையில் தோன்றியபடி வரைந்து கொண்டிருந்தனர். கிரேக்கர்கள் தங்கள் 'பார்தெனான்' (Parthenan) என்ற கோயிலில் பலவிதமான சிற்பங்களை கலை நயத்துடனும் பார்ப்பவர்கள் நம்பும்படியான தெளிவான தோற்றத்துடன் வடிவமைத்தார்கள்.பிற்காலத்தில் 'இயற்கையாக உள்ளது உள்ளபடி' வரையும் யுத்தி இங்கிருந்துதான் தோன்றியது.

ஓவியத்தின் தன்மைக்கென்று பல விதிகளை வகுத்தது கிரேக்கர்கள்தான். அவர்களின் ஓவியம் , சிற்பம்,கோயில் மற்றும் அரண்மனை வடிவங்களுக்கு பல விதிகளை நியமித்தார்கள். இவை எழுதப்படாத விதிகள்.ஆனால் ஒவ்வொரு கலையிலும் இவை வியாபித்திருந்தன.இந்த விதிகளின்படி ஓவியங்கள் உயிரோட்டமாக வரையப்பட்டன.ஓவியத்தின் ஒவ்வொரு பொருளும் அழகின் உச்சகட்டமாக இருத்தல் அவசியமாயிற்று.ஓவியங்களிலுள்ள பொருட்கள் சமமான இடைவேளியில் இருக்க வேண்டும். இது ஓவியத்தின் சமனிலையைக் குறித்தது. ஓவியத்திலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் எடையுள்ளது.இது காலத்தினாலும் சில குறியீடுகளாலும் கணக்கிடப்படுகின்றன.

ஓவியத்தின் சமன்பாடு (balance) , எடை(weight) மிக முக்கியமான விதியாகும். கிரேக்கர்கள் தங்கள் ஓவியங்கள் இரட்டை பரிமாணத்தில் இருந்தாலும் முப்பரிமாண விவரணைகளை வரைய முயற்சித்தனர். இது கிரெக்கர்கள் சந்தித்த முதல் இடர்பாடு. முப்பரிமாண ஓவியங்கள் எகிப்தியர் நினைத்திராத ஒன்று. அதனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலிருந்தது.இயற்கை காட்சிகள் இயல்பிலேயே முப்பரிணாமத்தைக் கொண்டது. அதை இரட்டை பரிமாணத்தில் வரைவதற்கான கணித சூட்சமங்களை கிரேக்கர்கள் உருவாக்கத் தொடங்கினர்.

கிரேக்க நாகரீகத்தில் இருநூறு வருடங்களிளேயே ஓவியர்கள் தங்களின் தாய் சமூகமான எகிப்திலிருந்து மிகுந்த தூரம் வந்துவிட்டனர்.இதற்கு கிரேக்க மக்களின் கணித மற்றும் தத்துவ அறிவு உறுதுணையாக இருந்த்து. இந்த பரிமாண விதியை ,கிரேக்கர்களின் கணித அறிவு வளர ஆரம்பித்த காலகட்டத்தில் இந்த குழப்பத்தை தத்துவமேதை ஆர்கிமெடீஸ் சுலபமாக தீர்த்து வைத்தார். முப்பரிமாணத்தில் பொருட்களின் அளவை மற்றவற்றின் சார்பில் சிறிய அளவில் வரைந்து தூரத்தை நிலைநாட்டினர்.இதனால் பலவித வடிவங்களும் , கிரேக்க புராணங்களின் வெளிப்படும் ஓவியங்களாக தீட்டப்பட்டன.தூரத்திலுள்ள காட்சிகளை சிறியதாக்கியதால் இந்த ஓவியங்களின் பார்வையாளர்களின் ஓவிய நிலைப்பாட்டின் கோணத்தை மாற்றியது. . இது ஓவிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனை கொண்ட வளர்ச்சி கட்டம்.ஓவியங்களை இடதிலிருந்து வலமாக பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு அதன் பூடகத்தன்மையும் மெய் நிலையும் ஒருசேர்ந்து கொண்ட நம்பகத்தன்மையுடன் முப்பரிமாண காட்சியாக மாறியது.

இதே நேரத்தில் கிரேட் என்ற கிரேக்க நகரத்தில் பல புதிய முயற்சிகளில் சிற்பிகள் இயங்க ஆரம்பித்தனர். இன்றைக்கு இவர்களின் பெயர்கள் தெரியாதுபோனாலும் கிரேக்க நாடு முழுவதும் இவர்களின் காலத்திலேயே இம்முயற்சிகள் பரவ ஆரம்பித்தது.ஏதென்ஸ் நகரில் இக்கலையியல் பூதாகார புரட்சியை அடைந்தது.இவ்வளர்ச்சி ஏறக்குறைய 500 BC ஆரம்பித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.இந்த வளர்ச்சி ஏற்பட்டபின்தான் நம் தற்கால கலாசாரங்களில் பிண்ணியிருக்கும் கடவுள் உருவங்கள் தோன்றி புதிய சிற்பங்களும் ஓவியங்களும் வரையப்பட்டு ஜடத்தன்மையை முற்றிலும் தகர்த்தெடுக்க ஆரம்பித்தது.இதன் தொடர்ச்சியாக ஓவியங்கள் ஓர் குறிப்பிட்ட கட்டடைப்பிற்குள் அடைக்காமல் இயற்கையிலுள்ளது போல தீட்ட ஆரம்பித்தனர். எகிப்தியர்கள் தங்களின் மூதாதையர் வழிவகுத்ததை பிந்தொடர, கிரேக்கர்கள் தங்களின் கண்களால் வரைய ஆரம்பித்தனர்.இந்த சுதந்திர மனப்போக்கு கலையில் மிகப்பெரிய மாறுதலைக் கொண்டுவந்தது.

ஒலிம்பியா, ஏதென்ஸ்,டெல்பி போன்ற நகரங்களில் முதன்மை கட்டடக்கலைஞர்கள் மிகப் பிரம்மாண்ட கோயில்களை கட்ட ஆரம்பித்தனர்.மனித வளர்ச்சியின் முக்கிய வெற்றியாக இந்த கட்டடங்கள் உருவகப்படுத்தப்பட்டது. இந்த கட்டடங்களின் தங்களின் கிரெக்க கடவுள்களின் சிலைகள் மற்றும் புராண கால பாத்திரங்களும் வளமவர ஆரம்பித்தன. முக்கியமாக ஹோமரின் காவியத்திலிருந்து அகிலிஸ்,அஜாக்ஸ் செஸ் விளையாடும் பெரிய சிலை வடிவமக்கப்பட்டது. நம் காலத்தில் திருவள்ளுவர்,கண்ணகி சிலைகளின் உருவகங்களும் ஆளுமைகளுடன் இந்நிகழ்ச்சிகளை தொடர்ப்புபடுத்த முடியும்.

அறிவு சார்ந்த கலை, அரசியல் நிகழ்வுகள் குடிமக்களின் பார்வை மற்றும் கலைஞர்களின் மதிப்பும் மிக உச்சத்திலிருந்தது. நாட்டின் முன்னேற்றத்தின் வடிவங்களாக கருதப்பட்ட இந்த கலைவளர்ச்சி தேக்க நிலையை அடையவேயில்லை.சில சிலைகள் எங்கே மூச்சுவிடுமோ என்று எண்ணக்கூடிய நிஜத்தின் பிரதிபளிப்பாகவேஇருந்தது.ஹெலனிஸ்டிக் யுகம் வரை இந்த மாயங்களால் மக்கள் கட்டுண்டுகிடந்தார்கள்.

இவ்வாறு பிற்காலத்தில் வரையப்பட 'avant-garde' ஓவியங்கள்வரை ஒவ்வொரு ஓவியமும் முன்னொரு காலத்தில் கிரேக்க,எகிப்திய ஓவியங்களின் பரிமாணங்களை தொடர் சங்கிலியாக தொக்கி நிற்கின்றன.



இந்த கட்டுரை எழுத உதவிய தளங்கள்

1. http://www.mazzaroth.com/ChapterOne/LascauxCave.htm
2. http://www.amazon.com/Story-Art-E-H-Gombrich/dp/0714832472 - 'The Story of Art' by E.H.Gombrich
3.http://www.mazoo.co.uk/
4.http://www.nationalgallery.org.uk/cgi-bin/WebObjects.dll/CollectionPublisher.woa/wa/work?workNumber=NG6569
5.http://historylink101.net/egypt_1/pic_wall_paintings_1.htm

Comments

Popular posts from this blog

உணர்ச்சிகளின் மதகு - புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்'

உறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை

காமப்புதுமணம் - ராமாயண அகலிகை